Last Updated : 26 May, 2017 09:53 AM

 

Published : 26 May 2017 09:53 AM
Last Updated : 26 May 2017 09:53 AM

ஒளிரும் நட்சத்திரம்: விஷால்

1. ஆகஸ்ட் 29-ம் தேதி 1977-ல் ஜி. கிருஷ்ணா ரெட்டி – ஜானகி தேவி தம்பதியின் இரண்டாவது மகனாகச் சென்னையில் பிறந்து வளர்ந்தவர் விஷால். சக மனிதர்கள், சக கலைஞர்கள் மீது பரிவும் மரியாதையும் கொண்டவர். விலங்குகள் மீதும் மிகவும் அன்பு கொண்டவர். சிறுவயதிலிருந்து வளர்த்துவந்த ஜூலி என்ற நாய் இறந்தபோது கதறி அழுதிருக்கிறார் விஷால். பிரபல நடிகராக ஆனது முதல் தனது பிறந்தநாளை ஆதரவற்றவர்களுடன் கொண்டாடிவருகிறார்.

2. விஷாலின் தந்தைக்கு கிரானைட் விற்பனை மற்றும் ஏற்றுமதி முக்கியத் தொழில். எம்.ஜி.ஆர்., என்.டி.ஆர். ஆகிய இருவருக்கும் தீவிர ரசிகர். சினிமா மீது அவருக்கு இருந்த ஈடுபாட்டால் திரைப்படத் தயாரிப்பில் இறங்கினார். அதன் தொடர்ச்சியாக இளைய மகன் விஷாலைக் கதாநாயகன் ஆக்க விரும்பினார். அப்போது அவரது மனைவி “மூத்த பிள்ளையை நடிகனாக்குங்கள். அவன் நல்ல வெள்ளையாக இருக்கிறான்” என்று கூற “ரஜினி, விஜயகாந்த், முரளியெல்லாம் கறுப்புதானே” என்று ஜி.கே ரெட்டி கூறினாலும், மனைவியின் வார்த்தைகளை மதித்து விக்ரம் கிருஷ்ணாவை முதலில் நடிக்க வைத்தார்.

பின்னர் விக்ரம் கிருஷ்ணாவே, “தம்பிதான் சிறந்த நடிகனா வருவான். அவனையே ட்ரை பண்ணுங்க” என்று சொல்லிவிட்டார். அதன் பிறகு விஷாலை நடிக்க அழைத்தபோது “விஸ்காம் படிச்சது. நான் இயக்குநர் ஆகிறதுக்கு” என்று கூற விஷாலின் தந்தைக்கு ஏமாற்றம். இருப்பினும் மகனின் விருப்பத்தை நிறைவேற்றக் குடும்ப நண்பரான அர்ஜுனிடம் உதவி இயக்குநராகச் சேர்த்துவிட்டார்.

3. உதவி இயக்குநர்களை மிகவும் நேசிப்பவர் விஷால். ‘வேதம்’ என்ற ஒரேயொரு படத்தில் அர்ஜுனிடம் உதவி இயக்குநராக வேலை செய்தார். பத்து உதவி இயக்குநர்களுடன் ஒரே அறையில் தங்கி, அவர்களது சாப்பாட்டையே சாப்பிட்டிருக்கிறார். வேதம் படப்பிடிப்பு முடிந்ததும் விஷாலின் அப்பாவைச் சந்தித்த அர்ஜுன் “உங்க மகன் மிகச் சிறந்த நடிகனாக வருவான், அவனை டெஸ்ட் ஷூட் செய்திருக்கிறேன் பாருங்கள்” என்று வீடியோவைக் காட்ட விஷாலின் தந்தைக்கு ஆச்சரியம் ஏற்படவில்லை. சிறு வயதில் தனது அண்ணனுடன் சேர்ந்து டி. ராஜேந்தரின் பஞ்ச் வசனங்களைப் பேசி நடித்துக்காட்டுவாராம் விஷால். அர்ஜுனின் டெஸ்ட் ஷூட் பற்றிக் கேள்விப்பட்ட தயாரிப்பாளர்கள் வி. ஞானவேல், ஜெயபிரகாஷ் இருவரும் விஷாலை வைத்து ‘செல்லமே’ படத்தைத் தயாரித்து நாயகனாக அறிமுகப்படுத்தினார்கள். முதல் படமே மிகப் பெரிய வெற்றி.

4. எந்தக் காரியத்தை எடுத்தாலும் அதில் ஜெயிக்கும்வரை விடக் கூடாது என்ற மன உறுதி கொண்டவர் விஷால். “கிரானைட் ஏற்றுமதி ஆர்டர்களைப் பிடிப்பதற்காக ஆண்டுக்கு நான்கு முறை அமெரிக்கா செல்வேன். அப்போதெல்லாம் ‘உதவிக்கு ஆள் இல்லாமல் போகாதீங்க டாடி’ என்று கூறி எனது லக்கேஜ்களைத் தூக்கிக்கொண்டு என்னுடன் கிளம்பிவிடுவான் விஷால். மிகவும் தரமான ஆங்கிலத்தில் பேசுவான். அமெரிக்கர்களிடம் அவர்களது உச்சரிப்பில் பேசி அவர்களை ஆச்சரியப்படுத்துவான். ஒருமுறை அமெரிக்கா சென்றிருந்தபோது நியூயார்க்கில் இருந்தோம். அவன் கனெக்டிக்கட் மாநிலத்தில் உள்ள ஸ்டேம்போர்ட் நகரத்தில் ஒரு வியாபாரியிடம் பேசிவிட்டு என்னையும் அழைத்தான்.

