Last Updated : 23 Jan, 2017 12:12 PM

 

Published : 23 Jan 2017 12:12 PM
Last Updated : 23 Jan 2017 12:12 PM

ஜேட்லி என்ன செய்யப் போகிறார்?

பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு மக்களுக்கு எதிலுமே பற்றில் லாமல் போய்விட்டது. எதிலும் அலுப்பும் சலிப்புமாக பெரும்பாலோரின் வாழ்க்கையை மாற்றியதில் மத்திய அரசுக்கு பெரும் பங்குண்டு.சுனாமி போல மக்களின் அன்றாட வாழ்க்கையை மட்டுமின்றி அனைத்துத் துறைகளையும் முடக்கி யுள்ள பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் தாக்கத்திலிருந்து மீளும் வகையில் பட்ஜெட் இருக்குமா?

ஜேட்லி தாக்கல் செய்ய உள்ள நான்காவது பட்ஜெட். இந்த பட்ஜெட்டில் பல மாற்றங்கள் முதல் முறையாக செய்யப்பட்டுள்ளன. வழக்கமாக பிப்ரவரி கடைசி நாளில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் இப்போது பிப்ரவரி முதல் நாளன்று தாக்கல் செய்யப்படுகிறது. திட்டம் மற்றும் திட்டம் அல்லாத செலவுகள் என்றிருந்த நிலை முற்றிலு மாக நீக்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்றம் கூடும் முதல் நாளன்று (ஜனவரி 31) பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப் பட உள்ளது. வழக்கமாக பட்ஜெட் கூட்டத்தின்போது சில நாள்களுக்கு முன்பாக ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும். ரயில்வே துறைக்கென தனி பட்ஜெட் கிடையாது. இரண்டையும் சேர்த்து ஒரே பட்ஜெட்டாக முதல் முறையாக ஜேட்லி தாக்கல் செய்ய உள்ளார். 92 ஆண்டுகளாக ரயில்வே துறை தாக்கல் செய்துவந்த பட்ஜெட் இப்போது முடிவுக்கு வந்துள்ளது.

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) ஜூலை 1 முதல் அமலாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும் இந்த பட்ஜெட்டில் கடைசியாக சேவை வரி, உற்பத்தி வரி குறித்த விவரங்கள் இடம்பெறும். மத்திய அரசு திட்டம், மாநில அரசு திட்டம் என இரண்டு வகை திட்ட ஒதுக்கீடு கிடையாது. மத்திய அரசு திட்டம் அல்லது மத்திய திட்டம் என்ற புதிய முறை அமல்படுத்தப்படுகிறது.

1860-ம் ஆண்டு முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட் 1947-ம் ஆண்டு நவம்பர் 26-ல் தாக்கல் செய்யப் பட்டது. பொருளாதார ஆய்வறிக்கை 1964-ல் தனியாக தாக்கல் செய்யப்பட்டது. பொதுவாக பட்ஜெட் என்றாலே அதுகுறித்த எதிர்பார்ப்பு நடுத்தர மக்கள் மத்தியில்தான் அதிகமிருக்கும். பணக்காரர்களுக்கு கவலையில்லை. வரி அதிகரித்தால் அதை பொதுமக்கள் தலையில் எளிதாக தள்ளிவிடுவார்கள். அன்றாட வாழ்க்கையே கேள்விக்குறி யாக நிற்கும் ஏழைகளுக்கு பட்ஜெட் பற்றிய கண்ணோட்டமே கிடையாது.

கறுப்புப் பணத்தை ஒழிக்க அரசு பண மதிப்பு நீக்கம் என்ற துல்லியத் தாக்குதல் (Surgical Strike) நடத்திய பிறகு மத்திய அரசு தாக்கல் செய்யும் பட்ஜெட் இதுவே.

வருமான வரி விலக்கு வரம்பு உயருமா? ஆண்டுதோறும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்போது மாதாந்திர சம்பளதாரர்களின் மிகுந்த எதிர்பார்ப்பு இதுதான். வாழ்க்கைத் தரமும், வருமானமும் உயர்ந்துள்ள நிலையில் வரி வரம்பு உயருமா என்ற எதிர்பார்ப்பு நியாயமானதே. இப்போது ரூ.2.5 லட்சமாக உள்ள வருமான வரி விலக்கு வரம்பை ரூ. 5 லட்சமாக உயர்த்துவார் என 58 சதவீத மக்கள் எதிர்பார்ப்பதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

80-சி பிரிவில் விலக்கு:

இந்தப் பிரிவில் தற்போது ஆண்டுக்கு ரூ. 1.50 லட்சமாக உள்ள முதலீட்டு விலக்கு வரம்பு ரூ. 3 லட்சமாக உயர்த்தப்படலாம் என்ற யூகங்கள் நம்பிக்கை அளிப்பதாக உள்ளன. தனியார் முதலீடுகள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாத நிலையில் முதலீடுகளை ஊக்குவிக்க ஜேட்லி இந்த சலுகையை நிச்சயம் அளிப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

சேமிப்பு மீதான வரி (80டிடிஏ)

சேமிப்புக்குக் கிடைக்கும் வட்டி மீதான வரி விதிப்பை ரூ. 10 ஆயிரத்திலிருந்து ரூ. 25 ஆயிரமாக உயர்த்துவார் என்ற எதிர்பார்ப்பும் மேலோங்கி நிற்கிறது.

