Last Updated : 19 May, 2017 10:33 AM

 

Published : 19 May 2017 10:33 AM
Last Updated : 19 May 2017 10:33 AM

ஒளிரும் நட்சத்திரம்: த்ரிஷா

1. ‘நம்ம சென்னை பொண்ணு’ எனக் கொண்டாடப்படும் த்ரிஷா, நடிக்க வந்து 15 ஆண்டுகள் முடிந்துவிட்டன. 15 வயதில் மூன்று வயதுச் சிறுவனுக்கு அம்மாவாக, அனைத்து இந்திய மொழிகளிலும் தயாரிக்கப்பட்ட ஹார்லிக்ஸ் விளம்பரத்தில் 1998-ல் நடித்தார்.

2. 1999-ல் ‘ஜோடி’ தமிழ்ப் படத்தில் சிம்ரனின் தோழியாகச் சில காட்சிகளில் வந்துபோனார். பிறகு, 2000-வது ஆண்டில் ‘மிஸ் சென்னை’யாகவும் 2001-ல் ‘மிஸ் இந்தியா பியூட்டிஃபுல் ஸ்மைல்’ஆகவும் தேர்வு செய்யப்பட்டார். அழகிப் பட்டங்கள் தந்த புகழ் வெளிச்சத்தால், குஜராத்தின் புகழ்பெற்ற பெண் இசையமைப்பாளரும் பாடகியுமான ஃபால்குனார் பதக்கிடமிருந்து த்ரிஷாவுக்கு அழைப்பு வந்தது. அவர் இசையமைத்த ‘மேரி சூனரு உத் உத் ஜாயே’(Meri Chunar Udd Udd Jaye) என்ற இந்தி பாப் பாடலின் மியூசிக் வீடியோவில் ஓவியத்திலிருந்து இறங்கிவரும் தமயந்தியாக நடித்தார்.

3. அந்த மியூசிக் வீடியோவைக் கண்ட ப்ரியதர்ஷன் ‘லேசா லேசா’ படத்தில் கதாநாயகியாக த்ரிஷாவை ஒப்பந்தம் செய்தார். ஆனால், த்ரிஷா இரண்டாவதாக ஒப்புக்கொண்ட ‘மௌனம் பேசியதே’ அவரது முதல் படமாக வெளியாகி முந்திக்கொண்டது. ‘லேசா லேசா’ படத்துக்காக ஊட்டியில் அமைக்கப்பட்டிருந்த பண்ணை வீடு செட்டில் 45 நாட்கள் தொடர்ச்சியாகப் படப்பிடிப்பு நடக்க இருந்தது. கார்ப்பரேட் நிறுவனமொன்றில் உயர் நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றிவந்த த்ரிஷாவின் அம்மா, தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு, மகளுடன் படப்பிடிப்புக்குச் சென்று தங்கினார். சினிமாவுக்காக மகளின் பெயரை மாற்ற முடியாது என்று மறுத்துவிட்டதில் தொடங்கி, அன்றுமுதல் இன்றுவரை த்ரிஷாவின் கால்ஷீட் உள்ளிட்ட திரையுலக விவகாரங்களைக் கவனித்துவருகிறார் த்ரிஷா அம்மாவான உமா கிருஷ்ணன்.

4. விக்ரம், கமல் உட்படப் பலரும், ‘நீங்களும் நடிக்க வாருங்கள்’ என்று அழைத்தபோது “வீட்டுக்கு ஒரு நட்சத்திரம் போதும்” என்று மறுத்துவிட்ட உமா, மகளின் வற்புறுத்தலுக்காக பாஸ்மதி அரிசி விளம்பரம் ஒன்றில் த்ரிஷாவின் அம்மாவாகவே தோன்றியிருக்கிறார். த்ரிஷாவுக்கு சினிமா வாய்ப்பு வந்தபோது ‘கூடவே கூடாது’ என்று அடியோடு மறுத்தவர் அம்மா. “சினிமா வாய்ப்பு எல்லோரையும் தேடி வருவதில்லை” என்று ஆதரித்தவர் அப்பா. த்ரிஷா அப்பாவின் செல்லம். ஹோட்டல் நிர்வாகத் துறையிலிருந்த அப்பாவுக்கு ஹைதராபாத், மும்பையில் உலகத் தரத்தில் ரெஸ்டாரெண்ட் வைத்துக்கொடுக்க வேண்டும் என்பது த்ரிஷாவின் கனவாக இருந்தது. ஆனால், அந்தக் கனவை நிறைவேற்ற முடியவில்லை. சில ஆண்டுகளுக்கு முன் கிருஷ்ணன் காலமாகி விட்டார்.

