Published : 13 May 2016 12:12 PM
Last Updated : 13 May 2016 12:12 PM

எழுத்து... ஒளி... கதை சொல்லல்... - ஒளிப்பதிவாளர் செழியன் நேர்காணல்

இயக்குநர் பாலாஜி சக்திவேலின் ‘கல்லூரி’ திரைப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானவர் செழியன். தமிழில் நல்ல சினிமாவுக்காக தொடர்ந்து எழுதியும் பங்காற்றியும் வருபவர். இவர் எழுதிய ‘உலக சினிமா’ நூல் வரிசை புகழ்பெற்றது. புதிய இயக்குநர்கள், புதிய கதைக் களங்களில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக அர்ப்பணிப்புடன் இயங்கிவரும் இவர், ராஜூ முருகன் இயக்கத்தில் விரைவில் வெளியாகவிருக்கும் ‘ஜோக்கர்’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ‘தி இந்து’ தமிழ் நாளிதழுக்காக அவருடன் உரையாடியதிலிருந்து…

ஒளிப்பதிவாளரான நீங்கள், சிறுகதை எழுத்தாளர், ஓவியர், புகைப்படக் கலைஞர், மேற்கத்திய இசையைக் கற்றறிந்தவர்… சினிமாவைக் கையாள்வதற்கும் இந்தத் திறன்களுக்கும் என்ன தொடர்பு?

சினிமா மீதான ஈர்ப்புதான் எல்லாவற்றுக்கும் அடிப்படை. சின்ன வயதிலிருந்து அந்த ஆர்வம் இருந்துவந்திருக்கிறது. அப்பா, அம்மா இருவரும் பள்ளி ஆசிரியர்கள். வகுப்பில் நல்ல மதிப்பெண் பெறும் மாணவனாகவே இருந்தேன். பாடப் புத்தகங்களைப் படிப்பது மட்டுமே போதாது என்பதை அம்மாவும் அப்பாவும் சொல்லியபடி இருந்தார்கள். இப்படித்தான் இலக்கிய ஆர்வம் ஏற்பட்டது.

நான் வசித்த சிவகங்கையில் அன்னம் பதிப்பகம் இருந்தது. சுந்தர ராமசாமி, வண்ணநிலவன், விக்ரமாதித்யன், சுஜாதா, கி.ராஜநாராயணன் எனப் பெரிய எழுத்தாளர்கள் வந்துபோகும் இடம் அது. ஒருகட்டத்தில் சிவில் இன்ஜினீயரிங்கில் ஆர்வம் குறைந்து இலக்கிய ஆர்வம் என்னை ஆட்கொண்டுவிட்டது. அப்போதுதான் வீடியோ ஒளிப்பதிவுக் கருவி அறிமுகமாகியிருந்தது.

குறும்படம் என்பது தமிழில் அறிமுகமாகாத நாட்களில் நான் நண்பர்களுடன் சேர்ந்து படம் எடுத்திருக்கிறேன். நாடகம் நடத்தியிருக்கிறேன். கையெழுத்துப் பத்திரிகை நடத்தியிருக்கிறேன். தீவிரமாகக் கவிதை எழுதியிருக்கிறேன். அப்பா, டிராயிங் மாஸ்டர். தேர்தல் காலங்களில் எம்ஜிஆர் போன்ற தலைவர்களின் படங்களை அவர் வீட்டிலேயே வரைவார். அந்தப் பாதிப்பில் விளம்பரங்களையும், பெரிய பெரிய சுவர் ஓவியங்களையும், உருவப் படங்களையும் வரைந்திருக்கிறேன். இப்போது நினைத்துப் பார்க்கும்போது இலக்கியம், ஓவியம், கவிதை நிழற்படம் என்று சினிமாவை நோக்கித்தான் நான் தொடர்ந்து தயாராகியிருக்கிறேன்.

சினிமாவின் நேரடிப் பரிச்சயம் எப்போது?

ஒரு கட்டத்தில் சினிமா வாய்ப்பு எண்ணத்துடன் சென்னைக்கு வந்துபோய்க்கொண்டிருந்தேன். அப்போது இயக்குநர் ருத்ரய்யாவின் மருமகன் குமார் எனக்கு நண்பராக அறிமுகமானார். அவர் எய்ட்ஸ் விழிப்புணர்வு நிறுவனத்தில் பணியாற்றினார். எய்ட்ஸ் நோய் தொடர்பான பிரசாரங்கள் தொடங்கிய 90-களின் காலகட்டம் அது. எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு படமொன்றுக்குத் திரைக்கதை எழுதச் சொன்னார்.

