Last Updated : 26 Sep, 2016 11:05 AM

 

Published : 26 Sep 2016 11:05 AM
Last Updated : 26 Sep 2016 11:05 AM

பட்ஜெட் இணைப்பு வளர்ச்சியைத் தருமா?

இனி ரயில்வே பட்ஜெட் இல்லை. ஆம், 92 வருடமாக வாசிக்கப்பட்டு வந்த ரயில்வே பட்ஜெட் உரை இனி இந்திய நாடாளுமன்றத்தில் கேட்கப் போவதில்லை. நிதி ஆயோக் உறுப்பினர் பிபேக் தேப்ராய் குழு அளித்த பரிந்துரையின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததிலிருந்து அமைப்பு ரீதியான மாற்றங்களைச் செய்வதில் ஆர்வம் காட்டி வருகிறது. திட்டக் குழுவை நீக்கிவிட்டு நிதி ஆயோக் அமைப்பைக் கொண்டு வந்தது இதற்கு சிறந்த உதாரணம். அடுத்ததாக பட்ஜெட்டில் மாற்றங்களை கொண்டு வர முனைப்பு காட்டி வருகிறது.

கடந்த வாரம் பொது பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட்டை இணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அடுத்த வருடம் முதல் பிப்ரவரி முதல் வாரத்திலேயே பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்போவ தாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ரயில்வே பட்ஜெட்டை பொது பட்ஜெட் டுடன் இணைத்தது இந்திய அளவில் விவாதத்தை எழுப்பியுள்ளது. தொழிற் சங்கங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால் ரயில்வே பட்ஜெட்டுக்கு என்று நீண்ட வரலாறு இருப்பதை மறுத்துவிட முடியாது.

ரயில்வே பட்ஜெட்டின் வரலாறு

பருத்தியை ஏற்றுமதி செய்வதற்கும் போர்க் காலங்களில் ஆயுதங்களை இடம் மாற்றுவதற்கும்தான் இந்தியாவில் ரயில் சேவையை பிரிட்டிஷார் தொடங்கினர். அதன் பிறகு பயணிகள் வாகனமாக மாறத்தொடங்கிய பிறகு நல்ல வளர்ச்சியை ரயில்வே துறை கண்டது. பிரிட்டிஷ் ரயில்வே பொருளாதார அறிஞர் வில்லியம் அக்வொர்த் அடங்கிய கமிட்டி பொது பட்ஜெட்டிலிருந்து ரயில்வே துறையை மட்டும் பிரித்து தனியான பட்ஜெட்டாக அறிவிக்க வேண்டும் என்று 1920ம் ஆண்டு பரிந்துரைத்தது. அதன்படி 1924-ம் ஆண்டு முதல் பொது பட்ஜெட்டிலிருந்து ரயில்வே பட்ஜெட் தனியாக பிரிக்கப்பட்டது. சுதந்திரத்துக்கு பிறகும் இந்த நடைமுறை தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வந்தது. தற்போது மீண்டும் பொது பட்ஜெட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலை

இந்திய பொதுத்துறை நிறுவனங்களில் மிகப் பெரியது இந்திய ரயில்வே. 13 லட்சம் பணியாளர்களுக்கும் 11 லட்சம் ஓய்வூதியதாரர்களும் ரயில்வே துறையின் கீழ் ஊதியம் பெறுகின்றனர். ரயில்வேயின் மொத்த வருமானத்தில் 65 சதவீதம் சரக்கு போக்குவரத்து மூலமாகவும் 25 சதவீதம் பயணிகள் போக்குவரத்து மூலமாகவும் வருகிறது. கடந்த சில வருடங்களோடு ஒப்பிடும் போது ரயில்வேயின் வருவாய் குறைந்து கொண்டே வருகிறது மாறாக செலவு அதிகரித்துள்ளது. கடந்த வருட பட்ஜெட்டில் உத்தேசித்ததை விட 5 சதவீதம் சரக்கு போக்குவரத்து வருவாய் குறைந்துள்ளது. பயணிகள் சலுகை, பொருளாதார வகையில் லாபம் இல்லாத ரயில்வே திட்டங்கள் என இவற்றிலேயே 30,000 கோடி இழப்பு ஏற்படுகிறது. பயணிகள் கட்டணம் சில வருடங்களாக உயர்த்தப்படவில்லை. நஷ்டத்தில் இயங்கினாலும் பொதுமக்கள் அதிருப்தியை சந்திக்க மத்திய அரசு விரும்பவில்லை.

இணைப்பிற்கான காரணங்கள்

ஆங்கிலேயர்கள் ஆட்சியில் ரயில்வே பட்ஜெட்டை தனியாக பிரித்ததற்கு காரணம் இருந்தது. அப்போதைய பொது பட்ஜெட்டில் மொத்த தொகையில் 85 சதவீதம் ரயில்வேயின் பங்கு இருந்தது. ஏனெனில் ஆங்கிலேயர்கள் மற்ற வளர்ச்சிப் பணிகளில் அதிக கவனம் செலுத்தவில்லை. ஆனால் கடந்த வருட பொது பட்ஜெட்டில் 10 சதவீதத்திற்கு குறைவாகவே ரயில்வேயின் பங்கு உள்ளது.

