Published : 15 Dec 2014 03:53 PM
Last Updated : 15 Dec 2014 03:53 PM

நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு

தொழில் நிறுவனங்களுக்கு உள்ள சமூகப் பொறுப்பைத்தான் சிஎஸ்ஆர் (CORPORATE SOCIAL RESPONSIBILITY) என்கிறோம். பெரிய நிறுவனங்கள் தங்களது லாபத்திலிருந்து குறிப்பிட்ட அளவு தொகையை சமூக நடவடிக்கைகளுக்கு செலவிட வேண்டும் என்பதுதான் இது. சில நிறுவனங்கள் இதை செயல்படுத்தி வந்தாலும், இதைக் கண்காணித்து முறைப்படுத்த வழிமுறைகள் எதுவும் இதுவரை இல்லாமல் இருந்தது. ஏப்ரல் 2014 முதல் இதற்கென தனி சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களது வளர்ச்சிக்குத் தேவையான மனித வளங்களையும், இயற்கை வளங்களையும் இந்த சமுதாயத்திலிருந்துதான் எடுத்துக் கொள்கின்றன. இதற்கு பிரதிபலனாக அந்த சமுதாயத்துக்கு திருப்பி செலுத்தும் நடவடிக்கைதான் இது. நிறுவனங்களின் இந்த நடவடிக்கைகளை நிறுவனங்கள் விவகாரத்துறை அமைச்சகம் கண்காணிக்கிறது.

நிறுவனங்கள் சட்டம் 2013-ன் படி, ரூ.500 கோடி நிகர மதிப்பு கொண்ட நிறுவனங்கள், அல்லது ரூ.1,000 கோடி வர்த்தகம் செய்யும் நிறுவனங்கள் அவர்களது லாப மதிப்பிலிருந்து 2 சதவீதத்தை இதற்கு செலவு செய்ய வேண்டும். தவிர ரூ 5 கோடியை நிகர லாபமாக ஈட்டியிருக்கும் நிறுவனங்களும் கட்டாயமாக 2 சதவீத தொகையை சமூக நடவடிக்கைகளுக்கு செலவிட வேண்டும் என்கிறது இந்த சட்டம். 2014 ஏப்ரல் 01 முதல் இந்த சட்டம் இந்தியாவில் நடைமுறையில் உள்ளது.

இந்தியாவில் சுமார் 12,000 நிறுவனங்கள் இந்த சட்டத்தின்படி தகுதி பெற்ற நிறுவனங்கள் என நிறுவனங்கள் விவகாரத்துறை அமைச்சகம் தெரிவிக்கிறது. மேலும் தற்போது இந்த சட்டத்தின்படி 5,000 கோடி ரூபாய் இந்த நிறுவனங்கள் சிஎஸ்ஆர் நடவடிக்கைகளுக்கு செலவிடும் என எதிர்பார்ப்பதாக கம்பெனிகள் விவகாரத்துறை அமைச்சக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

சமூகத்தில் நேர்மறையான எண்ணங்களை கொண்டுவர வேண்டும் என்பதுதான் இதன் நோக்கம். கலாச்சாரம், பண்பாட்டு நடவடிக்கைள், சுற்றுச்சூழல், கல்வி, மருத்துவம், வணிக மேம்பாடு, போன்றவற்றுக்கு இந்த தொகையைக் செலவு செய்ய வேண்டும் என்கிறது இந்த சட்டம். நிறுவனங்கள் நேரடியாக இந்த தொகையை செலவு செய்யலாம். அல்லது அறக்கட்டளை மூலமாகவும் லாப நோக்கமற்ற சேவை நிறுவனங்கள் மூலமாகவும் இந்த தொகையை செலவு செய்யலாம்.

பேரிடர் கால உதவிகள், பிரதமரின் நிவாரண உதவிகள், அறிவியல் ஆய்வுகள், தனிநபர் உதவிகள் எனவும் இந்த தொகையை நிறுவனங்கள் செலவிடுகின்றன. சிஎஸ்ஆர் நடவடிக்கைகளுக்கு செலவிடுவது என்பது நிறுவனத்தின் மதிப்பையும் நற்பெயரையும் மறைமுகமாக உயர்த்தும். இதனால்தான் நிறுவனங்கள் இதற்கு முன்னுரிமை கொடுக்கின்றன.

இன்போசிஸ் நிறுவனம் இந்த ஆண்டில் மட்டும் சுமார் 240 கோடி ரூபாய் கல்வி, மருத்துவம், மாணவர்களுக்கான மதிய உணவு போன்ற திட்டங்களுக்கு செலவு செய்துள்ளது. டாடா கெமிக்கல் நிறுவனம் வன உயிர் பாதுகாப்பு சார்ந்து இந்த வருடம் 12 கோடிகள் செலவழித்துள்ளது.

சீமென்ஸ் நிறுவனம் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் அம்லி என்கிற கிராமத்திற்கு 12 கிலோவாட் சூரிய மின் உற்பத்தி நிலையத்தை அமைத்துக் கொடுத்துள்ளது. இப்படி ஒவ்வொரு நிறுவனங்களும் தங்களுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. தொழில்பயிற்சி, வணிக நடவடிக்கைகளுக்கு உதவுவது, வீடுகள், கட்டிடங்கள் கட்டித்தருவது போன்ற நடவடிக்கைகளும் இதில் சேரும்.

சிஎஸ்ஆர் 2014 சட்டத்தின்படி அடுத்த ஆண்டு முதல் இந்த நிறுவனங்கள் சிஎஸ்ஆர் நடவடிக்கைகளுக்கு ஒதுக்கும் தொகை ரூ.20 ஆயிரம் கோடியாக இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக புள்ளி விவரங்கள் சொல்கிறது. இப்படி செலவிடப்படும் தொகைகள் மூலம் மக்களின் சமூக, நிலைகளில் மாற்றங்கள் ஏற்படும். இது நமது பொருளாதாரத்திலும் மாற்றங்களை உண்டாக்கும் என்று நம்பலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x