Published : 14 Apr 2017 12:15 PM
Last Updated : 14 Apr 2017 12:15 PM

ஒளிரும் நட்சத்திரம்: கமல்

1. இந்திய சினிமாவில் முன்னணி நடிகராகப் புகழ்பெற்ற அனைவரும் அதன் அனைத்துத் துறைகளிலும் விற்பன்னர்களாக இருந்ததில்லை. ‘auteur’ என்று குறிக்கப் படும் வெகுசில சகலகலா இந்தியர்களில் தமிழகத்துக்கு பெருமை சேர்க்கும் திரைக் கலைஞர் கமல் ஹாசன்.

2. சர்வதேசப் பத்திரிகையான டைம்ஸ், ‘1923-ல் இருந்து தயாரிக்கப்பட்ட தலைசிறந்த 100 திரைப்படங்கள்’ என்ற பட்டியலை வெளியிட்டது. அதில் இந்தியாவிலிருந்து இடம்பெற்ற ஒரே தமிழ்ப் படம், மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்து 1987-ல் வெளியான ‘நாயகன்’.

3. கதாபாத்திரத்துக்கான திரை நடிப்பை மிகையின்றி வெளிப்படுத்துவதில் முன்னோடி. உலகம் முழுவதும் சிறந்த நடிப்புமுறையாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் ‘மெத்தட் ஆக்டிங்’ முறையிலும் கைதேர்ந்தவர் என மதிப்பிடப் படுகிறார். நாடக அனுபவம் இருந்தாலும் நடிப்பை வலிந்து கற்றுக்கொள்ளாமலேயே அதன் ‘இலக்கண’மாகியதில் இன்று தமிழ் சினிமாவில் யதார்த்த நடிப்பு முறை பெருகியிருக்கிறது.

4. ‘திரையுலகின் தீர்க்கதரிசி’ என்று வர்ணிக்கப்படும் கமல், “பிலிம் சுருளின் இடத்தை டிஜிட்டல் எடுத்துக்கொள்ளும்; சினிமா ஒளிப்பதிவின் எதிர்காலம் அதுதான்” என்று 15 ஆண்டுகளுக்கு முன் கூறினார். டிஜிட்டல் கேமரா வந்தபோது அதைப் பயன்படுத்தி முதலில் படமெடுத்ததும் அவரே. இன்று தமிழ் சினிமா ஒளிப்பதிவில் பிலிம் சுருள் இல்லை.

5. கமல் மிகச் சிறந்த வாசகர் மற்றும் ரசிகர். அவரது வீட்டில் யாரிடமும் இல்லாத உலக சினிமா படங்களின் தொகுப்பு, உலகின் புகழ்பெற்ற புத்தகங்களின் சேகரிப்பு ஆகியவற்றை ஒரு நூலகமாகப் பாதுகாத்து வருகிறார். வரலாறு, தொழில்நுட்பம், உலக இலக்கியம் ஆகியவற்றை அதிக விருப்பத்துடன் வாசிக்கும் கமல், வாசிப்பின்போது குறிப்பு எடுத்துக்கொள்வார்.

6. சிறந்த நடிகர் என்ற பாராட்டுரையைக் காட்டிலும் சிறந்த திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர் என்பதில் அதிக நம்பிக்கை கொண்டவர். எழுதிக்கொண்டிருக்கும் திரைக்கதையின் பிரதியைப் படப்பிடிப்புக்குச் செல்லும் முதல்நாள் வரையிலும் திருத்தி எழுதிக்கொண்டிருப்பதில் அலாதி விருப்பம் கொண்டவர். திருத்தப்பட்ட பிரதிகளை உடனுக்குடன் தனது உதவியாளர்கள், நெருங்கி நண்பர் களுக்கு மின்னஞ்சலில் அனுப்பிப் படிக்கச் சொல்வார். எதிர்க் கருத்துகளை காதுகொடுத்துக் கேட்டு, சரியென்றால் ஏற்றுக்கொள்வார்.

7. படக் குழுவைப் பிழிந்து வேலை வாங்குவது கமலுக்குப் பிடிக்காது. தனது படக் குழுவைச் சேர்ந்த அனைவரும் தேவையான அளவு தூங்கி ஓய்வு எடுக்க வலியுறுத்துவார். அவரும் தூக்கத்தைக் கெடுத்துக்கொள்ளமாட்டார். கதைக்குத் தேவையிருந்தால்தவிர இரவு நேர படப்பிடிப்பு நடத்துவது அவருக்குப் பிடிக்காது.

