Published : 19 Dec 2014 07:28 PM
Last Updated : 19 Dec 2014 07:28 PM

சென்னை சர்வதேச பட விழா | உட்லண்ஸ் சிம்பொனி | 20.12.2014 படங்களின் அறிமுகப் பார்வை

சென்னை 12-வது சர்வதேச பட விழாவில் சனிக்கிழமை உட்லண்ஸ் சிம்பொனி திரையரங்கில் திரையிடப்படும் படங்களில் அறிமுகக் குறிப்புகள் இவை.

காலை 9.45 மணி

Xenia/Greece/H.Koutras/120’/2014

தனது தாயின் மரணத்திற்குப் பிறகு தனித்துவிடப்படும் 16 வயது டேனி கிரெட்டே நகரத்திலிருந்து வெளியேறுகிறான். பாடகனான மூத்த சகோதரன் ஒடிஸீஸ் இருக்கும் ஏதென்ஸுக்குச் சென்று அவனுடன் சேர்ந்து வாழ்கிறான். அவனுடைய அம்மா ஒரு பாடகி. அல்பேனியன். அப்பா கிரேக்கம். இதனால் இரு சகோதரர்களும் எப்பொழுதும் சந்தித்துக்கொண்டதில்லை. சொந்த நாட்டிலேயே அந்நியர்களாக வாழும் நிலையில் அவர்களது வாழ்க்கை.

இருவரும் தங்கள் தந்தை இருக்கும் தெஸலோனிக்கி எனும் இடத்திற்குச் செல்ல விரும்புகின்றனர். அவர் எப்படியாவது இவர்களை சட்டப்பூர்வமாக வாரிசுகள் என்பதை அங்கீகரிக்க வேண்டுமென்பதுதான் அவர்களது விருப்பம். அதே சமயம் தெஸலோனிக்கியில் உள்ள பிரபல இசைக்குழுவுக்கு பாடகர் தேர்வு நடைபெற்றுக்கொண்டிருக்க, அதில் சென்று முயற்சி செய்கிறார்கள்.

டேனியின் சகோதரன் ஒடிஸீஸ் தேர்வாகிவிடுகிறான். இசைக்குழுவுக்கு புதிய இசை நட்சத்திரம் கிடைத்துவிட்டார். எந்த நாடு அவர்களை அந்நியப்படுத்தியதோ அந்த நாடே அவர்களை ஏற்றுக்கொண்டது. அற்புதமான பாடல்களும் இசைநிகழ்ச்சிகளும் இப்படத்தின் உற்சாகத்தை மேலும் மேலும் உயர்த்துவதாக இருக்கிறது. டொராண்டோ திரைப்பட விழாவில் போட்டியில் கலந்துகொண்டது. கேன்ஸ் உலகத் திரைப்படவிழாவிலும் அன் சர்டெய்ன் பிரிவில் திரையிட தேர்வானது.



மதியம் 11.45 மணி

Yellow / Mahesh Limaye / Marathi / 2013 / 130 min

டவுன் சிண்ட்ரோம் குறைபாடோடு பிறக்கிறாள் கவுரி. மற்ற குழந்தைகளைப் போல் தன் பெண் இல்லை என்ற நிதர்சனத்தை உணர மறுக்கும் அவள் தந்தை, அவளை விட்டு விலகுகிறார். கவுரியின் தாய் முக்தா, தன் பெண்ணை வளர்த்து, சமுதாயத்தில் ஒரு அங்கீகாரம் பெற்றுத் தர வேண்டும் என்று நினைப்பவள். தன் சகோதரன் ஸ்ரீதரின் வீட்டிற்கு வருகிறாள். கடவுளுக்கு பயந்த, எளிமையானவன் ஸ்ரீதர். கவுரி, முக்தா ஆகியோரின் வாழ்க்கையை உற்சாகமாக முன்னெடுத்துச் செல்ல முக்கிய சக்தியாக இருக்கிறான் ஸ்ரீதர்.



மதியம் 2.45 மணி

Paternal House/Iran/Kianoush Ayari/97’/2012

தொடர்ந்து பல தலைமுறைகளாக குடும்ப ரகசியத்தைப் பாதுகாக்க வேண்டி கௌரவக் கொலைகள் அரங்கேறி வருகின்றன. அதில் எப்படிபார்த்தாலும் பாதிக்கப்படுவது பெண்கள்தான். இப்படத்திலும் அப்படியொரு பிரச்சினை கையாளப்பட்டுள்ளது.

ஒரு இளம் பெண்ணை வீட்டுக்குள் பூட்டிவைத்து கொடுமைப்படுத்துகின்றனர். பின்னர் அவளை இரக்கமில்லாமல் அப்பாவும் மகனும் கொன்று வீட்டுக்கு அடியில் புதைத்துவைக்கின்றனர். கதையின் மெல்ல நகர்கிறது. இப்போது அந்த மகன் வளர்ந்துவிடுகிறான். அவனது மகள் தனக்கு பெற்றோர்கள் வயதான ஆளுடன் ஏற்பாடு செய்துள்ள திருமண ஏற்பாட்டை தவிர்த்துவிடுகிறாள்.

அதே மகன்தான் இன்று அப்பாவாக இருக்கிறான் என்பதால் அவனிடம் அந்த ஆணாதிக்க மரபுக் கலாச்சாரம் மாறவில்லை. இப்போதும் அத்தகைய கொடுமை அரங்கேறுகிறது. இப்படத்தின் காட்சிகள் 1946, 1966 மற்றும் 1996 என பல காலகட்டங்களாக நகர்கிறது. ஈரானிய தணிக்கைக் குழுவினர் இப்படத்திற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனராம்.



மாலை 4.45 மணி

Swapaanam | Shaji N.Karun / 2013 / Malayalam / 152 min

செண்டை மேளம் வாசிப்பதில் ஈடில்லா தேர்ந்த கலைஞனான உன்னியும், மோகினியாட்டத்தில் ஒப்பற்றவளான நளினியும் காதலிக்கின்றனர். உன்னியின் வாழ்க்கைப் பிரச்சினைகளால் இவர்களது காதல் தடைபடுகிறது. தந்தையைப் போல பார்த்துக் கொண்டிருந்த சகோதரனின் அன்பு பொறாமையாக, வெறுப்பாக மாறுகிறது. உன்னியின் வாசிப்பை வெறுக்கும் மனைவி, தனது பிறப்பின் ரகசியத்தை அறிந்துள்ள அம்மா என தவிர்க்க முடியாத ஒரு இருளை நோக்கி உன்னி செல்கிறான்.



மாலை 7.15 மணி

Krantidhara / Himansu Sekhar Khatua / Odia / 2014 / 115 min

எவரும் விரும்பும் ஒரு பொறுப்பான மருமகள் ப்ரதிக்ஞா. பெரிய குடும்பத்தை தனி ஒரு ஆளாக அக்கறையோடு பார்த்துக் கொள்கிறாள். வயதான மாமனார், மாமியார், இரண்டு குழந்தைகளோடு, ஆணாதிக்க மனப்பான்மையுடைய தனது கணவனையும் பார்த்துக் கொள்ள வேண்டிய நிலையில் இருக்கும் ப்ரதிக்ஞா அனைத்தையும் அரவணைத்துக் கொள்கிறாள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x