Last Updated : 04 Oct, 2015 12:20 PM

 

Published : 04 Oct 2015 12:20 PM
Last Updated : 04 Oct 2015 12:20 PM

வணிக நூலகம்: எது வேண்டும்? சொல் மனமே

முழுமையான வாழ்வும் தொழிலும் ஒருவருக்கு மிகப் பெரிய சவால். முழுமையான வாழ்வும் தொழிலில் முன்னேற்றமும் மேலோங்க தைரியமும், கடின உழைப்பும் இரண்டு கண்கள். நாம் எப்போது பார்த்தாலும் நம் கனவுகளில் மிதந்து கொண்டு எதையோ செய்ய போகின்றோம், எவ்வளவோ சாதிக்க போகின்றோம் வானை தொட்டுவிடும் தூரத்திற்கு சென்று விட்டோம் என்று நினைத்துக் கொண்டிருப்போம். ஆனால், அந்த நல்ல எண்ணங்களும் வழிகாட்டு உந்துதலும் திடீர் என்று காணாமல் போய் நிகழ் உலகிற்கு வந்து நெஞ்சு பதைத்து கவலைக் கடலில் மூழ்கி தோல்வி இலக்கை நோக்கி இழுக்கப் பட்டுக்கொண்டிருப்போம்.

வெற்றி இலக்கு என்று நாமே நிர்ணயித்துக் கொள்வது நம்மால் அடையாளம் காணப்படுவதில்லை. மாறாக, உடன் இருப்பவர்களும், உற்றாரும், பெற்றோரும், நாம் நம்பிக்கை கொண்டிருப்பவர்களும் நமக்கு கொடுக்கக் கூடிய உத்திகளும், வழிமுறைகளும் நம்மை அங்கு கொண்டு சேர்க்கும் என நம்புகின்றோம். ஆனால், தோல்வி இலக்கை நோக்கி பயணிக்கும் பொழுது வெறுப்பும், அழுகையும், கையாலாகாத தனமும் நம்மைக் கலங்க வைக்கிறது.

நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையான அல்லது ஏதோ ஒரு செயலில் திறமை மிக்கவர்களாக இருப்போம். ஆனாலும் அந்த திறமைகளை தொடர்ந்து தேடி கண்டு பிடிக்காமல் செம்மறி ஆடுகளாக ஏன் மாறுகின்றோம். ஆட்டு மந்தைகள் முன் செல்லும் ஆட்டை பின் தொடர்வது போல் யாரோ பாடிய பாடலை திரும்ப பாடுவதில் இலக்கை இழக்கின்றோம். தொழில்நுட்பக் கல்விக்குத் தகுதியும் திறமையும் இருந்தாலும் விருப்பம் என்ற முக்கியமான காரணி இல்லாத பொழுது அது வீணாகிறது.

உத்திகள் சில

ஓவியம் வரைவதில் ஈடுபாடு உடைய ஒருவர். புதிது புதிதாக வரையும் பொழுது அதில் கிடைக்கும் நிம்மதி, திருப்தி, செல்வம் ஆகியவைகளைக் கணக்கில் கொள்ள வேண்டும். மாறாக, மற்றவர்கள் கூறுவதை போல அரசு பணியிலோ, அரசு சாரா முறைப்படுத்தப்பட்ட பணியிலோ மாத ஊதியம் பெற்று மேலே சொன்ன காரணிகளை இழந்து இருட்டில் யானையைத் தேடுவது சரியானது ஆகுமா? உங்களை நீங்களே உள்நோக்கி பார்க்காமல் இந்த பயணத்தைத் தொடர முடியாது. உங்களுடைய முழு திறமையையும் வெளிக் கொணர்வது நீங்கள் கனவு காண்பதிலோ அல்லது உங்களை பற்றி மிக உயர்வாக எண்ணிக் கொள்வதிலோ இல்லை. மாறாக, உங்களுக்கு பிடித்த இலக்கை அடைவதற்கு முக்கியமான, குறிப்பான செயல்கள், பயிற்சிகள், தன்னொழுக்கம், கடின உழைப்பு ஆகியவையே ஆகும். வெற்றி பெறுவது குறித்து கவலைப்படுவதைத் தவிர்த்து மேலதிக திறமைகளை திருப்தி உடனும், நிறைவுடனும் வெளிக்கொணர்வது குறித்து சிந்தியுங்கள். அவ்வாறு செய்வதற்கு நூலாசிரியர் சில உத்திகளை குறிப்பிடுக்கின்றார்.

