Last Updated : 29 Apr, 2017 06:01 PM

 

Published : 29 Apr 2017 06:01 PM
Last Updated : 29 Apr 2017 06:01 PM

ஜிஎஸ்டி வரியால் இந்தியாவின் வளர்ச்சி 8%-க்கும் மேல் உயரும்: சர்வதேச செலாவணி நிதியம் கணிப்பு

சரக்கு மற்றும் சேவை வரி வரும் ஜூலை 1-ம் தேதியில் இருந்து அமல்படுத்தப்பட உள்ளது. இதனால் நடுத்தர காலத்தில் எட்டு சதவீதத்துக்கு மேல் வளர்ச்சி இருக்கும். மேலும் இந்த சீர்திருத்தம் எதிர்காலத்தில் நல்ல வளர்ச்சியை கொடுக்கும் என சர்வதேச செலாவணி நிதியம் கணித்திருக்கிறது.

சர்வதேச செலாவணி மையத்தின் துணை நிர்வாக இயக்குநர் தாவோ ஸேங் (Tao Zhang) இவ்வாறு கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது: இந்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் மிகவும் திருப்தியாக இருக்கிறது. எதிர்காலத்தில் இந்த நடவடிக்கைகள் நல்ல பலனை கொடுக்கும்.

வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியாவில் அதிக வளர்ச்சி இருக்கிறது. இதே வேகத்தில்தான் இந்தியாவின் வளர்ச்சி இருக்கும். நடப்பு நிதி ஆண்டில் 7.2 சதவீதம் இருக்கும் என ஐஎம்எப் ஏற்கெனவே கணித்திருக்கிறது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தது இந்தியாவுக்கு மிகவும் சாதகமாகும். அதனால் இந்தியாவில் பொருளாதார நடவடிக்கைகள் வேகமடைந்து வருகின்றன. தவிர பணவீக்கமும் குறைந்திருக்கிறது.

இந்தியாவை பொறுத்தவரை கவலைப்படும் விஷயம் வங்கித்துறைதான். வங்கிகளின் வாராக்கடன் இன்னும் பெருமளவில் இருக்கிறது. இது பொருளாதாரத்தில் பாதிப்புகளை உருவாக்கும். இந்தியா தனது சீர்திருத்தங்களை தொடரவேண்டும். அடுத்து தொழிலாளர் சீர்திருத்தங்களை இந்தியா மேற்கொள்ள வேண்டும். அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இதன் மூலம் வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும். பெண் பணியாளர்களின் எண்ணிக்கைகள் உயரும்.

அடுத்து விவசாய உற்பத்தியை உயர்த்துவதற்கு செய்ய வேண்டிய பணிகள் அதிகம் இருக்கின்றன. இதன் மூலம் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த முடியும். தவிர பணவீக்கத்தையும் கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என தெரிவித்தார்.

இவர் சர்வதேச செலாவணி மையத்தில் துணை நிர்வாக இயக்குநராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22-ம் தேதி பொறுபேற்றுக்கொண்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x