Published : 26 Oct 2016 04:18 PM
Last Updated : 26 Oct 2016 04:18 PM

என்னை நீக்கிய விதம் இதுவரை கார்ப்பரேட் வரலாற்றில் நடக்காதது: சைரஸ் மிஸ்ட்ரி

தான் நீக்கப்பட்ட விதம் இதுவரை கார்ப்பரேட் வரலாற்றில் நிகழாதது என்று டாடா குழும சேர்மன் பதவியிலிருந்து நீக்கப்பட்ட சைரஸ் மிஸ்ட்ரி தெரிவித்துள்ளார்.

டாடா சன்ஸ் குழுமத் சேர்மன் பதவியிலிருந்து நீக்கப்பட்ட சைரஸ் மிஸ்ட்ரி நிறுவன இயக்குநர்கள் குழுவுக்கு எழுதிய மின்னஞ்சலில் தான் நீக்கப்பட்ட விதம் இதுவரை கார்ப்பரேட் வரலாற்றில் நிகழாதது என்று கூறியுள்ளார்.

இயக்குநர்கள் குழுவின் இந்த முடிவு தனக்கு பெரும் அதிர்ச்சியளித்ததாக அவர் அதில் குறிப்பிட்டுள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

“இந்தத் திடீர் முடிவும் அதற்கான காரணங்களை விளக்காததும் ஏற்படுத்திய ஊகங்கள் நிறுவனத்திற்கும் தனக்கும் அளவிடமுடியாத அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் கடிதம் அழுந்தக் கூற விரும்புவது என்னவெனில், கார்ப்பரேட் நிர்வாகமின்மை மற்றும் இயக்குநர்கள் குழுவின் செயல்பாடு நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருக்கவில்லை என்பதன் ஒட்டுமொத்த வெளிப்பாடாக எனது நீக்கம் அமைந்துள்ளது என்பதையே” என்று தன் மின்னஞ்சலில் சைரஸ் மிஸ்ட்ரி தெரிவித்துள்ளார்.

மேலும் டாடா குழுமத்தின் பல்வேறு வர்த்தகங்கள் குறித்த விவகாரங்களையும் அவர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். அயல்நாட்டு நிறுவனங்களை வாங்குவது உட்பட தொலைத்தொடர்பு வர்த்தகம் மற்றும் ஸ்டீல் வர்த்தகம் தொடர்பான விவகாரங்களையும் தனது கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாக ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

அவர் ஏன் நீக்கப்பட்டார் என்பது குறித்து பல்வேறு கணிப்புகள் இருந்துவரும் நிலையில் குழுமத்தின் ட்ரஸ்டி வி.ஆர்.மேத்தா என்.டி.டிவிக்கு கூறும்போது, மிஸ்ட்ரி குழுமத்தின் மதிப்பீடுகளை மீறிவிட்டார் என்றார். மேலும் டாடா குழுமத்தின் நிதிநிலை முடிவுகளும் இவரது நிர்வாகத்தின் கீழ் மோசமடைந்ததாகவும் மிஸ்ட்ரியின் நீக்கத்துக்கு இதுவும் ஒரு காரணம் என்றும் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x