Published : 26 Sep 2016 10:46 AM
Last Updated : 26 Sep 2016 10:46 AM

விமானத்தில் வைஃபை?

முன்பெல்லாம் விமான போக்குவரத்துதுறை பற்றி யாரும் பெரியதாக கண்டு கொண்டதில்லை. அந்த துறையைப்பற்றி பேசுவதற்கு காரணம் இல்லை, கைக்கு எட்டாத தூரத்தில் இருந்தது தவிர இந்த துறையில் பெரிய போட்டியும் இல்லை. ஆனால் இப்போதைய நிலைமை வேறு. இந்த துறையில் போட்டி அதிகரித்துள்ளது. அதன் காரணமாக சலுகை விலையில் டிக்கெட் கிடைக்கிறது என்பதால் நடுத்தர மக்களும் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். சர்வதேச அளவில் விமான போக்குவரத்து வேகமாக வளரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகத் திகழ்கிறது.

விமானத்தில் செல்வது ஆடம்பரமாகத் தெரிந்தாலும், அடிக்கடி செல்பவர்களிடம் கேட்டால்தான் தெரியும் அவர்களின் அவஸ்தையை. மூன்று மணிநேரம் போன் பயன்படுத்த முடியாது. பக்கத்தில் இருப்பவர்களிடம் பேச முடியாது. படிக்கிற பழக்கம் இருப்பவர்கள் படிக்கலாம். அந்த பழக்கமும் இல்லை என்றால் அந்த பயணம் போர்தான்.

வாடிக்கையாளர்களைத் தக்கவைத் துக் கொள்வதற்கும், அவர்களுக்கு கூடுதல் வசதி வழங்குவதற்கும் விமான நிறுவனங்களிடையே போட்டி நடக்கிறது. இப்போது வைஃபை வசதியை அறிமுகப்படுத்துவது குறித்த பேச்சு எழுந்திருக்கிறது. சர்வதேச அளவில் 2009-ம் ஆண்டே இந்த வசதி இருந்தாலும் இந்திய நிறுவனங்கள் இப்போதுதான் இது குறித்து பேச ஆரம்பித்திருக்கின்றன.

விமானங்களில் வைஃபை வசதி அளிப்பதற்கு விமான போக்குவரத்து அமைச்சகம் இன்னும் அனுமதிக்கவில்லை. விமான போக்குவரத்து துறை செயலாளர் ஆர்.என்.சௌபே இம்மாத தொடக்கத்தில் கூறும்போது இன்னும் சில நாட்களில் இது குறித்து நல்ல செய்தி வரும் என்று கூறியிருந்தார். ஆனால் இதுவரை இது குறித்த விதிமுறைகள் வெளியிடப்படவில்லை.

விமானங்களில் வைஃபை வசதி குறித்து விமான நிறுவனங்களிடையே மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் வைஃபை வசதிக்கு அரசு அனுமதிக்கும் பட்சத்தில் அது குறித்து பரிசீலனை செய்வோம் என்று குறிப்பிட்டிருக்கிறது. ஆனால் அதற்கு முன்பாக 220 மணி நேரத்துக்கு பொழுதுபோக்காக இலவச செயலியை வெளியிட்டிருக்கிறது. வரும் மார்ச் 2017 முதல் இந்த செயலியை பயன்படுத்த முடியும். இது வைஃபை வசதி இல்லை என்றாலும் விளையாட்டு, திரைப்படங்களை வாடிக்கையார்கள் பார்த்து ரசிக்க முடியும்.

இண்டிகோ நிறுவனம் கூறும்போது இந்தியாவில் அதிகபட்ச பயண நேரம் சுமார் மூன்று மணிநேரம். இதற்கு ஏன் அதிக செலவு பிடிக்கும் வைஃபை வசதியைச் செய்ய வேண்டும் என்று சில மாதங்களுக்கு முன்பு கூறியிருந்தது. பட்ஜெட் விமான நிறுவனங்கள் இந்த வசதியை செய்யும் போது டிக்கெட் கட்டணங்களை மாற்றி அமைக்க வேண்டி இருக்கும் என்று ஸ்பைஸ்ஜெட் கூறியிருக்கிறது.

ஆனால் விஸ்தாரா நிறுவனம், இது ஒரு சாதகமான மாற்றம். அரசு கொள்கை முடிவுகளை அறிவிக்கும் பட்சத்தில் இந்த திட்டத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்ல முடியும் என்று கூறியிருக்கிறது. இது செலவு பிடிக்கும் விஷயம், அதனால் உள்நாட்டு விமானங்களில் இது தேவையா என்னும் முடிவை எடுக்கவில்லை. ஆனால் வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங்களில் இது தேவை என்று கூறியிருக்கிறது.

புதிதாக வரும் மாற்றத்தை எதிர்கொள்ள தயாராக ஏர் ஏசியா இந்தியா இருக்கிறது. இதன் தாய் நிறுவனமான ஏர் ஏசியா மலேசியா சில குறிப்பிட்ட வழித்தடங்களில் வைஃபை வசதியை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

செயற்கைக்கோளுடன் சர்வர்களை இணைக்கும்பட்சத்தில்தான் விமானங் களில் வைஃபை வசதி கொடுக்க முடியும். விமானங்களில் வைஃபை வசதி செய்து தரக்கூடிய முக்கியமான நிறுவனம் கோகோ. மத்திய அரசு அனுமதி அளித்தாலும் அதிக செலவாகும் விஷயம் என்பதால் இந்திய நிறுவனங்கள் இந்த சேவையை இலவசமாக வழங்குமா அல்லது கட்டணம் வசூலிக்குமா? எவ்வளவு என்பது இன்னும் சில மாதங்களில் தெரிந்துவிடும்.

சர்வதேச அளவில் சில விமான நிறுவனங்கள் இலவச வைஃபை சேவை வழங்குகின்றன. சில விமான நிறுவனங்கள் ஒரு மணி நேரத்துக்கு என கட்டணம் வசூலிக்கின்றன. உதாரண மாக இங்கிலாந்தில் சராசரியாக 6 மணி நேரத்துக்கு 30 பவுண்ட் வசூலிக்கிறார்கள். அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தில் தினசரி மாதாந்திர பாஸ்களும் வழங்கப்படுகின்றன. சில விமான நிறுவனங்கள் குறிப்பிட்ட ஜிபி வரை இலவசமாக வழங்குகின்றன.

இன்னும் சில மாதங்களில் வாடிக்கை யாளர்களை கவரும் உத்திகளில் ஒன்றாக வைஃபை இருக்கப்போகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x