Published : 23 Aug 2014 10:00 AM
Last Updated : 23 Aug 2014 10:00 AM

தெரிந்ததை விட்டால் வம்பு, தெரியாததைத் தொட்டால் சங்கு!

‘அமெரிக்கால மைக்கேல் சாக்சன் கூப்டாக, சப்பான்ல சாக்கி சான் கூப்டாகன்னு இவன் வாராவாரம் அமெரிக்க பத்திரிகைகளில் வெள்ளைக்காரன் எழுதின புத்தகத்த படிச்சுட்டு கலர் கலரா ரீல் உடறான். திருவாரூர் பார்ட்டில கூப்டாக, பொன்னமராவதி பார்ட்டில கூப்டாக, அவ்வளவு ஏன், காரைக்குடி பார்ட்டில கூட கூப்டாகன்னு நம்மூர்காரன் சொன்னத எழுத மாட்டேங்கறான். என் கிரகம், இவன்கிட்ட மாட்டிக்கிட்டேன்.’ தமிழ்கூறும் நல்லுலக பெருமக்கள் இப்படி பேசுவது என் காதுகளில் விழுகிறது.

`தமிழை அலட்சியப்படுத்துகிறான். தமிழர்களை இருட்டடிப்பு செய்கிறான். வேட்டி கட்டிக்கொண்டு கிளப்புக்குத்தான் போக முடியவில்லையென்றால் ’தொழில் ரகசியம்’ பகுதியில் கூட தமிழருக்கு அனுமதி மறுக்கிறான்.’ இப்படியும் யாராவது பேசித் தொலைப்பார்கள் என்று தமிழ் பழமொழியை மேற்கோள் காட்டி கட்டுரை எழுதப் போகிறேன்.

ஓட்டாண்டி ஆனது யார்?

‘தெரிந்த தொழிலை விட்டவனும் கெட்டான். தெரியாத தொழிலை தொட்டவனும் கெட்டான்’.

இதை யார், எங்கு, எப்பொழுது, ஏன், எப்படி சொன்னார் என்பது தெரியாது. யாருக்கு சொன்னார் என்று தெரியும். ஒரே பிசினஸ் செய்தால் பிழைக்கமுடியாது என்று நினைப்பவரிடம். பல பிசினஸ் செய்வதே வளர்ச்சி என்று நினைப்பவரிடம். விதவித

மான பிசினஸ் செய்பவனே பிசினஸ்மென் என்று நினைத்து விழப்போவது தெரியாமல், அழப்போவது அறியாமல் தோல்வியை தழுவப் போகிறவரிடம்.

தொழில் துவங்கி, அதில் அகலக்கால் வைத்து, தொழிலை விருத்தி செய்கிறேன் பேர்வழி என்று ’பெப்பரப்பே’ என்று பல புதிய தொழில்களை துவங்கி, இருக்கும் பிசினஸை கவனிக்க நேரமில்லாமல் தொலைத்து, துவங்கிய புது பிசினஸை நடத்த முடியாமல் தவித்து, தேய்ந்து போய், காய்ந்து கருவாடாகி, ஓய்ந்து, ஒரம்கட்டப்பட்டு, ஒதுக்கப்பட்டு ஓட்டாண்டி ஆனவர்கள் ஓராயிரம்.

தெரிஞ்ச தொழிலை விட்டு தெரியாத தொழில் தொட்டு கெட்டவன் கதை சந்துக்கு சந்து சகட்டுமேனிக்கு உண்டு. கிக்கு கொடுக்கும் சரக்கு விற்று முறுக்கென்று இருந்த லிக்கர் மேன் விஜய் மல்லையா தெரியாத விமான தொழிலை தொட்டு பெக்கர் மேன் ஆன கதை பிரபஞ்சம் முழுவதும் பிரசித்தி.

ஆகாய மார்க்கத்தில்தான் இந்த அவலம் என்றால் தரை மீதும் தரித்திரம் தாண்டவமாடுகிறது. அதில் ஒன்று ‘பாரதி ஏக்ஸா’ இன்ஷ்யூரன்ஸ் கம்பெனி.

பாரதி ‘ஏர்டெல்’ என்னும் பிராண்டை துவக்கி செல்போன், லேண்ட்லைன், பிராட்பேண்ட் என்று டெலிபோன் ஒயரை பிடித்துக்கொண்டு படிப்படியாய் முன்னேறியது. இது யாருக்கு பொறுத்ததோ என்னவோ கம்பெனி ஓனர் சுனில் மித்தலுக்கு பொறுக்கவில்லை.

தெரியாத பாதை

சும்மா இருக்கிற சங்கு தானே என்று இன்ஷூயூரன்ஸ் பிசினஸை எடுத்து ஊதினார். டெலிபோன் பிசினஸ் தெரிந்த மனிதர், தெரியாத தொழிலைத் தொட்டார். இன்று ஏக்ஸா கம்பெனிக்கே இன்ஷ்யூரன்ஸ் தேவைப்படும் போலிருக்கிறது. கம்பெனியை விற்றுவிடலாம் என்று கூட பார்த்தார், முடியவில்லை.

இந்தியன் மல்டிநேஷனல் என்று தனக்குத் தானே மார் தட்டிக்கொண்ட ‘வீடியோகான்’ தெரியாத செல்போன் சேவை பிசினஸில் இறங்கி அது ராங் நம்பர் ஆகி ‘இந்த தடத்திலுள்ள பிசினஸ்கள் பிசியாக இருக்கின்றன, நீங்கள் உங்களுக்கு பரிச்சயமான பழைய தொழிலை மட்டும் பார்க்கவும்’ என்று கூறப்பட்டுவிட்டது.