* திறமைகளையும், பலவீனங்களை யும் அளவிடுங்கள்

* உங்கள் பேரார்வத்தை கண்டு பிடியுங்கள்

* தன்னிலை அறிந்து ஏன் எதற்காக இந்த இலக்கில் செல்ல வேண்டும் என்று சிந்தியுங்கள்

* கிடைக்க கூடிய வாய்ப்புகளைப் பெருமளவு நேர்மறையாக மாற்றுங்கள்

* திறமைகளை வளர்க்க வானத்தை எல்லையாக அமையுங்கள்

* நட்புறவை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

திறமைகளையும், பலவீனங்களையும் அளவிடுங்கள்

பெரும்பான்மையானவர்கள் தோல்வி அடைவதற்கு தங்களுடைய திறமை குறைபாட்டைக் காரணமாக கூறுவார்கள். தங்களை வளர்த்துக் கொள்ள அந்த குறைபாடு தடையாக இருப்பதாகக் கூறுவார்கள். ஆனால் உண்மையில் தங்களுடைய திறமை பற்றியும், திறமைக் குறைபாடு பற்றியும் சரியான முறையில் அளவீடு செய்யாதவர்கள் தோல்வியில் துவள்வதைத் தவிர வேறு வழியே கிடையாது.

உங்கள் பேரார்வத்தை கண்டு பிடியுங்கள்

இசையில் உங்களுக்கு இருக்கும் ஆர்வம் மற்றவர்களுக்குத் தெரியாது மாறாக பொறியியலோ, தொழில்நுட்பமோ படித்து பாதுகாப்பான பணிக்கு உங்களை உந்தி தள்ள நிறைய பேர் வெற்றிக் கதைகளை அள்ளி விடுவார்கள். இந்த இடத்தில் உங்கள் பேரார்வம் என்ன? இசையா அல்லது பொறியியலா அல்லது தொழில்நுட்பமா? அதை நீங்கள்தான் கண்டறிய வேண்டும். பேரார்வம் திறமைகளை தூண்டும். மற்றவர்கள் உங்களுக்காக முடிவு செய்வதைத் தவிர்த்து உங்கள் பேரார்வத்தை கண்டறியுங்கள்.

தன்னிலை அறிந்து ஏன் எதற்காக இந்த இலக்கில் செல்ல வேண்டும் என்று சிந்தியுங்கள்

திறமைகளும் செயல்பாடுகளும், உத்திகளும் தனிநபர் சார்ந்தவை. எவ்வாறு அவற்றைக் கண்டறிவது. நாம் இப்போது செய்யும் செயல்களை தொடர்ந்து செய்வதா அல்லது புதிய முறையில் நிறைவான செயலை மாற்றி செய்வதா என்ற முடிவு வெற்றியின் அருகில் கொண்டு சேர்க்கும்.

கிடைக்க கூடிய வாய்ப்புகளை பெருமளவு நேர்மறையாக மாற்றுங்கள்

மிகவும் திறமைபடைத்த பேரார்வம் உள்ளவர்கள் ஏன் தோல்வி அடைகிறார்கள். அவர்களுடைய ஆற்றல் வளம் ஏன் சரியான முறையில் அளவிடப்படுவதில்லை. அவர்கள் சரியான வேலையில் இருந்தாலும் அவர்களுக்கு கிடைத்த வாய்ப்புகளை நேர்மறையான முறையில் மாற்றி வெற்றியை நோக்கி ஏன் செல்ல மறக்கிறார்கள். ஏன் என்றால் வாய்ப்புகள் வரும் பொழுது அவர்களுடைய ஆற்றல் வளத்தை நேர்மறையாக இணைத்து அதிக அளவில் பயன்பெறுமாறு செய்ய தயங்குகிறார்கள். தங்களை பற்றிய அளவீடுகளும் ஆய்வுகளும் சரிவர செய்யாமல் வாய்ப்புகளை வாரி வழங்கிவிட்டு வாசலில் அமர்ந்து வெற்றிக்குக் காத்திருக்கிறார்கள்.

