Published : 29 Jan 2015 11:18 AM
Last Updated : 29 Jan 2015 11:18 AM

பட்ஜெட்டுக்கு பிறகு புதிய ஜவுளிக் கொள்கை

பட்ஜெட்டுக்கு பிறகு புதிய ஜவுளிக் கொள்கை அறிவிக்கப்படும் என மத்திய ஜவுளிதுறை ஆணையர் கிரண் சோனி குப்தா தெரிவித்தார். புதிய ஜவுளிக் கொள்கை கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், மத்திய பட்ஜெட்டுக்கு பிறகு அறிவிக்கப்படும் என்று கூறினார்.

பல்வேறு முதலீட்டாளர்கள் தரப்பிலும் ஆலோசனை செய்து விரிவான விவரங்களுடன் தயாராகியுள்ளது. இந்திய ஆடை தயாரிப்பாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த 60வது தேசிய ஆடைக் கண்காட்சியை தொடங்கி வைத்தபின் செய்தியாளர்களிடம் இந்த தகவலை குப்தா பகிர்ந்து கொண்டார்.

இந்த புதிய ஜவுளிக் கொள்கை இத்துறைக்கும், மத்திய ஜவுளி சட்டத்துக்கும் மிகுந்த உதவியாக இருக்கும் என்றார். ஜவுளி துறையின் அனைத்து அம்சங்களையும் இந்த கொள்கை தொட்டுள்ளது என்றவர், ஜவுளி துறை உத்திகள், எதிர்கால பார்வை, நடைமுறை செயல்பாடுகள் உள்ளிட்ட பல விஷயங்களையும் இந்த புதிய ஜவுளிக் கொள்கையில் எதிர் பார்க்கலாம் என்று கூறியுள்ளார்.

நடப்பு நிதி ஆண்டில் 1,700 கோடி டாலர் அளவுக்கு ஆடைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட குப்தா கடந்த ஆண்டில் இந்த ஏற்றுமதி அளவு 1,470 கோடி டாலராக இருந்தது என்றும் குறிப்பிட்டார்.

2014-15 ஆம் ஆண்டில் உள்நாட்டு ஜவுளி சந்தை 10 முதல் 12 சதவீதம் வரை வளர்ச்சியடைந்துள்ளது. ஏற்றுமதி சந்தையின் அளவு 18 முதல் 20 சதவீதம் வரை வளர்ந்துள்ளது என்று குப்தா கூறினார்.

டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பின் முன்னேற்றம் காரணமாகவும் ஜவுளித் துறை வளர்ச்சியடைந்துள்ளது. சீன பொருளாதாரத்தின் இறங்குமுகம், வங்கதேச போட்டியையும் குறைத்தது என்று குறிப்பிட்டார்.

ஜவுளி பூங்கா மேம்பாடு தொடர்பான திட்டங்கள் குறித்து பேசுகையில், 61 ஜவுளி பூங்காக்கள் அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும், தற்போது 55 ஜவுளி பூங்காக்கள் செயல்பட்டு வருகிறது என்றும் குறிப்பிட்டார். மேலும் 13 ஜவுளி பூங்காக்கள் அமைப்பதற்கான வேலைகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார்.

விசாகப்பட்டினம் மற்றும் கோயம்புத்தூர் ஜவுளி பூங்காக்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன என்றும் குப்தா கூறினார். ஜவுளி தொழில்நுட்பத்திற்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது என்றும், தொழில் விரிவாக்கம் மற்றும் உற்பத்தி அதிகரிப்புக்கான தேவை மற்றும் வாய்ப்புகள் உள்ளது என்றும் குப்தா கூறினார்.

வட கிழக்கு பிராந்தியத்தின் விவசாயம் சார்ந்த ஜவுளி மற்றும் ஜியோ ஜவுளி உற்பத்தியையும் அரசு ஊக்குவித்து வருவதாகவும் குப்தா குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x