ஆதித்யா பிர்லா குழுமம் அதுவரை ஒழுங்காக விற்று வந்த ‘த்ரினேத்ரா’ என்ற கம்பெனியை வாங்கி ‘மோர்’ என்று பெயர் மாற்றம் செய்து தெரியாத சூப்பர்மார்க்கெட் தொழிலில் இறங்கியது. அந்த மோர் இன்று புளித்து வழிகிறது.

தெரியாத தொழிலை தொட்டு சட்டி சுட்ட கேசுகள் தமிழ்நாட்டிலும் உண்டு. புன்னகை அதிபர் `பாலு ஜுவல்லர்ஸ்’ என்ற பொன்நகைக் கூடத்தில் சிந்திய புன்னகை சோகமாய் மாறியது, சம்பந்தமே இல்லாத ‘பாம்பன் ஆயில்’ என்ற தெரியாத பிசினஸில் கால் வைத்து வழுக்கி விழுந்த போதுதானே.

கோடு போடுகிறேன், எந்த கம்பெனி என்று நீங்களே ஊகித்துக்கொள்ளுங்கள். நல்லெண்ணெய் விற்று நல்ல நிலையில் இருக்கும் கம்பெனி நைட்டி விற்கப் போய் அது முடியாமல் அந்த சோகத்தை மறக்க நொண்டி அடிக்க வேண்டிய நிலை வந்ததை என்னவென்று சொல்ல. ஆஸ்பத்திரி கட்டி அதில் கொடியும் சேர்த்து கட்டி பறந்த கம்பெனி அதே பெயரில் தெரியாத ஹோட்டல் தொழிலில் இறங்கி அது சீக்காகி, சிக்காகி தன் ஆஸ்பத்திரியிலேயே அட்மிட் ஆனதைத்தான் எங்கு சொல்லி அழ.

திருந்தச் செய்தவர்கள்

தெரியாத தொழிலைத் தொடங்கி தெருவிற்கு வந்தவர்கள் லிஸ்டைப் போட இந்தப் பகுதி பத்தாது. சப்ளிமெண்டே போடவேண்டும்!

செய்யும் தொழிலே தெய்வம் என்பதில் சின்ன திருத்தம். செய்யும் தொழிலே குலதெய்வம். குலத்திற்கு ஒரு தெய்வம். ஒரே தெய்வம்! அதை மானசீகமாய், மரியாதையாய், மனதார பூஜை செய்யுங்கள். ஆரத்தி காட்டி, அர்ச்சனை செய்து அனுதினமும் அனுஷ்டித்து வாருங்கள். அனுக்கிரஹம் கிடைக்கும்.

எல்லாருக்கும் எல்லாமும் தெரிவதில்லை. தெரிந்த தொழிலை மட்டும் செய்யுங்கள். அதிலேயே வளர எத்தனையோ மார்க்கம் உண்டு. அதில் மட்டுமே பயணியுங்கள். இருப்பதை விட்டு பறப்பதற்கு ஆசைப்படாதீர்கள். அகலக் கால் வைக்காதீர்கள். வைத்தால் முன்னேயும் போக முடியாது. முன்னேறவும் முடியாது. வழவழவென்று வாழைப்பழத் தோல் மிதித்து வழுக்கியது போல் வக்கணையாக விழலாம். வீங்கும் அளவுக்கு வாங்கிக் கட்டிக்கொள்ளலாம்.

ஒரே பிசினஸில் இறங்கி, அதிலேயே குறியாய் இருந்து, அதை மட்டுமே நம்பி, அதிலேயே வளர்ந்து, அமோகமாக தழைக்கும் கம்பெனிகள் ஏராளம். அப்பேர்ப்பட்ட கம்பெனிகள் சிலதை இதே தொழில் ரகசியம் பகுதியில் பரவலாகப் படித்திருப்பீர்கள். அதைப் பார்த்துப் புரிந்துகொள்ளுங்கள்.

`தாகம் தீர்க்கும் தொழிலில் இருக்கிறோம்’ என்று அறுதியிட்டு அதே ரூட்டில் செல்லும் `பெப்சிகோ’. ‘பால் வியாபாரம் மட்டுமே தெரியும்’ என்று பால் பொருட்களை மட்டுமே விற்று பொங்கும் ‘ஹட்சன்’. இரண்டு சக்கர வண்டிகளோடு மட்டுமே இரண்டரக் கலந்து கலக்கும் ‘டிவிஎஸ்’. ’எங்கள் வேர் சாஃப்ட்வேர்’ என்று அதை மட்டும் கட்டிக்கொண்டு ஆனந்தக் கண்ணீருடன் அழும் ‘காக்னிசெண்ட்’.

கார் விற்பதைத் தவிர யான் ஒன்றும் அறியேன் பராபரமே என்று பிரகாசிக்கும் ’மாருதி சுஸுக்கி’. இது போல் இன்னும் எத்தனையோ ஏகபத்தினி பிசினஸ்கள் உண்டு!

ஒன்றே குலம், ஒருவனே தேவன், ஒரே பிசினஸ். இதுவே உயரும் வழி. இந்த உண்மையை உணருங்கள், உயருங்கள்.

தெரிந்த தொழிலை விடாதீர்கள். தெரியாத தொழிலை தொடாதீர்கள். விட்டால் வம்பு. தொட்டால் சங்கு! அப்புறம் உங்கள் இஷ்டம்.

satheeshkrishnamurthy@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x