Published : 23 Jan 2017 11:56 AM
Last Updated : 23 Jan 2017 11:56 AM

பங்குகளை எப்போது விற்கலாம்?

பெரும்பாலான முதலீட்டு ஆலோ சகர்கள் எப்போது பங்குகளை வாங்கலாம் என்பது குறித்து எழுதுவார்கள். ஆனால் சரியான சமயத்தில் பங்குகளை விற்பதும் முக்கியம். சில முதலீட்டாளர்கள் பங்குகளின் விலை உயரும் போது விற்றுவிடுகிறார்கள். வாங்கிய விலையை விட இரு மடங்கு அல்லது மூன்று மடங்கு உயர்ந்த பிறகு விற்றுவிடுகிறார்கள். ஆனால் நீண்ட கால அடிப்படையில் முதலீட்டாளர்கள் மிகப்பெரிய வாய்ப்பை இழக்கிறார்கள். பங்கின் அடிப்படையை பொறுத்து விற்கும் பட்சத்தில் பெரிய இழப்பை சந்திக்கமாட்டார்கள். கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் சந்தர்ப்பங்களில் முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பது குறித்த முடிவெடுக்கலாம்.

முதலீட்டு காரணம் தோல்வியடைந்தால்!

ஒவ்வொருவரும் பங்குகளில் முதலீடு செய்வதற்கு ஒரு காரணம் இருக்கும். அதிக சந்தை மதிப்பு, அதிக லாபம் கிடைக்கும் என முதலீடு செய்திருப்பார்கள். நீங்கள் என்ன காரணத்துக்காக ஒரு பங்கில் முதலீடு செய்கிறீர்களோ அந்த காரணங்கள் பொய்த்து போகும் பட்சத்தில் அந்த பங்கில் செய்யப்பட்டிருக்கும் முதலீட்டை எடுத்துவிடலாம்.

நிர்வாகக் கோளாறு

முதலீடு செய்திருக்கும் நிறுவனத்தில் அல்லது அந்த குழுமத்தில் நிர்வாக கோளாறு ஏற்படும் பட்சத்தில் அந்த பங்கில் இருந்து வெளியேறுவது நல்லது. பல விதமான நிர்வாகக் கோளாறுகள் உள்ளன. இயக்குநர் குழுவில் ஏற்படும் பிரச்சினை, குடும்ப பிரச்சினை, முக்கியமான நிர்வாகிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை, வரி சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஆகியவை முதலீட்டாளர்களுக்கு நல்ல செய்தி அல்ல.

ஆனால் இந்திய சூழ்நிலையில் இது போன்ற பிரச்சினைகள் சாதாரணமாக நடப்பவை. டாடா மிஸ்திரி விவகாரம் வெளியே வந்த சமயத்தில் டாடா ஸ்டீல் மற்றும் டாடா எலெக்ஸி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் 5 சதவீதம் உயர்ந்தன. அதேபோல குஜாராத் விரிவாக்க பிரச்சினை ஏற்பட்டதில் இருந்து மாருதி சுசூகி பங்கு 350 சதவீதம் உயர்ந்தது.

நிறுவனத்தின் தொழிலுக்கு நிர்வாக கோளாறால் பாதிப்பு இல்லை என்றால் பிரச்சினை இல்லை. ஆனால் இதுபோன்ற நிர்வாக கோளாறுகளை எளிதாக எடுத்துக்கொள்ள கூடாது. இந்த விஷயத்தில் நிறுவனத்தின் செயல்பாடுகள் மாற்றம், நிறுவனத்தால் பிரச்சினைக்கு போதுமான விளக்கம் கொடுக்க முடியவில்லை என்றால் ஒரு நொடியில் நிறுவனத்தின் சந்தை மதிப்பு அதள பாதாளத்துக்கு செல்லக்கூடும். அதன் பிறகு அந்த சந்தை மதிப்பு மீண்டும் உயராது.

