Published : 21 Dec 2014 02:19 PM
Last Updated : 21 Dec 2014 02:19 PM

சென்னை சர்வதேச பட விழா | காஸினோ | 22.12.2014 படங்களின் அறிமுகப் பார்வை

சென்னை 12-வது சர்வதேச பட விழாவில் திங்கள்கிழமை காஸினோ திரையரங்கில் திரையிடப்படும் படங்களில் அறிமுகக் குறிப்புகள் இவை:

காலை 10.00 மணி:

Cherry Tobacco /Estonia/Andres Maimik, Katrin Maimik/108’/2014

எப்போதும் சலிப்புத்தட்டும் வாழ்க்கை லாராவுக்கு. இதனால் அவளுடைய அம்மா அவளை எவ்வகையிலும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள முடியாமல் தவிப்பாள். ஒருநாள் லாராவின் உற்சாகமான நண்பன் மேரீட் அவளை வெளியே நடைப்பயிற்சி மேற்கொள்ள அழைத்துச் செல்வான்.

இயற்கையை நேசிக்கும் ஜோசப் வழிநடத்திச்செல்ல சதுப்புநிலங்கள் வழியாக அவர்கள் செல்வார்கள். யாரிடமும் அதிகம் பேசாமல் வீட்டிலேயே அடங்கிக்கிடந்த லாராவுக்கும் வெளிஉலக இயற்கை அழகில் எப்போதும் உலாவித்திரியும் ஜோசப்புக்கும் இது ஒரு நல்லத் தொடக்கமாக அமைகிறது. அதன்பிறகு மலைவாழ் மனிதர்களின் சடங்குகள், விருந்துகள் என அவளது அனுபவம் விரியத் தொடங்குகிறது.

*

மதியம் 12.00 மணி:

Not my type /France/Lucas Belvaux/111’/2014

பாரீஸ் நகரில் புகழ்பெற்ற தத்துவப் பேராசிரியர் கிளமெண்ட்டுக்கு அவர் பணியாற்றும் இடத்திலிருந்து மாற்றல் வந்துவிடுகிறது. வடக்கில் மிகத் தொலைவில் உள்ள அராஸ் எனும் நகரத்திற்கு எப்படி போய் பணியைத் தொடங்குவது எனத் தயங்குகிறான். ஏனெனில் பாரீஸின் இரவுகளை ரசித்தவன் அவன்.

அந்த மாதிரி புது இடங்களில் சீக்கிரம் சலிப்புத் தட்டிவிடும் என்று நினைக்கிறான். மாறுதலில் தயங்கிச் சென்றவனுக்கு பொழுதை இனிமையாக கழிக்க அவன் எதிர்பாராததெல்லாம் இருந்தன. அங்கு சிகையலங்கார பெண் ஜெனிஃபரின் காதலில் விழுகிறான். அதுமட்டுமின்றி அவள் அவனை, கரோகி நடனங்கள் நடைபெறும் விடுதியின் ஒளிமயமான கூடத்திற்கு அழைத்துச் செல்கிறாள். அங்கு ஜெனிஃபருக்கு நிறைய தோழிகள்.

மேலும் அங்கு சுதந்திரமான காதல், சுதந்திரமான இதயங்கள் என அவர்களுடன் அவனுக்கு உலகம் விரிகிறது. என்றாலும் அவன் மனம் ஏனோ தயங்குகிறது. அவன் விரும்புவது இதுவல்ல. அவன் போற்ற விரும்பும் கலாச்சாரமும் இதுவல்ல...

