Published : 18 Dec 2014 06:11 PM
Last Updated : 18 Dec 2014 06:11 PM

சென்னை சர்வதேச பட விழா | உட்லண்ஸ் | 19.12.2014 படங்களின் அறிமுகப் பார்வை

சென்னை 12-வது சர்வதேச பட விழாவில் வெள்ளிக்கிழமை உட்லண்ஸ் திரையரங்கில் திரையிடப்படும் படங்களின் அறிமுகக் குறிப்புகள் இவை.

காலை 10 மணி

The Last Leaf/Iran/Leonardo Frosina /87’/2013

ஸெனோவும் ரோஸனாவும் வேலை நிமித்தம் ரோம் நகருக்குச் செல்கின்றனர். ஸெனோவுக்கு இரவுகளில் செக்யூரிட்டி கார்டாக வேலை கிடைக்கிறது. ஸெனோவின் இசை ஆர்வத்திற்கு ஏற்ற ஒரு வேலையும் கிடைக்கிறது. அவள் தன்னுடைய வேலையை விட்டுவிடுகிறாள். இருவருக்கும் இடைவெளி பெருகிக் கொண்டே போகிறது.

இலா என்ற பெண் இரவில் ஸெனோவின் வாழ்வில் குறுக்கிடுகிறாள். தனக்குப் பிறக்கப் போகும் குழந்தையை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் ரோஸனா தான் கர்ப்பமான செய்தியைக்கூட அவனிடம் தெரிவிக்க முடியாமல் தவிக்கிறாள். இதனால் அவர்களது உறவு நாளுக்குநாள் கேள்விக்குறியாகிறது. வேலைக்காக வாழ்க்கையே சிக்கலாகும் நடுத்தர மக்களின் நிலையை இப்படம் பிரதிபலிக்கிறது.



மதியம் 12 மணி

Jimmy's Hall / Ken Loach / UK / 2014 / 109'

1921-ஆம் ஆண்டு ஜிம்மி கிரால்டன் என்பவர் அயர்லாந்து ஊரகப்பகுதியின் குறுக்குசாலையில் ஒரு நடன மாளிகையை அமைக்க விரும்புகிறார். அதாவது இந்த நடன மாளிகையில் இளைஞர்கள் வந்து நடனம் கற்றுக் கொண்டு, வாதங்கள் செய்து, கனவுகளைக் கண்டு மகிழ வேண்டும் என்று அவரது விருப்பம்.

ஜிம்மியின் இந்த நடனமாளிகை இத்தகைய மனிதர்களின் உணர்வைக் கொண்டாடுகிறது. இந்தத் திரைப்படத்தின் கதைக்காலம் 1932ஆம் ஆண்டு. நியூயார்க்கிலிருந்து ஜிம்மி திரும்பி வந்து நடனமாளிகையை மீண்டு திறப்பதிலிருந்து நடக்கும் நிகழ்வுகளை படம்பிடிக்கிறது. ஜிம்மியின் வாழ்க்கையோடு 1932ஆம் காலக்கட்டங்களின் கொந்தளிப்பையும் பிரதிநிதித்துவம் செய்கிறது.



மதியம் 3 மணி

Tuscan Wedding (Toscaanse bruiloft) / Johan Nijenhuis / Netherlands 2014 / 90'

மார்லா அவளது 2-வது கணவர் தோமை விவாகரத்து செய்ய நினைக்கிறாள். மார்லாவின் மகள் லிசா டஸ்கனி நகரின் பிரம்மாண்ட பங்களாவில் திருமணம் செய்ய திட்டமிடுகின்றனர். லிசாவின் சகோதரி சேன் திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர். ஒரு கட்டத்தில் சேன், ஜெரோன் மீது காதல் கொள்கிறாள். ஆனால், ஜெரோன் இனி தன் வாழ்வில் காதல் அத்தியாயத்திற்கு இடம் கொடுப்பதில்லை என்ற முடிவுடன் இருக்கிறான்.