5. நயன்தாரா உள்ளிட்ட போட்டிக் கதாநாயகிகள், கதாநாயகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகிய அனைவருடனும் நெருங்கிப் பழகி நட்புப் பாராட்டும் த்ரிஷாவுக்கு, கமல் மீது தனிப்பட்ட மரியாதை இருக்கிறது. ‘தூங்காவனம்’ படத்தில் டூப் இல்லாமல் சண்டைக் காட்சியில் நடிக்க வைத்து, “இது உனக்கு 50-வது படம். இரவல் குரல் இல்லாமல் இனி நீயே உன் கதாபாத்திரங்களுக்குப் பேசு” என்று என்னை முதலில் டப்பிங் பேசவைத்தது அவர்தான். அவர் தந்த தன்னம்பிக்கைதான் இன்று ‘நாயகி’, ‘கர்ஜனை’ போன்ற ஆக்‌ஷன் கதாநாயகி கதாபாத்திரங்களில் நடிக்க எனக்கு ஊக்கம்” கொடுத்தது” என்கிறார் த்ரிஷா.

6. பள்ளிக் காலத்தில் தன் அம்மாவின் அம்மாவான சாரதா பாட்டியிடம் வளர்ந்தவர் த்ரிஷா. அவரை ‘டார்லிங்’ என்று அழைப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். இன்றும் தன் பள்ளித் தோழிகளுடன் நெருக்கமாக இருக்கிறார். அவர்களில் ஒருவர் ஹேமா. த்ரிஷாவுக்குத் தன் பாட்டியைப் போலவே கிரகித்துக்கொள்ளும் சக்தி அதிகம். வசனங்களை மனப்பாடம் செய்யாமல் ஒருமுறை சொல்லிக்கொடுப்பதை வைத்தே பேசிவிடுவார். எந்த மொழியில் நடித்தாலும் இதுவரை கதாபாத்திரத்துக்காகத் தன்னைத் தயார் செய்துகொண்டு அவர் நடித்ததில்லை. கதை சொல்லும்போது கேரக்டர் பற்றிக் கேட்டுக்கொள்வதோடு சரி.

7. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள செனடாப் சாலையை மதியச் சாப்பாட்டு வேளையில் நீங்கள் கடந்துசென்றால் எந்த வீட்டின் வாசலில் பத்துக்கும் அதிகமான தெரு நாய்கள் உற்சாகமாகச் சாப்பிட்டுக்கொண்டு இருக்கின்றனவோ அதுதான் த்ரிஷாவின் வீடு. வெளிநாட்டு நாய்களை வாங்கி வளர்க்க வசதியிருந்தும் தெரு நாய்களைத் தத்தெடுத்து வளர்ப்பதையும், “உள்ளூர் சூழ்நிலைக்கு ஏற்ற நாய்களையே தத்தெடுத்துக்கொள்ளுங்கள்” என்று பிரசாரம் செய்வதையும் வழக்கமாக வைத்திருக்கும் த்ரிஷாவிடம் தெரிவித்தால், காணாமல்போன செல்ல நாய்களைக் கண்டுபிடிக்க உதவுகிறார்.

8. மலையாள ரசிகர்கள் த்ரிஷாவை ‘ஜெஸ்ஸி’ என்றே அழைக்கிறார்கள். அந்த அளவுக்கு அங்கே அவர் பிரபலம். இதுவரை மலையாளப் படங்களில் நடிக்காமல் இருந்த அவர், பலமுறை தேசிய விருது வென்ற மலையாள இயக்குநர் ஷியாமாபிரசாத் இயக்கத்தில் நிவின் பாலி ஜோடியாக முதல் முறையாக மலையாளப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்.