“அவ்வளவு தூரம் ரயிலில் போக வேண்டும், ஆர்டர் கிடைக்காவிட்டால் எல்லாம் வீணாகப்போய்விடும்” என்று மறுத்தேன். ‘வருவதாக வாக்குக் கொடுத்துவிட்டேன், போகாவிட்டால் பெயர் கெட்டுவிடும்” என்று கூறி என்னை வலுக்கட்டாயமாக இழுத்துச்சென்றான். அந்த வியாபாரி என் மகனின் திறமையை மதித்து 20 ஆயிரம் டன் ஆர்டர் கொடுத்தார். இது 12 கோடி ரூபாய் மதிப்புள்ளது. அந்த அளவுக்குத் தொழில் சிரத்தையும் பக்தியும் கொண்டவன் விஷால். ஆனால் பூஜை அறைக்கு வர மாட்டான்.

‘கஷ்டப்படுகிறவர்களிடம்தான் கடவுள் இருக்கிறார், நம் வீட்டின் பூஜை அறையிலோ கோயிலிலோ அல்ல’ என்பான். எழும்பூர் டான்போஸ்கோ பள்ளியில் படித்தபோது தமிழில் அதிக மார்க் எடுத்தவன். தமிழை ஒழுங்காகப் பேச வேண்டும், தென்னிந்திய மொழிகளில் இதுதான் சிறந்த மொழி என்பான். வீட்டில் தெலுங்கில் பேச அவனுக்குப் பிடிக்காது” என்று நெகிழ்ந்துபோகிறார் விஷாலின் தந்தை.

5. தேர்தலும் அதில் வெல்வதும் விஷாலுக்குப் புதிது கிடையாது. லயோலா கல்லூரியில் ‘விஸ்காம்’ படித்தபோது விஷாலுக்கு எல்லாத் துறை மாணவர்களுடனும் நல்ல நட்பு இருந்தது. அப்போது உதயநிதி ஸ்டாலின் கிளாஸ்மேட். கல்லூரி மாணவர் பேரவைத் தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட முடியாத நிலை உருவானபோது, விஷால் இருக்கும் தைரியத்தில் 7-ம் வகுப்புமுதல் விஷாலின் நெருங்கிய நண்பராக இருந்துவரும் வெங்கட் போட்டியிட முன்வந்தார்.

அவருக்காக உதயநிதியுடன் இணைந்து இரவுபகலாக வேலை செய்து அவரை ஜெயிக்க வைத்திருக்கிறார். இன்றுவரை வெங்கட், உதயநிதி ஸ்டாலின், கார்த்திக், பிரவீன் ஆகிய நான்கு பேர் விஷாலின் நெருங்கிய நண்பர்களாகத் தொடர்கிறார்கள். தவிர, தான் படித்த லயோலா கல்லூரியில் தனது படங்களின் பூஜை, இசை வெளியீடு, நடிகர் சங்கத்தின் பொதுக் குழுக் கூட்டம் ஆகியவற்றை நடத்தி கல்லூரிக்கும் தனக்குமான செண்டிமெண்ட்டைத் தொடர்ந்து வெளிப்படுத்திவருகிறார்.

6. பள்ளிக்காலத்தில் கூடைப்பந்தில் பெயரெடுத்த விஷால், பின்னர் கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டினார். விஷாலின் சினிமா வாழ்க்கையில் அவரது நட்பு வட்டத்தைப் பலப்படுத்தியது நட்சத்திர கிரிக்கெட் போட்டி. தமிழ்த் திரையுலகத்துக்காக 'சென்னை ரைனோஸ்' அணிக்குத் தலைமையேற்று விளையாடிய விஷால், அந்த அணியில் இடம்பெற்ற ஆர்யா, விக்ராந்த், ஜெயம் ரவி, ஜீவா, விஷ்ணு விஷால், ரமணா உள்ளிட்ட இளம் நாயகர்களுடன் இணைந்து கோலிவுட்டைக் கதாநாயகர்களின் நட்புலகமாக மாற்றினார்.

நட்பை கிரிக்கெட்டுடன் முடித்துக்கொள்ளாத விஷால், தனது ‘பாண்டிய நாடு’ படத்தில் விக்ராந்துக்கு முக்கியக் கதாபாத்திரம் கொடுத்து நடிக்க வைத்தார். விஷ்ணு விஷால் நடித்த 'ஜீவா' படத்தை நண்பன் ஆர்யாவுடன் இணைந்து தயாரித்து விநியோகம் செய்தார். விஷாலின் உதவும் மனப்பான்மை அவரது நண்பர்களின் எண்ணிக்கையைத் திரையுலகில் அதிகமாக்க, ‘பாண்டவர் அணி’அமைத்து நடிகர் சங்கச் செயலாளராக வென்றார்.