மாலை 5 மணி

Charlie’s Country /Australia/Rolf de Heer/110/1978

1788-ல் ஏற்பட்ட படையெடுப்புக்குப் பிறகு ஆஸ்திரேலியா நிறைய மாறிவிட்டது, இன்று அங்கு நிலவும் பல்வேறு உள்நாட்டுப் பிரச்சினைகளுக்கும் காரணம் என்றோ குறுக்கிட்ட கலாச்சார குழப்பங்கள் எனும் சிந்தனைகளில் மூழ்குகிறான் பூர்வகுடியான சார்லி. அதற்குக் காரணம் அவனுக்கு ஏற்பட்ட பிரச்சினைகள். இதனால் மீண்டும் பழங்கால வாழ்க்கையை வாழ்ந்துபார்க்க காட்டுக்குள் குடில் அமைத்து தனிமையில் வாழ்கிறான். காட்டுவாழ்க்கையில் அவனுக்கு நிறைவு ஏற்படுகிறது.

ஆனால், தனது சமுதாயத்தினரோடு இணைந்து, கலாச்சார சிக்கல்களுக்குள் விழுந்துவிடாமல், தாங்கள் யார் என்பதை உணர்ந்து வாழ அவர்களை வழிநடத்துவதுதான் தனது வேலை என்ற சிந்தனையோடு ஊருக்குத் திரும்புகிறான். அவர்களிடம் மாறுதல்களை ஏற்படுத்தவும் செயல்பட ஆரம்பிக்கிறான். ஆஸ்திரேலிய நாட்டுப்புற வாழ்வைத் தருவதில் வல்லவரான ரோல்ஃப் டீ ஹீர் எனும் சிறந்த இயக்குநரின் கைவண்ணத்தில், டேவிட் குப்லில் எனும் நடிகனை மீண்டும் சிறந்த கலைஞனாக்கிய முயற்சி இது. ஆஸ்கர் விருதுக்கு, சிறந்த வெளிநாட்டுப் படப் பிரிவில் பரிந்துரை செய்யப்பட்ட படம்.



மாலை 7.15 மணி

Mr.Kaplan / Álvaro Brechner / Uruguay / 2014 / 95'

ஜேகப் கப்ளான் உருகுவேயில் ஓர் அன்றாட வாழ்வை நடத்தி வருகிறார். இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் தனது பிற யூத நண்பர்களைப்போல் இவரும் ஐரோப்பாவை விட்டு தென் அமெரிக்காவுக்குச் செல்கிறார். இப்போது 76 வயதாகும் ஜேகப் தனது சமூகத்தைச் சேர்ந்தவர்களின் மனநிலை, நடத்தை ஆகியவற்றின் மீது கடும் சோர்வு கொள்கிறார். மேலும் தன் குடும்பத்தினருக்கே தங்களது பாரம்பரியம் குறித்து ஆர்வமில்லாமல் இருப்பதும் ஜேகபின் இந்த முதிய வயதில் சோர்வை அதிகரிக்கிறது.

இது இப்படியிருக்கையில், பார் உரிமையாளரான வயதான ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஒருவர் தப்பித்து வந்த நாஜி என்ற சந்தேகம் ஜேகப் கப்ளானுக்கு எழ, காண்டிராஸ் என்ற முன்னாள் போலீஸ் அதிகாரியை ரகசியமாக நியமித்து அந்த ஜெர்மன் நாட்டுக்காரரைப் பற்றி விசாரணையைத் தொடங்குகிறார். வரலாற்றில் அடால்ஃப் எய்ச்மான் என்பவர் பிடிக்கப்பட்ட அந்த வரலாற்றை மீண்டும் ஒரு முறை நிகழ்த்த முயற்சிக்கின்றனர்: அதாவது அந்த முன்னாள் நாஜியை ரகசியமாக இஸ்ரேலுக்குக் கொண்டு செல்ல முயற்சி செய்கின்றனர்...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x