உதாரணத்துக்கு ட்ரீஹவுஸ் எஜுகேஷன் என்னும் கல்வி நிறுவனத்தின் பங்கு 2015-ம் ஆண்டு வரை முதலீட்டாளர்களின் விருப்பமான பங்காக இருந்தது. இந்த நிறுவனத்துக்கு வர வேண்டிய தொகை அதிகம் இருக்கிறது என ஆலோசனை நிறுவனம் ஒன்று எச்சரிக்கை செய்தது. இந்த சமயத்திலேயே அந்த பங்கினை விற்ற வாடிக்கையாளர்கள் தப்பித்தார்கள். இல்லை எனில் 95 சதவீதம் சந்தை மதிப்பு சரிந்திருக்கும். இதேபோல ஆன்மொபைல் குளோபல், ஹீலியாஸ் அண்ட் மாத்திசன் உள்ளிட்ட பல நிறுவனங்களை இதுபோன்ற கணக்கு முறைகேடுகளுக்கு உதாரணமாக கூறலாம்.

தவறான பாதையில் தொழில்

ஒரு விஷயம் சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது என்றால் அதனை அப்படியே விடவேண்டும். ஆனால் பெரும்பாலான சமயங்களில் இந்திய நிறுவனங்களின் நிறுவனர்கள் அதனை மறந்துவிடுகிறார்கள். பெரும்பாலான நிறுவனர்கள் தங்களது சொந்த ஆசைக்காக நிறுவனத்தின் திசையையே மாற்றுகிறார்கள். அதன் பிறகு அந்த பங்குகளுக்கு இறங்குமுகம்தான்.

ஒரு நிறுவனம் பெரிய தொகையில் வேறு நிறுவனத்தை வாங்குவது, அப்போதைக்கு பிரபலமாக இருக்கும் புதிய துறையில் முதலீடு செய்வது, எதிர்காலத்தை கணிக்காமல் அதிகளவு விரிவாக்க பணிகளில் ஈடுபடுவது, அதிக தொழில்களில் முதலீடு செய்வது போன்ற காரணங்களே நிறுவனத்தில் இருந்து வெளியேற போதும். மேலே கூறிய செயல்களை கடன் வாங்கி செய்யும் பட்சத்தில் அப்போதே வெளியேறுவது நல்லது.

அதிக சந்தை மதிப்பு

ஒரு நல்ல நிறுவனத்தின் பங்குகளை நியாயமான விலையில் வாங்கிய பட்சத்தில், அந்த பங்கின் சந்தை மதிப்பு எவ்வளவு உயர்ந்தாலும் பிரச்சினை இல்லை என பங்குச்சந்தையில் நீண்டகாலம் முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் கூறுவார்கள். ஆனால் பெரும்பாலான பங்குச்சந்தை சரிவுகள் சந்தை மதிப்பு அதிகமாக இருக்கும் போது நடந்தவையாகும். ஒரு நிறுவனத்துக்கு எவ்வளவு விலையும் கொடுக்க முதலீட்டாளர் தயாராக இருக்கிறார் என்றால் அங்கு சரிவு தொடங்கும்.

1999-ம் ஆண்டுக்கும் 2002-ம் ஆண்டுக்கும் இடையே தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பி.இ விகிதம் மூன்று இலக்கங்கள் இருந்தது. டாட் காம் குமிழ் சமயத்தில் இந்த பங்குகள் கடும் சரிவை சந்தித்தன. அதேபோல கடந்த 2007-ம் ஆண்டு கட்டுமான துறை நிறுவனங்களின் பிஇ விகிதம் 60-70 என்னும் நிலையில் இருந்தது. அதனை தொடர்ந்து முதலீட்டாளர்களுக்கு கடும் சேதத்தை உருவாக்கியது.

பிஇ விகிதம் அதிகமாக இருப்பதை எப்படி கண்டுபிடிப்பது. ஐந்து வருட சராசரியை விட பிஇ விகிதம் அதிகமாக இருக்கிறது என்றால் அது எச்சரிக்கை மணிதான்.

- aarati.k@thehindu.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x