Published : 01 Sep 2014 09:43 AM
Last Updated : 01 Sep 2014 09:43 AM

நிப்டி 8000 புள்ளிகளை இன்று தொடுமா?

கடந்த வெள்ளிக்கிழமை முதல் காலாண்டு ஜிடிபி முடிவுகள் வெளிவந்தன. கடந்த 9 காலாண்டுகளில் இல்லாத அளவுக்கு 5.7 சதவீதமாக வளர்ச்சி இருக்கிறது. இதன் தாக்கம் திங்கள்கிழமை பங்குச்சந்தையில் எதிரொலிக்கும் என்றும், நிப்டி 8000 புள்ளிகளை தொடும் என்றும் பங்குச்சந்தை வல்லுநர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் அதே சமயம் நிலக்கரி சுரங்கங்களுக்கான எதிர்காலம் பற்றி உச்சநீதிமன்றம் கருத்து தெரிவிக்க உள்ளது. இதனால் சந்தையில் நிச்சயமற்ற தன்மை இருக்கலாம் என்றும் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். அதேபோல இந்த வாரத்தில் நடப்புக்கணக்கு பற்றாக்குறை பற்றிய தகவலும் வெளியிடப்பட இருப்பதால் பங்குச்சந்தைகள் எந்த திசையிலும் செல்லலாம் என்று சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

உற்பத்தி மற்றும் சுரங்கம் மற்றும் சேவை துறையின் வளர்ச்சி காரணமாக இந்தியாவின் முதல் காலாண்டு வளர்ச்சி 5.7 சதவீதத்தை தொட்டது. நிதி அமைச்சகம் அடுத்து வரும் காலாண்டுகளிலும் வளர்ச்சி தொடரும் என்று அறிவித்தது முதலீட்டாளர்களுக்கு மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

திங்கள்கிழமை பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கம் இருக்கலாம், குறிப்பாக மின் மற்றும் மெட்டல் துறை பங்குகளில் அதிக ஏற்ற இறக்கம் இருக்கும் என்று சியான் அனலிடிக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சி.இ.ஓ அமான் சவுத்திரி தெரிவித்தார்.

ஜிடிபி புள்ளி விவரத்துக்கு சந்தை எப்படி செயல்படுகிறதோ அதற்கு ஏற்பவே சந்தையின் அடுத்த கட்ட நகர்வு இருக்கும் என்று ரெலிகர் செக்யூரெட்டீஸ் நிறுவனத்தின் தலைவர் ஜெயந்த் தெரிவித்தார். இது தவிர, ரூபாயின் ஏற்ற இறக்கங்கள், பருவமழை மற்றும் அந்நிய முதலீடு ஆகியவையும் சந்தை நிகழ்வுகளில் தாக்கம் செலுத்தும். சர்வதேச அளவில் பார்க்கும் போது வரும் வியாழன் அன்று ஐரோப்பிய மத்திய வங்கி (இசிபி) அடுத்த கட்ட ஊக்க நடவடிக்கைகள் பற்றிய கொள்கை முடிவுகளை அறிவிக்க இருக்கிறது.

டெக்னிக்கலாக ஏற்றம் இருக்கும்

டெக்னிக்கலாக பார்க்கும் போது சந்தை ஏற்றத்தில் இருப்பது போலவே தெரிகிறது. சென்செக்ஸ் 26500 புள்ளிகளை கடந்து முடிந்திருக்கிறது. இதே நிலைமை தொடரும் போது கூடிய விரைவில் சென்செக்ஸ் 27000 புள்ளிகளை தொடும் வாய்ப்பு இருக்கிறது. இந்த நிலைமையை தாண்டும் போது 27114 புள்ளிகள் வரை செல்ல சாத்தியம் இருக்கிறது. 26300 புள்ளிகளுக்கு வரும் போது 26121, 25794 அல்லது 25241 புள்ளிகள் வரை சரிவதற்கு கூட வாய்ப்பு இருக்கிறது.

நிப்டியை எடுத்துக்கொண்டால் தினசரி சார்ட் அடிப்படையில் காளையின் பிடியில்தான் இருக்கிறது. 8000 புள்ளிகளை கடக்கும்போது 8098 புள்ளிகள் வரை செல்லலாம். ஒரு வேளை சரியும் பட்சத்தில் 7786, 7700 அல்லது 7540 புள்ளிகள் வரை கூட சரியலாம்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x