அப்போது அன்னம் நூலகத்திலிருந்து கதிர் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்கிரிப்ட் நூலை எனக்குக் கொடுத்தான். அப்போதுதான் பேல பெலாசின் சினிமா கோட்பாடு நூல் தமிழில் வந்திருந்தது. அந்தப் புத்தகங்களையெல்லாம் படித்த பாதிப்பில்தான் எய்ட்ஸ் விழிப்புணர்வு படத்துக்கான திரைக்கதையை முப்பது பக்கங்களில் எழுதினேன்.

அதை இயக்குநர் ருத்ரய்யாவும் படித்திருந்தார். நான் சென்னை வந்தபோது அவரைச் சந்தித்தேன். சினிமா என்ற ஊடகத்தை நான் புரிந்துகொண்டிருந்த விதம் மிகுந்த ஆச்சரியம் அளிப்பதாக அவர் சொன்னார். நான் படித்த புத்தகங்கள் பற்றிக் கேட்டார். தொடர்ந்து இலக்கியம் வாசியுங்கள், அதுதான் சினிமாவுக்கு முக்கியமானது என்றார். சினிமாவில் என்னவாக விருப்பமென்று கேட்டார். நான் இயக்குநராக வேண்டுமென்று சொன்னேன். சினிமாவைப் பொறுத்தவரை, ஒளிப்பதிவுதான் பிரதானமான மொழி, அதைக் கற்றுக்கொண்டால்தான் சினிமாவை முழுமையாகக் கையாள முடியும் என்று சொன்னார்.

ருத்ரய்யா சொன்னதன் அடிப்படையில் ஊருக்குத் திரும்பிப்போய்க் கறுப்பு-வெள்ளைப் புகைப்படக் கலையைத் தீவிரமாகக் கற்கத் தொடங்கினேன். இந்தக் காலகட்டத்தில் எனது சிறுகதைகள் கணையாழியில் பிரசுரமாயின. எனது சிறுகதைக்கு ‘கதா’விருது கிடைத்தது. கட்டுரைகள் எழுதத் தொடங்கினேன். ஆனால், என்னுடைய அனைத்து செயல்பாடுகளும் சினிமாவை அணுகுவதற்கான பயிற்சிகளே. கதைகளைக் காட்சிகளாகவே எழுத முயன்றேன். காட்சிதான் என்னுடைய சவால். இப்போதும் ஒரு திரைக்கதை எப்படிக் காட்சிகளாக மாறப்போகிறது என்பதில்தான் எனது கவனம் இருக்கும்.

மேற்கத்திய இசையை ஏன் கற்றுக்கொண்டீர்கள்?

இசை ஆர்வமும் பெற்றோரிடமிருந்துதான் தொடங்கியது. அம்மா, அப்பா இருவருமே நல்ல பாடகர்கள். அப்பா இசைக்குழுவில் பாடியிருக்கிறார். அம்மா தனிமையில் சன்னமாகப் பாடுவார். சின்ன வயதில் அப்பாவின் மேல் கால் போட்டுத் தூங்கும் இரவுகளில், வெட்டுப்புலி தீப்பெட்டியை வைத்துத் தாளம்போட்டுக்கொண்டே எம்ஜிஆர், நாகூர் ஹனீபா பாடல்களைப் பாடுவார்.

பள்ளி விடுதியில் மின்சாரமில்லா இரவுகளில் நான் பாடகராக மாறுவேன். ஆனால், இசையைக் கற்றுக்கொள்ள நினைத்ததில்லை. ஒரு திருமண வீடியோவை எடிட் செய்வதற்காக மதுரைக்குப் போயிருந்தபோது, பக்கத்தில் ஆர்மோனிய சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. அடுத்த அறையிலேயே ஆசிரியர் நூர்பாட்ஷா உட்கார்ந்து பாடம் எடுத்துக்கொண்டிருந்தார்.

மதுரைக்கு வந்து இரண்டு மூன்று மணி நேரங்கள் காத்திருக்கும் நேரத்தில் இவரிடம் பயிற்சியெடுக்கலாமே என்று நினைத்து, அவரிடம் ‘கற்றுத்தர்றீங்களா?’ என்று கேட்டேன். அவர் என்னிடம், ‘ஆர்மோனியம் இருக்குதா?’ என்று கேட்டார். வேலையின்றிச் சுற்றுகிறேன். ஆகவே, அதற்கான வசதி இல்லையென்றேன். ‘வித்தையக் கத்துக்கற ஆசையக் கொடுத்த கடவுள் கருவியை ஒளிச்சு வைக்கமாட்டான்’ என்று அசரீரி போல் அவர் சொன்னார்.

