Last Updated : 29 Jan, 2015 10:43 AM

 

Published : 29 Jan 2015 10:43 AM
Last Updated : 29 Jan 2015 10:43 AM

விரைவில் வெளிநாட்டு வர்த்தகக் கொள்கை: அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

இந்திய ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையிலான வெளிநாட்டு வர்த்தகக் கொள்கை (எப்டிபி) விரைவில் வெளியிடப்படும் என்று மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

2014-19-ம் ஆண்டுக்கான வெளி வர்த்தகக் கொள்கைக்கு அளிக்கப்படும் சலுகை தொடர்பாக வர்த்தகம் மற்றும் நிதி அமைச்சகத்திடம் ஒப்புதல் பெற வேண்டியுள்ளது. மேலும் ஏற்றுமதியை ஊக்குவிக்க வரிச் சலுகையும் அளிக்க வேண்டியுள்ளது. இதனால் எப்டிபி வெளியாவதில் சற்று கால தாமதம் ஏற்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.

பொதுவாக வெளிநாட்டு வர்த்தகக் கொள்கை ஏப்ரல் மாதத்தில் வெளியாகும். ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் இதில் சலுகைகள் இடம்பெறுவது வழக்கம். நாட்டின் பொருளாதார வளர்ச்சியை முடுக்கி விடுவதோடு வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்பதிலும் அரசு உறுதியாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

புதிய கொள்கையில் ஏற்றுமதியாளர்களுக்கு சில சலுகைகள் பல்வேறு மேம்பாட்டு திட்டங்களின் அடிப்படையில் அளிக்கப்படும். புதிய சந்தைகளை கண்டறிந்ததற்கான முயற்சிக்கு ஊக்கத் தொகை, சந்தை மேம்பாட்டு உதவி நிதி, விசேஷ கிருஷி, கிராம் உத்யோக் யோஜனா, சந்தை முன்னிலைப்படுத்தும் திட்டம், உற்பத்தியை மையமாகக் கொண்ட திட்டம், சந்தையை மையமாகக் கொண்ட திட்டம், பொருள்களை மையமாகக் கொண்ட திட்டம் உள்ளிட்டவை அளிக்கப்பட உள்ளன.

இந்தத் திட்டத்துக்கான நிதியை மத்திய நிதி அமைச்சகம் ஒதுக்க வேண்டும். வர்த்தகக் கொள்கை வெளியாவதில் ஏற்பட்டுள்ள கால தாமதம் குறித்து ஏற்கெனவே ஏற்றுமதியாளர்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர். நடப்பு நிதி ஆண்டில் ஏற்கெனவே 10 மாதங்கள் முடிவடைந்து விட்டன.

இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை கடந்த 10 மாதங்களில் இல்லாத அளவாக 943 கோடி டாலராக டிசம்பர் மாதத்தில் குறைந்தது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததும் பற்றாக்குறை குறையக் காரணமாகும். ஏற்றுமதி குறைந்ததும் இதற்கு காரணமாகும்.

இந்தியா வந்திருந்த அமெரிக்க வர்த்தக அமைச்சர் பென்னி பிரிட்ஸ்கருடன் ஆலோசனை நடத்திய நிர்மலா சீதாராமன், இருதரப்பு அதிகாரிகளும் இரு நாடுகளிடையிலான வர்த்தகம் அதிகரிப்பதற்கான வழிவகைகளை ஆராய்வர் என்று குறிப்பிட்டார். இந்தியாவில் அமெரிக்க முதலீடு அதிகரிப்பது தொடர்பான வழிகளை இக்குழு ஆராயும்.

இரு நாடுகளின் அதிகாரிகள் அடங்கிய கூட்டுக் குழு எந்தெந்த துறைகளில் முதலீடு செய்ய வாய்ப்புள்ளது என்றும் முன்னுரிமை துறைகள் எவை எவை என்றும் ஆராயும். அத்துடன் எந்தெந்த துறைகளில் தொழில்நுட்பத்தைப் பகிர்ந்து கொள்ளலாம் என்றும் கண்டறியும்.

இவை அனைத்தும் விரைவாக முடுக்கிவிடப்பட்டு நிர்வாக ரீதியாக மார்ச் மாதத்திற்குள் செயல்படத் தொடங்கும். என்று நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.

ஸ்ரீராம் பொருளாதார கல்வி மையத்தின் மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர், அறிவுசார் சொத்துரிமை விவகாரம் தொடர்பாக அமெரிக்க அரசு விரைவில் வரைவுக் கொள்கையை வெளியிட உள்ளதாகக் குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x