Last Updated : 23 Jun, 2017 10:37 AM

 

Published : 23 Jun 2017 10:37 AM
Last Updated : 23 Jun 2017 10:37 AM

ஒளிரும் நட்சத்திரம்: நாசர்

1. தமிழ் சினிமாவில் அரிதாரம் அற்ற அரிதான கலைஞர்களில் முக்கியமானவர் ம.நாசர். கதாபாத்திரத்தின் குண இயல்புகளை ஆழமாக உள்வாங்கி, அதை அளவான, இயல்பான உணர்ச்சிகளாக வெளிப்படுத்தி ‘நடிப்புக்கொரு நாசர்’ என்று பெயர் பெற்றவர். 05.03.1958-ல் சென்னையை அடுத்த செங்கல்பட்டு அருகேயுள்ள மேலேரிப்பாக்கம் என்ற கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்ட, மகபூப் பாட்ஷா- மும்தாஜ் பேகம் தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர்.

2. கிராமத்திலிருந்து செங்கல்பட்டு நகருக்குக் குடிபெயர்ந்த நாசரின் பெற்றோர், அங்கிருந்த புனித மேரிஸ் தொடக்கப்பள்ளி, பின்னர் புனித ஜோசப் உயர்நிலைப்பள்ளி ஆகியவற்றில் அவரைப் படிக்க வைத்தனர். சாமி உருவங்களை ஒப்பனையாகத் தரித்துக்கொண்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கும் பிரம்மாண்டமான செங்கல்பட்டு தசரா பண்டிகையின் கலைத் தன்மையும் அந்த நகரில் புகழ்பெற்று விளங்கிய பல நாடகக் குழுக்களும் நாசரைச் சிறுவயதிலேயே பாதித்தன.

அப்பாவின் விருப்பத்தின் பேரில் உள்ளூர் நாடகக் குழுக்களின் நாடகங்களில் சிறுவன் வேடங்களில் நடித்தார் நாசர். பின்னர், உயர்நிலைப்பள்ளியில் படித்தபோது பள்ளி ஆண்டுவிழா நாடகங்களில் நடித்தார். அதற்குப் பிறகு ரகுபதி வாத்தியார் (கவிஞர் லீனா மணிமேகலையின் அப்பா) நடத்திய பல நாடகங்களில் நடிக்க அவரால் விரும்பித் தேர்வுசெய்யப்பட்ட இளம் நாடக நடிகராக இருந்தார் நாசர். ஆனால் ஒரு நடிகனாக வேண்டும் என்று நாசர் அப்போது நினைக்கவில்லை.

3. பள்ளிப்பருவம் முடிந்து சென்னை தாம்பரத்தில் இருந்த கிறிஸ்தவக் கல்லூரியில் பி.யூ.சி முடித்தபின் இந்திய விமானப்படையில் சேர்ந்து சிலகாலம் பணிபுரிந்தார். ஆனால் நாசரின் அப்பாவுக்கோ மகனை நடிகனாக்கிப் பார்க்க வேண்டும் என்ற ஆசை. இதனால் விமானப்படை வேலையை விட்டுவிட்டு வரும்படி அப்பா வற்புறுத்த, அதை ஏற்று வேலையையும் விட்டுவிட்டு வந்த மகனை தமிழ்நாடு அரசின் திரைப்படக் கல்லூரியின் நடிப்புப் பிரிவில் பிடிவாதமாகச் சேர்த்துவிட்டார்.

பின்னர் தென்னிந்திய வர்த்தக சபை நடத்தி வந்த நடிப்புப் பள்ளியிலும் பயிற்சிபெற்றபின் நாடகங்களில் நடித்துக்கொண்டே திரை வாய்ப்புகளைத் தேடிக்கொண்டிருந்தபோது, சக திரைப்படக் கல்லூரி மாணவரும் நாசரின் நண்பருமான யூகி சேது இயக்கிய ‘கவிதை பாட நேரமில்லை’ படத்தில் நாயகனாக ஒப்பந்தமாகி நடிக்கத் தொடங்கினார். ஆனால் அதன்பிறகு ஒப்பந்தமான கே.பாலசந்தரின் ‘கல்யாண அகதிகள்’ (1985) படம் முந்திக்கொண்டது.