7. ஐந்து படங்களில் கதாநாயகனாக நடித்த பிறகும் நடிகர் சங்கத்தில் சேர்வதற்கான தனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதிலிருந்து தொடங்கியது விஷாலின் போராட்டம். நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினர்களிடம் இளம் நடிகர்களுக்கு ஆதரவு இருக்காது என்ற மாயையை விஷாலின் பாண்டவர் அணி தகர்த்தெறிந்தது. நடிகர் சங்கத்தின் நிலத்தை மீட்டு, அதில் கட்டிடம் கட்ட நட்சத்திர கிரிக்கெட் நடத்தி நிதிதிரட்டிய விஷால், கட்டுமானம் தொடங்கத் தேவைப்படும் முதல் கட்ட நிதியின் ஒரு பகுதியை நன்கொடையாகத் தருவதற்காக நடிகர் கார்த்தியுடன் இணைந்து பிரபுதேவா இயக்கத்தில் 'கருப்பு ராஜா வெள்ளை ராஜா' என்ற படத்தில் நடித்துவருகிறார்.

8. ‘சண்டைக்கோழி’ விஷாலை ஆக்‌ஷன் நாயகனாக நிலைநிறுத்திய படம். எத்தனை பெரிய ஆக்‌ஷன் ஹீரோவாக இருந்தாலும் நிஜ வாழ்வில் அநியாயத்துக்கு எதிராகப் பொங்குபவர்கள் மிகக் குறைவு. தமிழ் சினிமாவுக்கு தண்ணிகாட்டும் திருட்டு வீடியோவுக்கு எதிராகக் குரல்கொடுப்பதுடன் நின்றுவிடாமல் தெருவில் சண்டைக்கோழியாக இறங்கி, திருடர்களைக் கையும் களவுமாகப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்து நிஜ ஹீரோயிசம் காட்டியவர்.

தனக்கு வரும் மிரட்டல்களைக் கொஞ்சம்கூடச் சட்டைசெய்யாத விஷால், தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து நீக்கப்பட்டபோது நீதிமன்றம் சென்று வாதாடி தனது நீக்கத்தை ரத்துசெய்யவைத்தார். தற்போது தயாரிப்பாளர் சங்கத் தலைவராக ஜெயித்திருக்கும் விஷாலின் இலக்குகள், திருட்டு வீடியோவை நிரந்தமாக ஒழிப்பது, திரையரங்க டிக்கெட் விநியோகத்தை ஆன்லைன் ஆக்குவது, தயாரிப்பாளர் சங்கத்துக்காகத் தனித் தொலைக்காட்சி தொடங்குவது ஆகியவை.

9. தனது அம்மாவின் பெயரில் ‘அறக்கட்டளை' தொடங்கி ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவிகள் செய்துவரும் விஷால், நலிந்த கலைஞர்கள், விவசாயிகள் ஆகியோருக்குத் தன்னால் முடிந்தவரை உதவிகள் செய்துவருகிறார்.

10. விஷாலுக்கு இயக்குநர் அவதாரம் எடுக்கும் எண்ணமும் உண்டு. ‘ நேரம் அமையும்போது நானே எனது கதையை இயக்குவேன்’ என்று கூறியிருக்கும் இவர், நட்புக்காக மோகன்லால் நாயகனாக நடிக்கும் மலையாளப் படத்தில் வில்லனாக நடிக்கச் சம்மதித்திருக்கிறார்.

நண்பரின் பார்வையில் விஷால்

விஷாலை ‘மச்சான்’ என்று அழைத்து நெருக்கம் காட்டும் அவரது திரையுல நண்பர் ஆர்யா. விஷால் பற்றிப் பகிர்ந்துகொண்டபோது…

“‘அவன் இவன்’ படத்துக்காக எந்த நடிகருமே எடுக்கத் தயங்கும் ஆபத்தான முயற்சியில் விஷால் ஈடுபட்டார். மாறுகண் கதாபாத்திரத்துக்காக அவன் பட்ட கஷ்டத்தை அருகிலிருந்து பார்த்தவன் நான். அந்தப் படத்தில் மாறுகண் நடிப்பு மட்டுமல்ல; மாறுகண் கொண்ட ஒருவரால் நவரசங்களையும் வெளிப்படுத்திக் காட்ட முடியும் என்பதை அவன் தனது கதாபாத்திரத்தின் மூலம் அவ்வளவு தத்ரூபமாக நடித்து நிரூபித்துக் காட்டினான். அதற்காக அவனுக்குத் தேசிய விருது கிடைத்திருக்க வேண்டும். கிடைக்காததில் எனக்கு வருத்தம் இருக்கிறது. அவனது வளர்ச்சிக்கும் அவனது போராட்ட குணத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அவன் இன்னும் பல உயரங்களை அடைவான். நல்லதைப் பற்றி மட்டுமே சிந்திப்பவன் அவன். அவனோடு நாங்கள் என்றும் தோள் கொடுத்து நிற்போம்.”

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x