Published : 24 Jul 2014 10:00 AM
Last Updated : 24 Jul 2014 10:00 AM

நஷ்டமடையும் தொழிலில் இருந்து வெளியேற புதிய நடைமுறை: ரிசர்வ் வங்கி தீவிர பரிசீலனை

நலிவடைந்து திவாலாகும் தொழில் நிறுவனங்களிலிருந்து தொழில் முனைவோர் வெளியேறு வதற்கு புதிய நடைமுறையை ரிசர்வ் வங்கி வகுத்து வருகிறது. இத்தகவலை ரிசர்வ் வங்கியின் செயல் இயக்குநர் பி.மஹாபாத்ரா தெரிவித்தார்.

முடங்கியுள்ள சொத்துக்களை நிர்வகிப்பது தொடர்பாக அசோ சேம் ஏற்பாடு செய்திருந்த கருத் தரங்கில் புதன்கிழமை பேசிய அவர், இந்தியாவில் திவாலாகும் தொழிலிலிருந்து வெளி யேறுவதற்கு உரிய நடைமுறை இல்லை. ஏனெனில் நம்மிடையே தோல்வியை ஏற்கும் பக்குவம் கிடையாது. அத்துடன் மேலும் இந்தியர்களுக்கு தோல்வியே பிடிக்காது. இதனால்தான் இதற்கு உரிய வழிகாட்டுதல் வகுக்கப்படவில்லை என்று சுட்டிக் காட்டினார்.

லாபம் தராத நிச்சயம் திவாலாகிவிடும் என்ற தொழிலிலிருந்து தொழில் முனைவோர் வெளியேறு வதற்கு உரிய வழிகாட்டுதலை வகுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வங்கிகள் தாங்கள் கடன் வழங்கிய தொழில் முனைவோருக்கு ஆலோசனை அளிக்க முடியும். இதனால் முற்றிலுமாக மூழ்கிப் போகும் நிலையிலிருந்து முன்னதாகவே வெளியேற முடியும்.

திவால் என்றவுடனேயே அனைத்தும் மூழ்கிப் போய், மஞ்சள் நோட்டீஸ் கொடுத்ததைப் போன்ற நினைப்புதான் பலரது மத்தியில் நிலவுகிறது. இதனாலேயே எவரும் தன்னை திவாலான பேர்வழி என அடையாளப்படுத்திக் கொள்ள விரும்புவதில்லை. ரிசர்வ் வங்கி வகுக்கும் வழிகாட்டுதல் மூலம் தொழில் முனைவோர் முன்னதாகவே நஷ்டத்தை எதிர்கொள்ளும் தொழிலிலிருந்து வெளியேற வழியேற்படும்.

சட்டரீதியாக இவ்விதம் வெளி யேறுவதற்கு நிறுவன சட்ட விதிகளில் இடமிருந்தாலும், வங்கிகளுக்கு இது தொடர்பாக உரிய வழிகாட்டுதலை அளிக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளதாக அவர் கூறினார். வங்கிகளின் வாராக் கடன் குறித்து பேசிய அவர், இதில் முடங்கிய சொத்துக்களும் அடங்கும் என்றார். இருப்பினும் பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன் அளவு அதிகரித்து வருவது கவலையளிப்பதாக அவர் தெரிவித்தார்.

வங்கிகளுக்கு அதிக தொகை கடனாக வைத்திருப்பவர்கள் குறித்த தகவல் தொகுப்பை ரிசர்வ் வங்கி உருவாக்கியுள்ளதாகவும் அவர் கூறினார். இதன் மூலம் ஒரு வங்கியில் அதிகம் கடன் பெற்று திரும்ப செலுத்தாதவர் பற்றிய விவரத்தை மற்ற வங்கிகள் பெற முடியும். இந்த தகவல் பகிர்வு காலாண்டு அடிப்படையில் பகிர்ந்து கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x