4. வில்லன், நாயகன், குணச்சித்திரம் என 400 படங்களைத் தாண்டிவிட்ட நாசர், ‘ஆவாரம் பூ’ படத்துக்காகச் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார். சிறந்த வில்லன் நடிகர் விருது, சிறந்த துணை நடிகருக்கான விருது, தமிழக அரசின் கலைமாமணி, ஆந்திர அரசின் நந்தி விருது, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கலைச் செல்வன் விருது என இவரால் கவுரவம் பெற்ற விருதுகள் ஏராளம். ஆனால் “ மக்கள் தரும் அங்கீகாரமே எல்லாவற்றையும்விட சிறந்த விருது” எனக் கூறும் நாசர் சினிமாவில் ஈட்டிய பொருளை ‘அவதாரம்’, ‘தேவதை’, ‘மாயன்’ போன்ற நேர்த்தியான படங்களை எடுக்க முதலீடு செய்தவர்.

5. நாசர் இயக்கிய ‘மாயன்’, பின்னர் ‘இம்சை அரசன்’,`உத்தம வில்லன்’ ‘பாகுபலி’ என்று சரித்திரக் கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கும்போது அதில் நாடகக் கலையின் நினைவுகளால் கிளறப்பட்டு உணர்ச்சிகளையும் பிரம்மாண்டமாக வெளிப்படுத்தி நடிப்பதில் நாசருக்கு இணை யாருமில்லை என்பதை நிரூபித்து வருகிறார். அந்த வகையில் தமிழ் சினிமாவைச் சோதனைக் களமாகக் கையாள்வதில் தொடர் விருப்பம் கொண்ட கமல் ஹாசனின் விருப்பத்துக்கும் நம்பிக்கைக்கும் உரிய நடிகராக இருக்கிறார். கமலுடன் ‘தேவர் மகன்’ படத்தில் நடித்ததையே பிரம்மாண்ட அனுபவமாக நினைவு கூர்கிறார் நாசர்.

6. அழிந்து வரும் மரபுக் கலைகளை எப்படியாவது மீட்டுவிடமுடியாதா என்று ஏங்குபவர் நாசர். கடந்த ஆண்டு கூத்துக் கலை நிகழ, அந்த எளிய கலைஞர்கள் காப்பியக் கதாபாத்திர வேடத்தில் மணமக்களை வாழ்த்த, ஒரு நண்பரின் திருமணத்தை நடத்தி வைத்திருக்கிறார்.

7. பல திரைக்கதைகளை எழுதிவைத்திருக்கிறார் நாசர். தற்போது 'பிணை’ என்ற முழுநீள மாற்றுச் சினிமா ஒன்றுக்கு வசனம் எழுதிக்கொண்டிருக்கிறார். அது வீரப்பனின் வாழ்க்கையை வேறு கோணத்தில் அணுகும் படம்.

8. உணவுக் கட்டுப்பாடு என்ற பெயரில் உடம்பை வருத்திக்கொள்ள விரும்பமாட்டார். ஆனால் எண்ணெயில் பொறித்த உணவுகளைத் தொடவே மாட்டார். நாசரின் காலை உணவு இட்லி, தோசை. கோடைக் காலம் முழுவதும் கம்பு, கேழ்வரகுக் கூழ். சின்ன வெங்காயத்தைக் கடித்துக்கொண்டே கூழ் சாப்பிடுவது அவருக்கு மிகவும் பிடிக்கும்.

9. ஜிம் சென்று உடற்பயிற்சி செய்யாத நடிகர்களில் நாசரும் ஒருவர். காலை 5 மணிக்கு எழுந்து 30 நிமிடம் யோகா, 10 நிமிடம் மூச்சுப் பயிற்சி, பின் 45 நிமிடம் நடைப்பயிற்சி. இவற்றோடு வீட்டு வேலைகளையும் பகிர்ந்துகொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார் நாசர். நடைப் பயிற்சிக்கு புறப்படும் முன் சமையல் அறையில் இருக்கும் பாத்திரங்களைக் கழுவி அடுக்கி வைப்பது.