*

பிற்பகல் 3.00 மணி:

13 (Sizdah)/Iran/ Hooman Sayedi /90’/2013

பெமானி எனும் 13 வயது சிறுவனைப் பற்றிய படம். அவன் யாரிடமும் அதிகம் பேசாதவன். ஏதாவது கேள்வி கேட்டால் உண்டு இல்லை என்று மட்டும் ஓரிரு வார்த்தைகளில் பதில்கூறி மேற்கொண்டு பேசமாட்டான். அவனுடைய அப்பா அம்மா இருவருமே பிரிந்திருக்கின்றனர். தனித்திருக்கும் அவனைக் கிண்டல் செய்யும் சக மாணவர் கும்பலை எதிர்கொள்ளமுடியாமல் தவிக்கிறான். ஆத்திரமாக வருகிறது. அவன் அவர்களை எதிர்ப்பதால் தாக்கப்படுகிறான். ஒரு பெண் அவனை அழைத்துச்சென்று காப்பாற்றுகிறாள்.

பூசான் 2014 உலகத் திரைப்படவிழாவில் நியூ கரண்ட் விருது கிடைத்தது.

*

பிற்பகல் 5.00 மணி:

Stations of the Cross/Germany/Dietrich Bruggemann/107’/2014

ஆன்மிகத்திற்கும் யதார்த்தத்திற்கும் இடைபட்டு வாழும் 14 வயதுப் பெண் மரியாவுக்கு அந்த வயதிற்கே உண்டான ஆசைகளும் கனவுகளும் உண்டு. ஆனாலும் அவளை தொடர்ந்து வழிநடத்திக் கொண்டிருப்பது ஆன்மிகம். கத்தோலிக்க மதப்பிரிவைச் சேர்ந்தவள். குடும்பத்தினரோடு வழக்கமாகச் செல்லும் மதபோதனைகளில் போதிக்கப்படும் இறையியல் கருத்துக்களுக்கு நூறுசதவீதம் உண்மையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறாள்.

வீட்டு வேலை செய்யமுடியாமல் போனதற்குக்குகூட தேவாலயம் சென்று மன்னிப்புக் கோருபவள். பள்ளிப் பிள்ளைகளிடம் சண்டை போட்டுக் கொண்டாலும் அதற்கும் நேராக கடவுகளிடம் வந்துவிடுவாள். ஏசுகிறிஸ்து ஒரு கண்டிப்பான மேய்ப்பன் என்பதால், தான் எக்காரணம் கொண்டும் வழிதவறிவிடக்கூடாது என்பதில் தெளிவாக வாழ்க்கையை வாழ விரும்புகிறாள். ஆனால் அவளுக்கு பல சோதனைகள் காத்திருந்தது. அவற்றையும் அவள் எதிர்கொண்டு தன்னை அறியும் வாய்ப்பைப் பெறுகிறாள். பெர்லின் உலகத் திரைப்படவிழாவில் சிறந்த திரைக்கதைக்கான வெள்ளிக்கரடி விருதுபெற்றது.

*

இரவு 7.15 மணி:

Melbourne/Iran/Nima Javidi /95’/2014

ஆஸ்திரேலியாவுக்குச் செல்லும் விமானம் டெஹ்ரானிலிருந்து புறப்பட இன்னும் மணிநேரங்களே உள்ளன. அவசர அவசரமாக மெல்போர்னுக்கு படிப்பதற்காகச் செல்லும் கணவன் தன்னுடைய மனைவியையும் உடன் வருமாறு அழைக்கிறான். ஆனால் அவளோ மறுக்கிறாள்.

இருவருக்கும் முற்றுபெறாத வாக்குவாதமாக அது வளர்கிறது. இந்நிலையில் அறைக்குச் சென்ற கணவன் அங்கு ஜன்னல் வழியாக வந்த வெளிச்சத்தைப் பார்த்து திடீரென்று பயந்து விழுகிறான். என்னாச்சு என்று பதறி மனைவி ஓடிவந்து கதவைத் தட்டுகிறாள். ஏதோ ஒரு மாயம் அவனை ஆட்கொண்டதாக கருதுகிறார்கள். ஊருக்குப் போவதற்குமுன் இப்படியொரு பிரச்சினை உருவாகும் என்று நினைக்கவில்லை. 71வது வெனீஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x