Published : 24 Jul 2016 11:37 AM
Last Updated : 24 Jul 2016 11:37 AM

விஜய் மல்லையாவுக்குச் சொந்தமான 8 கார்களை ஏலம் விட முடிவு

தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்குச் சொந்தமான கார்களை ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.

விஜய் மல்லையாவுக்குச் சொந்தமான வீட்டை ஏலம் விடும் முயற்சி வெற்றி பெறாத நிலையில் தற்போது அவர் பயன்படுத்திய மற்றும் அவரது அலுவலக பயன்பாட்டுக்கென வாங்கப்பட்ட 8 கார்களை ஏலம் விட எஸ்பிஐ கேப் டிரஸ்டி நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இந்த ஏலம் ஆகஸ்ட் 25-ம் தேதி நடத்தப்படஉள்ளது. இதன் மூலம் ரூ. 13.70 லட்சம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வங்கிகளுக்கு விஜய் மல்லையா கடனாக செலுத்த வேண்டிய தொகை ரூ. 6,963 கோடியாகும்.

இந்த கார்கள் அனைத்தும் தற்போது கிங்பிஷர் அலுவலகத்தின் பின் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளன.

விலை கேட்க விரும்பும் வாகனத்தின் விலையில் 10 சதவீதத் தொகையை முன் பண மாக டெபாசிட் செய்ய வேண்டும். ஏலத்தில் பங்கேற்க பதிவு செய் வதற்கான கடைசி நாள் ஆகஸ்ட் 23-ம் தேதியாகும். பதிவுக் கட்டணம் ரூ. 2 ஆயிரமாகும்.

இந்த கார்களை ஜூலை 29-ம் தேதி முதல் ஆகஸ்ட் 5-ம் தேதி வரை நேரில் பார்வையிடலாம்.

வருமான வரித்துறையுடன் இணைந்து எஸ்பிஐ கேப் டிரஸ்டி நிறுவனம் இந்த ஏலத்தை நடத்துகிறது. ஏற்கெனவே கிங்பிஷர் ஹவுஸ் எனப்படும் அலுவலக கட்டிடத்தை ரூ. 150 கோடிக்கு ஏலம் விட முடிவு செய்திருந்தது. ஆனால் எவரும் ஏலம் கேட்கவில்லை.

2014-ம் ஆண்டு ஜனவரி 31-ம் தேதி நிலவரப்படி விஜய் மல்லையாவின் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் வங்கி களுக்கு செலுத்த வேண்டிய கடன் தொகை ரூ. 6,963 கோடியாகும். அனைத்து வங்கிகளும் இந்தக் கடன் தொகையை வாராக் கட னாக அறிவித்துள்ளன.

கடன் வழங்கியதில் எஸ்பிஐ வங்கி மிக அதிகபட்சமாக ரூ. 1,600 கோடியை அளித்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கி, ஐடிபிஐ வங்கி ஆகிய இரண்டும் சேர்த்து ரூ. 800 கோடி கடன் அளித்துள்ளன.

பேங்க் ஆப் இந்தியா ரூ. 650 கோடி அளித்துள்ளது. பாங்க் ஆப் பரோடா ரூ. 550 கோடியும், சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா ரூ. 410 கோடியும், யூகோ வங்கி ரூ. 320 கோடியும், கார்ப்பரேஷன் வங்கி ரூ. 310 கோடியும் கடனாக அளித்துள்ளன. ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பெடரல் வங்கி, பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கி, ஆக்ஸிஸ் வங்கி ஆகிய வங்கிகளும் இந்நிறுவனத்துக்கு கடன் வழங்கியுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x