வீட்டைத் துடைப்பது, காரைக் கழுவுதல், தோட்டத்தில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் விடுதல் ஆகியவற்றில் ஈடுபடுவார். அதில் கச்சிதமும் ஒழுங்கும் இருக்கும். இப்படி வீட்டு வேலைகள் செய்யும் நாட்களில் யோகா செய்யமாட்டார். `வீட்டில் உள்ள வேலைகளில் ஈடுபாட்டுடன் மனதைச் செலுத்தி ஈடுபட்டால் அதுவே யோகாவுக்கு இணையானது’ என்பது நாசரின் பார்வை.

10. தற்போது ஆங்கிலப் படங்களில் நடிக்க அழைக்கப்பட்டிருக்கும் நாசர், ஒரு திரை நடிகராகக் கடந்து சென்றுவிடாமல், நாடக எழுத்து, திரை எழுத்து, இலக்கியம், ஓவியம், சிற்பம், நடிப்புப் பயிற்சி அளிப்பது ஆகியவற்றிலும் தனித்துத் தன்னை அடையாளப்படுத்திவருகிறார்.



நண்பரின் பார்வையில் நாசர்

திரைப்படக் கல்லூரியில் நாசர் நடிப்பைப் பயின்றபோது யூகி சேது அங்கே இயக்கம் பயின்றார். யூகி சேதுவின் திரைப்படப் படிப்புக்கான டிப்ளமோ படத்தில் தொடங்கி, அவரது எல்லாப் படங்களிலும் நாசர் இருப்பார். உயிர் நண்பரைப் பற்றி யூகி சேதுவின் பகிர்வு இது

“எல்லோரும் படிப்பைப் படிக்கப் பள்ளிக்கூடம் சென்றால், நாசர் அதைவிட நடிப்பைப் படிக்கச் செல்லாத கல்லூரியே கிடையாது.

கணையாழி, ழ, கசடதபற, புதுமைப்பித்தன், லா.சா.ரா. என்றெல்லாம் என்னதான் படித்தாலும் ந.முத்துசாமியின் கூத்துப்பட்டறையில் நடிப்பைப் பயில்வதில் அவருக்கு ஆர்வம்.

திரைப்படக் கல்லூரியில் நடிப்பைப் படித்து முடித்து வெளியே வந்த பலரில் இயக்குநர் கே.ஆர்., நாசரை மட்டும் தேர்ந்தெடுத்து முன் பணமாக உடனே ரூ.1000/-ஐ கொடுத்து புக் செய்தார். அதுதான் சினிமாவுக்காக நாசர் வாங்கிய முதல் அட்வான்ஸ். பிறகு நாசரை ‘ஈரமான ரோஜாவே’ படத்தில் அவர் நடிக்க அழைத்த தருணத்தில் நாசர் ஐம்பது படங்களைத் தாண்டியிருந்தார். ‘ஏன் நாசரை மட்டும் தேர்ந்தெடுத்தீர்கள்?’ என்று கேட்டேன். ‘அந்த ஃபேஸ் அந்த நோஸ்’ என்றார். நடிக்கத் தொடங்கும் முன்னரே நாசருக்கு, சிறந்த நடிகரின் தோற்றம் அமைந்துவிட்டது. அந்த நாசிக்காக, நாசிக்கில் அச்சடித்த பல லட்சம் ரூபாயை சம்பாதித்த நாசரை, ‘நாசீ’ர் என்றுகூட அழைக்கலாம். மிக அமைதியான, வெகுளித்தனமான, குழந்தையைப் போல எதைக் கண்டாலும் ஆச்சரியம்,. ஆர்வம் உள்ளவராகப் பார்த்திருக்கிறேன். ஒரே நாளில், ஒரே பாய்ச்சலில் எல்லாம் பேசும் சமூக ஆர்வலராக, இலக்கியவாதியாக, மாறியதையும் பார்த்திருக்கிறேன். நேற்று வரை மாணவன், இன்று மின்னல் வேகத்தில் வாத்தியார்.

நாசரின் தந்தை செங்கல்பட்டில் எத்தனையோ பேருக்குத் தங்கத்தை அழகுபடுத்திக் கொடுத்திருக்கலாம், ஆனால் அவர் பெற்ற வைரம்தான் நாசர் எனும் மாஸ்டர் பீஸ்”

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x