9. ஆண்டின் 90 நாட்களைப் பல நாடுகளுக்கும் பயணம் செய்வதற்காகவே ஒதுக்கிவிடுகிறார் த்ரிஷா. முன்பெல்லாம் தன் அம்மாவுடன் சுற்றுலா செல்லும் அவர், தற்போது தனியாகப் பயணம் செய்கிறார். நியூயார்க், மியாமி, ப்ளோரிடா ஆகிய இடங்களுக்கு மீண்டும் மீண்டும் செல்ல விரும்புவார். எந்த நாட்டுக்குச் சென்றாலும் அந்த நாட்டின் பிரபலமான உணவை விரும்பி உண்ணும் த்ரிஷா, அங்கே இந்திய உணவைத் தேட மாட்டார்.

10. சென்னை பள்ளிகள் அளவில் நீச்சல் வீராங்கனையாகத் திகழ்ந்த த்ரிஷா, பல வகை ‘டைவிங்’ முறைகளை அறிந்தவர். தினசரி நீச்சலடிப்பதை முக்கிய உடற்பயிற்சியாக வைத்திருக்கிறார். தற்போது சாகசங்கள் செய்ய வேண்டும் என்பதில் ஆர்வம் அதிகரித்திருக்கிறது. ஸ்கூபா டைவிங் கற்றுக்கொள்ள 15 நாட்கள் பயிற்சி வகுப்புக்காக மொரிஷியஸ் நாட்டுக்குச் சென்று வந்திருக்கிறார்.

தோழியின் பார்வையில் த்ரிஷா

சென்னை அண்ணா சாலையில் உள்ள சர்ச் பார்க் பள்ளியில் தொடங்கி எத்திராஜ் கல்லூரியில் பி.பி.ஏ. இளங்கலை வரை ஒரே வகுப்பில் படித்து த்ரிஷாவின் நெருங்கிய தோழியாக இருக்கிறார் ஹேமா. தற்போது மார்க்கெட்டிங் துறையில் இருக்கும் ஹேமாவிடம் த்ரிஷாவைப் பற்றிக் கேட்டபோது…

முதல் வகுப்பிலிருந்தே நானும் அவளும் தோழிகள். பள்ளியின் பேண்ட் இசைக் குழுவில் இருந்தோம். 8-ம் வகுப்பு முடித்தபோது பள்ளியின் விளையாட்டு தினத்துக்கு அன்றைய முதல்வர், பள்ளியின் முன்னாள் மாணவி ஜெயலலிதா சிறப்பு விருந்தினராக வந்தார். அப்போது த்ரிஷாதான் அவருக்குப் பூங்கொத்து கொடுத்து வரவேற்றாள்.

நட்புக்கு அதிக மதிப்புக் கொடுப்பவள். சென்னையில் இருந்தால் எனது பிறந்தநாளுக்கு நள்ளிரவு 12 மணிக்கு கேக்குடன் வீட்டின் கதவைத் தட்டுவாள். அவளுடைய வாழ்த்துதான் எனக்கு இன்றுவரை முதல் வாழ்த்தாக இருக்கிறது.

ஐந்தாம் வகுப்பு படித்தபோது ஒரு சம்பவம். பள்ளி முடிந்து அருகிலிருக்கும் வீட்டுக்கு நாங்கள் நடந்தே செல்வோம். அப்போது தெருவில் அநாதையாக நிற்கும் நாய்க்குட்டிகளை வீட்டுக்குத் தூக்கிக்கொண்டு வந்துவிடுவாள். ஒருமுறை புறா ஒன்று சிறகில் அடிபட்டுப் பறக்க முடியாமல் கிடந்தது. அதைத் தூக்கிவந்து சிகிச்சை அளித்து காயம் ஆறியதும் பறக்கவிட்டாள். நாய்களைத் தத்தெடுத்து வளர்த்தாலும் அவற்றை அடைத்து வைக்கமாட்டாள். சுதந்திரத்தை நேசிப்பவள் த்ரிஷா. மற்றவர்களுக்கும் அதே சுதந்திரத்தைத் தருபவள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x