எனக்கு அவர் சொன்னதில் நம்பிக்கை இல்லை. நான் அவரிடம் மியூசிக் டியூசன் தொடர்ந்து போய்க்கொண்டிருந்தேன். ஒரு மாதத்துக்குப் பின்னர் பேராசிரியர் ஷாஜஹான் கனி என்னை வீட்டுக்குக் கூட்டிப்போய் ஆர்மோனியம் ஒன்றைப் பரிசாகக் கொடுத்தார். ஆசிரியர் சொன்னது அப்படியே நடந்தது. எனக்குப் பெரிய ஆச்சரியம். அந்தச் சம்பவம்தான் கதா பரிசு வாங்கிய ‘ஆர்மோனியம்’ கதையானது. இசைப் பயிற்சி என்னைப் பெரிதாக இழுத்துப் போய்விட்டது.

பி.சி.ஸ்ரீராமிடம் எப்படி உதவியாளராகச் சேர்ந்தீர்கள்?

நான் எடுத்த புகைப்படங்களை யெல்லாம் ஒரு ஆல்பமாகப் போட்டு நண்பர்களிடம் காட்டினேன்.

இயக்குநர் சீமான் அதைப் பார்த்து ஆச்சரியப்பட்டு நண்பர்களிடமெல்லாம் சொன்னார். அவர்கள், எல்லாம் பிரமாதம், பி.சி.ஸ்ரீராமிடம் போய்ச் சேருங்கள் என்றார்கள். அவர் பெரிய ஆள். அவரை எப்படிக் கவர்வது

என்று யோசித்தேன். பாரதியாரின் ‘பெரிதினும் பெரிது கேள்’. கவிதை வரிதான் ஞாபகம் வந்தது. அதை மட்டும் ஒரு கடிதத்தில் எழுதி அனுப்பினேன். அதைப் போல சிறிய அளவில் ஆறு கடிதங்கள். தினம் ஒரு கடிதம். ஆறாவது நாளின் கடிதத்தில் எனது பெயரை எழுதினேன்.

ஏழாவது நாள் நேரடியாக அவர் வீட்டுக்குப் போய் நின்றேன். அம்மாதான் முதலில் என்னைப் பார்த்தார்கள். அடுத்து வந்த ஸ்ரீராம் சார் என்னைப் பார்த்தவுடன் ‘வாங்க செழியன்’ என்று அழைத்தார். எனது ஆல்பத்தைப் புரட்டிப் பார்த்து அதை என் கையில் கொடுத்துவிட்டு, ‘சினிமாட்டோகிராபிக்கு இதெல்லாம் யூஸே இல்லை… கொஞ்சம் காத்திருங்க’ என்று சொல்லிட்டுப் போய்விட்டார். அதன் பின்னர்

நான் ஒரு 20 தடவை போய்ப் பார்த்திருப்பேன். ஒரு நாள் அவர் வீட்டுக்குப் போய் காலை எட்டு மணியிலிருந்து காத்திருக்கிறேன். மதியம் 12 ஆனது. ஒரு மணி ஆனது. நான் காத்திருந்தேன். இன்றுதான் கடைசி என்று நினைத்தேன்.

சில நிமிடங்களில் அவரது கார் வீட்டுக்குள் வந்தது. என்னைப் பார்த்தவுடன், ‘இனிமேல் உங்களைக் காத்திருக்க வைக்கக் கூடாது, வாங்க, இன்றிலிருந்து நீங்க என் அஸிஸ்டண்ட்’ என்று சொல்லி காரில் ஏற்றிக் கூட்டிப்போனார். ஸ்ரீராம் சாரின் தனியறையில் திரைக்கதை நூல்கள், ஒளிப்பதிவு குறித்த உலகின் சிறந்த நூல்கள் இருந்தன.

வேலை நேரம் தவிர மற்ற நேரம் முழுவதும் அந்தப் புத்தகங்களைப் படிப்பேன். மதியச் சாப்பாட்டுக்கு மட்டும் வெளியே வருவேன். இப்படியே ஆறு மாதங்கள் ஆயின. பின்னர்தான் சினிமா படப்பிடிப்புக்கு அழைத்துச் செல்லப்பட்டேன்.

(பேட்டியின் நிறைவுப் பகுதி அடுத்த வாரம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x