Published : 08 Feb 2016 12:06 PM
Last Updated : 08 Feb 2016 12:06 PM

பசுமைக் கட்டிடம்

பசுமைக் கட்டிடம் என்பது இயற்கையான பொருட்களை பயன்படுத்தியும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களை பயன்படுத்தியும் கட்டிடம் கட்டப்படுவதாகும். மின்சாரப் பயன்பாட்டைக் குறைப்பதுதான் இதன் முக்கிய நோக்கம். மேலும் வீட்டைச் சுற்றிலும் மரம் செடி கொடிகள் அமைப்பதும் பசுமை வீடுகள் வடிவமைப்பில் உள்ளதால் ஆக்ஸிஜன் உற்பத்தியும் அதிக அளவில் நடைபெறும். இதன் மூலம் அந்த வீட்டில் வசிப்பவர்களுக்கு சுத்தமான காற்று கிடைக்கும்.

மரங்களை நடுவது, அதிக புகையை வெளியிடும் வாகனங்களுக்குத் தடை விதிப்பது உள்ளிட்ட பல நடவடிக்கைகள் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கவும், பாதுகாக்கவும் உலகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில்தான் பசுமை வீடுகள் (GREEN BUILDING) உருவாக்கம் என்கிற கருத்து உலகம் முழுவதும் பேசப்பட்டும், செயல்படுத்தப்பட்டும் வருகின்றன. பொதுவாக வீடு கட்ட வேண்டும் என்று முயற்சிப்பவர்கள் இயற்கைக்கு சாதகமான வீடாக கட்ட வேண்டும் என்று முயற்சிப்பதில்லை. காரணம் பசுமை வீடுகள் என்கிற கருத்து இன்னும் பல மக்களையும் சென்று சேரவில்லை என்பதுதான்.

அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்க, இயற்கை சூழலில், பாதிப்புகளை ஏற்படுத்தாத கட்டிடம் கட்டுவதுதான் நம் அடுத்த தலைமுறைக்கு அளிக்கக்கூடிய மிகப்பெரிய கொடை. அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வளர்ந்த நாடுகள் இதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன. ஒரு கட்டிடத்தை கட்ட திட்டமிடும்போதே சூழலுக்கு உகந்த கட்டிடமாக கட்ட முயற்சி செய்கின்றனர். இந்தியாவிலும் இத்தகைய முயற்சிகள் வேகமாக பரவி வருகிறது.

> பசுமைக் கட்டிட முயற்சிகள் மூலம் மின்சார பயன்பாட்டையும், தண்ணீரையும் மிச்சப்படுத்த முடியும்.

> இங்கிலாந்தில் மொத்தக் கட்டுமானத்தில் 40 சதவீத கட்டிடங்கள் பசுமை கட்டிடம்.

> அமெரிக்காவில் 30% கட்டிடம் பசுமை கட்டிட அமைப்பில் இருக்கிறது.

> இந்தியாவின் மொத்தக் கட்டுமானத்தில் 3% கட்டுமானங்கள் பசுமை கட்டிடமாகும்.





இந்தியாவின் முக்கிய பசுமைக் கட்டிடங்கள்

இந்திய தொழில்துறை கூட்டமைப்பு கட்டிடம், ஹைதராபாத்

2014-ம் ஆண்டு இந்தக் கட்டிடம் திறக்கப்பட்டது. இந்தியாவிலேயே முதன் முதலில் எல்இஇடி பிளாட்டினம் தரச் சான்றை பெற்றது. கட்டிடத்தைச் சுற்றி காற்றாலைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. உயிரியல் ரீதியிலான ஒரு குளமும் இந்த கட்டிடத்திற்கு வெளியே அமைக்கப்பட்டுள்ளது. தேவையான மின்சாரம் சூரியத் தகடுகள் மூலம் பெறப்படுகிறது.



கிரிசில் ஹவுஸ், மும்பை

இந்தக் கட்டிடத்திற்கு உள்ளே 14 பூங்காக்கள் உள்ளன. மேலும் இந்த கட்டிடத்தின் உட்பகுதியை அமைக்க பயன்படுத்தப்பட்ட பொருட்களை மறுசுழற்சி செய்யமுடியும். 70 சதவீத ஒளி இயற்கை வெளிச்சத்தின் மூலமே பெறப்படுகிறது. இதனால் 40 சதவீதம் மின்சாரம் சேமிக்கப்படுகிறது.



இன்ஃபோசிஸ் நிறுவனம், ஹைதராபாத்

460 ஏக்கரில் இன்ஃபோசிஸ் நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது. கட்டிடத்திலிருந்து வெளியேறும் கழிவு நீர் 100 சதவீதம் சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. கட்டிடத்துக்குள் குளிரூட்ட நீர் மூலம் குளிர்ச்சியடைய செய்யும் தொழில்நுட்பமான ரேடியண்ட் கூலிங் தொழில்நுட்பம் இங்கு பயன்படுத்தப்படுகிறது. புகழ்பெற்ற ஆஸ்டன் விருது இந்தக் கட்டிடத்திற்கு கிடைத்துள்ளது.



சுஸ்லான் ஒன் எர்த், புணே

2,300 பேர் தங்கக்கூடிய அளவிற்கு இந்தக் கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டிடம் குறைந்த ஆற்றலை உடைய பொருட்களால் கட்டப்பட்டுள்ளதால் கரியமில வாயு வெளியேறுவதைத் தடுக்கிறது. 90 சதவீதம் இயற்கை வெளிச்சத்தையே பயன்படுத்துகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x