கடந்த வருடம் தாக்கல் செய்யப்பட்ட பொது பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கு 2.58 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. நிதியமைச்சர் பட்ஜெட் உரையை வாசிக்கும் போது இந்த தொகையை சாதாரணமாக சொல்லிவிடுவார். தனியாக தாக்கல் செய்யப்பட்ட ரயில்வேதுறை பட்ஜெட்டின் மொத்த மதிப்பே ரூ.1.2 லட்சம் கோடி மட்டுமே.

ஆங்கிலேயர் ஆட்சியின்போது, ரயில்வே துறையின் பங்கு பயணிகள் போக்குவரத்தில் 90 சதவீதமாகவும் சரக்கு போக்குவரத்தில் 75 சதவீதமாகவும் இருந்தது. தொழில்நுட்ப வளர்ச்சியால் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ள இந்தக் காலத்தில், ரயில்வே துறையின் பங்கு பயணிகள் போக்குவரத்தில் 20 சதவீதமாகவும் சரக்கு போக்குவரத்தில் 40 சதவீதமாகவும் குறைந்துவிட்டது.

பெரும்பாலும் ரயில்வே அமைச் சர்கள் தனியாக பட்ஜெட் அறிவிக்கும் பொழுது அவர்களது தொகுதிக்கே பல்வேறு திட்டங்களையும் புதிய ரயில்களையும் அறிவித்து விடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இந்திய அளவில் பார்க்காமல் ஒரு குறிப்பிட்ட பகுதியை மையப்படுத்துவதால் ரயில்வே துறையின் வளர்ச்சி பரவலானதாக இல்லை.

இணைப்பின் பயன்கள்

ரயில்வே துறையை இன்னும் மேம்படுத்த வேண்டியுள்ளது. சுதந்திரத்துக்குப் பிறகு வெறும் 12,000 கிலோ மீட்டருக்கு மட்டுமே இருப்புப் பாதை போடப்பட்டுள்ளது. சுதந்திரத்துக்கு முன்னர் 53,000 கிலோ மீட்டர் இருப்புப் பாதை இருந்தது குறிப்பிடத்தக்கது. உள்கட்டமைப்பு ரீதியாக ரயில்வே துறையின் வளர்ச்சி மிகக் குறைவாக உள்ளது. இதை மேம்படுத்துவதற்கு அதிக முதலீடுகள் தேவைப்படுகிறது. ரயில்வே பட்ஜெட் மூலம் ரயில்வே திட்டங்களுக்கு போதுமான நிதியை ஒதுக்கீடு செய்வதில் சிரமம் உள்ளதாக விவேக் தேவ்ராய் குழு கூறியுள்ளது. தற்போது இணைக்கப்படுவதன் மூலம் இந்த சிரமத்தைக் குறைக்கலாம்.

மேலும் ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அரசிடமிருந்து பெறும் தொகைக்கு டிவிடெண்டாக ரயில்வேதுறை மத்திய அரசுக்கு வழங்கி வருகிறது. இதனால் எந்தவொரு சாதகமான விளைவுகளும் இல்லை. மாறாக எதிர் விளைவுகளைத்தான் ஏற்படுத்துகிறது. தற்போது மத்திய அரசு 5 சதவீத டிவிடெண்டை வழங்கத் தேவையில்லை என கூறியிருக்கிறது. இதனால் ரயில்வேத் துறைக்கு 9,700 கோடி ரூபாய் மிச்சம். இதன் மூலம் பல உள்கட்டமைப்புத் திட்டங்களை செய்யமுடியும்.

தனியார் மயமா?

பொதுபட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட் இணைக்கப்படுவது குறித்து பல்வேறு விமர்சனங்களும் எழுகின்றன. ரயில்வே துறையை தனியார்மயப்படுத்தும் நோக்கில்தான் மத்திய அரசு இதை முன்னெடுத்துள்ளது என்று சிலர் வாதிடுகின்றனர். அதேபோல் ரயில்வே பட்ஜெட்டை பொது பட்ஜெட்டுடன் இணைத்திருப்பது ரயில்வே துறையை தனியார்மயப்படுத்துவதற்கு வைத்த முதல் படி என்று முன்னாள் ரயில்வே துறை அமைச்சர் தினேஷ் திரிவேதி குறிப்பிட்டுள்ளார்.

ஒருவர் நக்சல் பாதிக்கப்பட்ட பகுதிக்கு ரயில்வே சேவை வேண்டும் என்று கோரிக்கை வைக்கும் பொழுது நிதியமைச்சர் தற்போது நிதிப் பற்றாக்குறை உள்ளது அதனால் அதற்கு நிதி ஒதுக்க முடியாது என்று சொல்லும் நிலைமை வரும் என்றும் திரிவேதி கூறியுள்ளார்.

ஆனால் தற்போதைய மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு இணைப்புக்கு பிறகும் ரயில்வே துறையின் சுதந்திர தன்மைக்கு பாதிப்பு ஏற்படாது. விரைவில் ரயில்வே கட்டணங்களை முடிவு செய்ய குழு ஒன்றையும் அமைக்க இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

ஏழைகள் பயணிக்கக் கூடிய வகையில் இருக்க வேண்டுமா? அல்லது நாட்டின் ஜிடிபியை உயர்த்தும் ஒரு காரணியாக இருக்க வேண்டுமா? என்பது இந்திய ரயில்வே முன் மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது.

- devaraj.p@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x