8. நடிப்பு, வாசிப்பு, எழுத்து, படம் பார்ப்பது ஆகியவற்றை நேசிப்பதுபோலவே ஜிம் மாஸ்டர்கள் உதவியுடன் தினசரி உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். கமல் உணவுப் பிரியர் அல்ல. வெளிநாடுகளில் படப்பிடிப்பு என்றால் காரைப் பயன்படுத்தாமல் அருகிலுள்ள பல இடங்களுக்கும் குழந்தையைப் போல் வேடிக்கை பார்த்தபடி நடந்து செல்வதில் விருப்பம் கொண்டவர்.

9. பால், பால் பொருட்களைக் கடந்த 25 ஆண்டுகளாகச் சாப்பிடுவதில்லை. பிளாக் டீ பிடிக்கும். வீட்டுக்கு வரும் நண்பர்களுக்குப் பரிமாற வெளிநாடுகளிலிருந்து சிறந்த தேயிலை வாங்கிவருவார். உரையாடல் உணவுவேளை வரை நீண்டுவிட்டால், வந்த நண்பர்களை வற்புறுத்தி அவர்களுடன் உணவருந்துவார்.

10. சென்னை ஆழ்வார்பேட்டை சந்திப்பில் உள்ள வீடு மற்றும் அலுவலகத்தில் வசித்துவந்த கமல், தற்போது கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள நீலாங்கரையில் வீடு கட்டி அங்கே வசித்துவருகிறார். நாய், பூனை என செல்லப் பிராணிகள், பறவைகள் மீது கமலுக்கு அதிக அன்பு உண்டு. தனது செல்லப் பெண் நாய் ஒன்றுக்கு ‘சிங்காரி’ எனப் பெயர் சூட்டி அழைக்கிறார்.

நண்பரின் பார்வையில் கமல்

கமலின் நெருக்கமான நட்புவட்டத்தில் இருப்பவர் எழுத்தாளர் இரா. முருகன். அவரிடம் கமலைப் பற்றி கேட்டதும் கொட்ட ஆரம்பித்தார். அதிலிருந்து கொஞ்சம்…

“கமலிடம் நான் ஆச்சரியப்படும் இரண்டு அம்சங்கள். அவரது அசாதாரண நகைச்சுவை உணர்வு. அவரது உயர்தரமான தமிழ். சமீபத்தில் அவரது வீட்டில் தீவிபத்து ஏற்பட்டது. உடனே நான் போன் செய்து “என்ன சார் இது? ஒன்று மாடியிலிருந்து குதிக்கிறீர்கள், அல்லது நெருப்புக்குள்ளிருந்து வெளிப்படுகிறீர்கள்?” என்றேன். எனது கேள்வியில் கவலை இருப்பதைக் கண்டுகொண்ட கமல், “தனியா இருக்கிறது எவ்வளவு நன்மை பாருங்க. யாரைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம்; அவ்வளவு தீக்கு இடையில, நான் பாட்டுக்கு மூணாவது மாடியிலேர்ந்து கடகடன்னு இறங்கி அழகா ஓடி வந்துட்டேன் பாருங்க” என்று `தடால்’ நகைச்சுவையுடன் பதில் அளித்தார்.

கமலின் தமிழ் மிக உயர்தரமானது என்பதற்கு அவரது கவிதைகள் மட்டுமல்ல; அவரது தமிழ் ட்வீட்களும் சாட்சி. மிகக் குறைவான சொற்களில் புரியும்படியான இறுக்கத்துடன் சொல்லக்கூடியவர். ஏன் இவ்வளவு வார்த்தைச் சிக்கனம் என்று கேட்டபோது “மாத்திரை மாதிரி சின்னதாக இருந்தால்தான் சட்டென்று உள்ளே போகும்” என்றார். அதுதான் கமல். கமலின் சொந்த ஊரான பரமக்குடி அருகேதான் கான் சாகிப் மருதநாயகத்தின் சொந்த ஊரான பனக்குடி இருக்கிறது. மருதநாயகம், மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த மர்மயோகி - இந்த இரண்டு கதாபாத்திரங்களையும் கமலைத் தவிர வேறு யாரும் செய்யமுடியாது என்பது என் தனிப்பட்ட கருத்து.

- தொகுப்பு: ஜெயந்தன்

(அடுத்த வாரம்: ரஜினிகாந்த்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x