Published : 04 Oct 2015 06:55 PM
Last Updated : 04 Oct 2015 06:55 PM

விரைவில் கட்டாய பான் எண் திட்டம்: கருப்புப் பணத்தைத் தடுக்க மத்திய அரசு தீவிரம்



ஜேட்லி ஃபேஸ்புக் பதிவின் 10 முக்கிய அம்சங்கள்

உள்நாட்டில் புழங்கும் கருப்பு பணத்தை தடுக்க, ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் பணப்பரிவர்த்தனை செய்யும்போது 'பான் எண்' தகவல் சமர்ப்பிக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்க மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.

'கருப்புப் பணத்துக்கு எதிரான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் நடவடிக்கை' எனும் தலைப்பில், வரிவிதிப்பு உள்ளிட்ட விவகாரங்களை முன்வைத்து அருண் ஜேட்லி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட தகவல்களில் 10 முக்கிய அம்சங்கள்:

* வெளிநாட்டில் கருப்பு பணம் பதுக்கி வைத்திருப்பவர்கள் இந்தியாவுக்கு கொண்டுவருவதற்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டது. இந்த அவகாசம் கடந்த செப்டம்பர் 30-ம் தேதியுடன் முடிவடைந்தது. இந்தக் கால அவகாசத்தை பயன்படுத்தி தகவல் தெரிவித்தவர்கள் நிம்மதியாக இருக்கலாம். செப்டம்பர் 30 வரை 3,770 கோடி ரூபாய் (638 நபர்கள்) மட்டுமே வந்திருக்கிறது. இந்தக் கால அவகாசத்துக்குள் தகவல் தெரிவிக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

* வரிவிதிப்பு முறைகளில் மாற்றம் கொண்டுவரவேண்டும். நியாயமாக வரிவிதிக்கப்பட வேண்டும். குறைவாக சம்பாதிப்பவர்கள் வசம் அதிக தொகை கையில் இருப்பது போல வரி இருக்க வேண்டும். அவர்கள் பிளாஸ்டிக் பணத்தை பயன்படுத்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். கடந்த காலங்களில் அதிக வரிவிகிதம் இருந்ததால், வரி ஏய்ப்பு என்பது மக்களின் பழக்கமாக மாறிவிட்டது.

* இனி வெளிநாட்டில் கருப்பு பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் 30 சதவீத வரி, 90 சதவீத அபராதம், சட்ட ரீதியான நடவடிக்கை, சொத்துகளை பறிமுதல் செய்தல் என நடவடிக்கை கடுமையாக இருக்கும். அதிகபட்சம் 10 வருட சிறைதண்டனை அனுபவிக்க வேண்டியிருக்கும்.

பான் எண் கட்டாயம்

* பான் எண் அறிவிப்பதை கட்டாயமாக்குவது குறித்து மத்திய அரசு மிகவும் தீவிரமாக பரிசீலனை செய்துவருகிறது. அதன்படி, ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் பணப்பரிவர்த்தனை செய்யும்போது, பான் எண் தகவல் சமர்ப்பிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்படும்.

* வருமான வரித்துறை பலப்படுத்தப்பட்டு வருகிறது. தொழில்நுட்பங்கள் மூலம் தகவல்களை ஆராய்ந்து வரி ஏய்ப்பை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

* வங்கிகளில் அதிக அளவு பணம் எடுக்கப்பட்டாலோ அல்லது அதிக அளவு பணம் டெபாசிட் செய்யப்பட்டாலோ வருமானவரித் துறையினரால் கண்டுபிடிக்க முடியும்.

* சரக்கு மற்றும் சேவை வரி அமலாக்கப்படும் பட்சத்தில், கருப்பு பணத்தை தடுக்கும் நடவடிக்கையில் முக்கியமான மைல்கல் ஆகும்.

* தங்கம் பரிவர்த்தனை முதல்முறை நடக்கும்போது சுங்கவரி செலுத்தப்படுகிறது. ஆனால், அதன் பிறகான பரிவர்த்தனை அனைத்தும் ரொக்கமாகவே நடக்கிறது. இதனை எளிதாக கண்டுபிடிக்க முடியும்.

* இந்தியாவுக்குள் அதிக கருப்பு பணம் உள்ளது. தேசிய அளவில் மாற்றம் கொண்டு வர வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. பிளாஸ்டிக் கரன்ஸியை பயன்படுத்துவதற்கு ஊக்க நடவடிக்கை கொடுப்பது பற்றி மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.

* ஜன்தன் யோஜனாவின் கீழ் 18 கோடி வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்கு ரூபே டெபிட் கார்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. அவர்களிடம் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பான் எண் செயல்திட்டத்துக்கு எதிர்ப்பு

முன்னதாக, ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் நடக்கும் அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் பான் எண் கட்டாயம் என்று கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இது குறித்து பலரிடமும் கருத்து கேட்கப்பட்டது.

மக்களவை உறுபினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தொழில்துறை அமைப்புகள் என பல தரப்பினரும், ஒரு லட்ச ரூபாய்க்கு மேலான தொகைக்கு பான் எண்ணை தெரிவிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தது கவனிக்கத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x