திறமைகளை வளர்க்க வானத்தை எல்லையாக அமையுங்கள்

தலைமை பண்புகள், தொழில் வெற்றி இரண்டும் ஒன்றோடு ஒன்று இணைந்தது. பெரிய நிறுவனங்களின் நிறுவனர்களும், தொழிலில் வெற்றி அடைபவர்களும் தலைமை பண்புகளால் மட்டுமே அவைகளை சாத்தியமாக்குகிறார்கள்.

மேன்மையான தொழில் வளர்ச்சியும், வெற்றிகரமான நிறுவனங்களும் தலைவர்களுடைய ஈடுபாட்டாலும் அவர்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவிலும் அமையும். அவ்வாறு முடிவெடுக்கும் தலைவர்கள் வானத்தை எல்லையாக வரைந்து கொண்டு மற்றவர்களையும் அழைத்துக்கொண்டு செல்லும் போது திறமைகளும் வளர்ந்து, நிறுவனங்களும் வளர்ந்து அந்த நிறுவனம் ஒரு முன் மாதிரியான நிறுவனமாக தோற்றமளிக்கிறது.

நட்புறவை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்

சாலையில் போகும் தனிவழி நடைப்பயணம் அல்ல மாறாக, நிறுவன பயணங்களில் நம்பிக்கையான பணியாளர்களும், நண்பர்களும் கொடுக்கும் அறிவுரைகளும், கருத்து கூறலும் நட்புறவின் மூலமாகவே விளையும். கொடூரமான உண்மைகளை பட்டென்று கூறும் நபர்களிடம் நட்புறவை வளர்க்க இயலாது. ஆனால் அது போன்ற நண்பர்கள் தவறை சரியான முறையில் சுட்டி காட்டுவார்கள். கூடவே இருந்துக்கொண்டு உண்மைக்கும் ஆம் என்றும், பொய்க்கும் ஆம் ஆம் என்றும் தலையை மட்டும் ஆட்டும் பொம்மைகள் மேலே சொன்ன மனிதர்களில் இருந்து வேறுபடுகிறார்கள். சில நேரங்களில் நமக்கு பிடிக்காத வேண்டாத வார்த்தைகள் கூட நம்மை சரியான வழியில் மாற்றி கூட்டி செல்லும். அது போன்ற நேரத்தில் கொடூரமான உண்மைகளை கூறும் நண்பர்கள் மிகவும் தேவை.

எத்தனை சம்பாதிக்கின்றோம், எவ்வளவு சாதிக்கின்றோம் எத்தனை பட்டங்களையும், பதவிகளையும் பெறு கின்றோம் என்பது முக்கியம் அல்ல. கொள்கைகளும், குறிக்கோள்களும், சரியான வழிகாட்டுதலும் கிடைக்கும் பொழுது அதுவே மிகப்பெரிய வெற்றி. அந்த வெற்றியில் கிடைக்கும் உணர்வு மற்ற எல்லா முறைகளிலும் அடையும் வெற்றியை விட வித்தியாசமானது. வித்தியாசமான உணர்வுக்கு துணிச்சல் தேவை. துணிந்து செல்லுங்கள். எழுந்து நில்லுங்கள். உண்மையிலே நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று நினைகிறீர்களோ அதையே செய்யுங் கள். வெல்லுங்கள், மகிழுங்கள், வித்தியாசமான தனித்தன்மையான வெற்றி அடையுங்கள்.

rvenkatapathy@rediffmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x