Published : 29 May 2016 09:59 AM
Last Updated : 29 May 2016 09:59 AM

உறியடி - திரை விமர்சனம்

சாதித் தலைவர்களின் மனதில் எப்போதும் கனன்றுகொண்டிருக்கும் அரசியல் வேட்கையையும் சுயநலத்தையும் தோலுரித்துக் கட்ட முயன்றிருக்கும் படம் ‘உறியடி’.

இறந்துபோன சாதித் தலைவர் ஒருவருக்குச் சிலை வைப்பதில் கதை தொடங்குகிறது. சிலை வைக்க மாவட்ட ஆட்சித் தலைவர் மறுப்பு தெரிவிக்கிறார். உடனே அரசியல் கட்சி தொடங்கத் திட்டமிடுகிறார்கள் சாதிச் சங்கத்தினர். சங்கத்தில் முக்கியப் பொறுப்பில் உள்ள மைம் கோபி, ஒரு பொறி யியல் கல்லூரிக்கு எதிரே தாபா (உணவுக் கடை) நடத்திவருகிறார். அதில் மதுபானங்களும் விற்கப் படுகின்றன.

இந்தக் கடைக்கு எப்போதும் மது அருந்த வரும் நான்கு மாணவர்களைத் தன் அபாயகரமான அரசியல் சதுரங்கத்தில் பகடைக் காயாக்க முனைகிறார். உள்ளூர் லாட்ஜ் முதலாளியின் மகனுடன் மாணவர்கள் மோதலில் ஈடுபட, அதையும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளப் பார்க்கிறார் கோபி. இந்த நுட்பமான சாதி அரசியல் விளையாட்டில் சிக்கி மாணவர்கள் என்ன ஆகிறார்கள் என்பதுதான் கதை.

வலுவான கதையைக் கையில் எடுத்திருக்கிறார் இயக்குநர் விஜய குமார். 1999-ல் நடக்கும் கதை யில் அந்தக் காலத்துக்குரிய அடையாளங்களைத் துல்லியமாகக் கொண்டுவந்திருக்கிறார். தாபாவின் உட்புறத் தோற்றம், பொறியியல் கல்லூரியின் சூழல், சாதித் தலைவர் களின் சிலைகளை வைத்து நடந்த கலவரங்கள், சாதிக் கணக்குகளால் உருவாகும் சீர்கேடுகள், மாண வர்களின் போக்கு, பெற்றோரின் நிலை, கல்லூரி விடுதியின் சூழல் எனப் பல அம்சங்கள் நம்பகத்தன்மையுடன் சித்தரிக்கப்பட்டுள்ளன. விடுதியின் அறைச் சுவர்களை அலங்கரிக்கும் 90-களின் நாயகிகளின் படங்களும் படத்தின் நம்பகத்தன்மைக்கு வலு சேர்க்கின்றன.

சாதி வெறி கொண்ட ஆட் களை மாணவர்கள் ஓர் இரவில் எதிர்கொள்ளும் காட்சியை திகிலூட் டும் வகையில் படமாக்கியிருக்கிறார் இயக்குநர். சாதியைப் பேசும் படமாக இருந்தாலும, எந்த சாதி என்று அனுமானிக்க முடியாத அளவுக்கு நுட்பமாகப் படமாக்கியிருக்கிறார். சண்டைக் காட்சிகள் அபாரமாகப் படமாக்கப்பட்டுள்ளன. மாணவர் களை அடிக்க ஒரு கும்பல் தாபாவுக்கு வர, அவர்களை மாணவர்கள் எதிர்கொள்ளும் காட்சி நன்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால், வன்முறையைக் கொண்டாடும் அளவுக்குச் சில காட்சிகள் அதீதமாக இருப்பதையும் சொல்லியாக வேண்டும். ஒரு மாணவன் கொல்லப் படும் விதமும் பழிவாங்கும் இட மும் பார்வையாளர்களை உறைய வைக்கின்றன.

மாணவர்கள் எப்போதும் குடி யும் கும்மாளமுமாகவே இருக் கிறார்கள். சிறிய பிரச்சினை என்றாலும் முறுக்கிக்கொண்டு சண்டைக்குக் கிளம்பிவிடுகிறார்கள். ரத்த வெறியுடன் அலைகிறார்கள். கொலை செய்யும் அளவுக்கு அடிதடியில் ஈடுபட்டாலும் கல்லூரியில் ஜாலியாகவே இருக்கிறார்கள். படத்தில் போலீஸே இல்லை.

அழுத்தமான காட்சிகளுடன் கதையை யதார்த்தமாக முன்னெடுத் துச் செல்லும் இயக்குநர், காட்சிகளைப் படமாக ஒருங்கிணைப்பதில் சறுக்கி யிருக்கிறார். சாதி அரசியல் கதையையும் மாணவர்களின் கதையையும் ஒன்றாக இணைப்பதில் போதிய நம்பகத்தன்மை உருவாக வில்லை.

பாரதியாரின் ‘அக்கினிக் குஞ் சொன்று கண்டேன்’ என்னும் குறுங்கவிதை உணர்வெழுச்சி மிகுந்த பாடலாகப் பயன்படுத் தப்பட்டிருக்கிறது. ஆனால், பொது நல நோக்கமோ தார்மிக பலமோ இல்லாத இளைஞர்களின் பழி வாங்கும் வெறியாட்டத்துக்குப் பின்புலமாக இந்தப் பாடல் பயன்படுத்தப்பட்டிருப்பது கடுமை யாக உறுத்துகிறது.

மாணவர்களாக நடித்திருக்கும் விஜயகுமார், சந்துரு, ஜெயகாந்த், சிவபெருமாள் ஆகியோர் நன்றாக நடித்திருக்கிறார்கள். மைம் கோபி தேர்ந்த நடிப்பைத் தந்திருக்கிறார். லாட்ஜ் முதலாளியின் பையனாக வரும் சுருளி, வஞ்சமே உரு வான பாத்திரத்தை நன்கு உள்வாங்கியிருக்கிறார். பொது இடத்தில் அவமானப்படுபவன் பழி வாங்கப் புழுங்குவதைக் கண் முன் நிறுத்துகிறார். ஓரிரு காட்சிகளில் எட்டிப் பார்க்கும் ஹெல்லா பென்னாவை நாயகி என்று நாமே நினைத்துக்கொள்ள வேண்டியதுதான்.

பின்னணி இசையையும் கையாண் டிருக்கும் விஜயகுமார், காட்சிகளுக்கு வலு சேர்க்கும் இசையைத் தர்ந்திருக்கிறார். பாடல்களுக்கு இசை மசாலா கஃபே இசைக் குழு. ‘அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்’ பாடலின் மெட்டும் பாடப்பட்ட விதமும் பிரமாதம். பால் லிவிங்ஸ்டனின் ஒளிப்பதிவு படத்தின் யதார்த்தத்துக்கு வலு சேர்க்கிறது.

உறியடி, வலுவான அடிதான்; ஆனால் முறையான இலக்கில்லாத அடி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x