மருத்துவ சலுகை:

இன்றைய உலகில் பணம் சம்பாதிப்பதைவிட நோயின்றி இருப்பதே மிகவும் சிரமம். நடுத்தர பிரிவினரின் மிகப் பெரிய அச்சுறுத்தலே மருத்துவ செலவுகள்தான். மருத்துவ செலவுக்கு ரூ. 15 ஆயிரம் வரைதான் விலக்கு அளிக்கப்படுகிறது. நீண்டகாலமாக உயர்த்தப்படாமல் உள்ள இந்த வரம்பை ரூ. 50 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

வீட்டுக் கடன் தவணை வட்டி சலுகை:

அதிகரித்துள்ள ரியல் எஸ்டேட் விலையில் வீட்டுக் கடன் தவணைக்கான வட்டிச் சலுகை வரம்பு ரூ. 2 லட்சமாக உள்ளது. இதை ரூ. 4 லட்சமாக உயர்த்த வேண்டும் என்பதே கடன்பட்டு சொந்தவீடு வாங்கிய பிறகும் வரியின் பிடியில் தவிக்கும் பலரின் எதிர்பார்ப்பு. இதேபோல வீடு வாங்க முத்திரைத்தாள் கட்டணத்துக்கு 80 சி பிரிவின் கீழ் விலக்கு அளிக்க வேண்டும் என்று பலரும் எதிர்பார்க்கின்றனர்.

கல்விக் கட்டணம்:

மருத்துவ செலவுக்கு அடுத்தபடியாக நடுத்தர மக்களின் மிகப் பெரிய செலவு கல்விக் கட்டணம்தான். கல்விக் கட்டணத்துக்கு 80-சி பிரிவில் விலக்கு அளிப்பதற்குப் பதிலாக தனியாக முழுமையான விலக்கு அளிக்க வகை செய்யும் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று பிள்ளை களை நர்சரிக்கு அனுப்பி லட்சங்களை கட்டணமாக செலுத்துவோரின் எதிர் பார்ப்பாக உள்ளது.

கட்டமைப்பு கடன் பத்திரம்: கட்டமைப்புக்கான கடன் பத்திரத்தில் முதலீடு செய்யும் தொகையில் அதிகபட்சம் ரூ. 20 ஆயிரம் வரை விலக்கு அளிக்கப்படுகிறது. இதை மேலும் உயர்த்தலாம் என்று முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

மூத்த குடிமக்கள்:

பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்களில் பலரும் குறிப்பிட்ட தொகையை வங்கியில் முதலீடு செய்து அதிலிருந்து கிடைக்கும் வட்டித் தொகையில் காலம் கழிக்கின்றனர். வட்டித் தொகைக்கு வரி விதிக்கும் வரம்பை உயர்த்த வேண்டும் என்பதே மூத்த குடிமக்களின் கோரிக்கையாகும்.

இந்தியாவில் மொத்தமுள்ள 130 கோடி மக்கள் தொகையில் வரி செலுத்து வோரின் எண்ணிக்கை வெறும் 3.5 கோடி மட்டுமே. இதில் ரூ. 1 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டுவதாக வரி தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை வெறும் 50 ஆயிரம் மட்டுமே. சிறு வணிகர்கள், தொழில்முறை பணியாளர்கள் (டாக் டர்கள், வழக்கறிஞர்கள்), பெரும் நிலச் சுவான்தார்கள் வரி செலுத்துவதில்லை.வரி செலுத்தும் 3 சதவீத மக்களின் எதிர்பார்ப்பே இவ்வளவு எனில் தொழில்துறையின் எதிர்பார்ப்பு ஏராளம்.

கார்ப்பரேட் வரியை 30 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக படிப்படியாகக் குறைக்கப் போவதாக 2015-ம் ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்த போது ஜேட்லி அறிவித்தார். புதிதாகத் தொடங்கப்படும் நிறுவனங்களுக்கு 25 சதவீதமாகவும் ஏற்கெனவே செயல்படும் நிறுவனங்களுக்கு 29 சதவீதமாகவும் உள்ள நிறுவன வரி விதிப்பை இந்த பட்ஜெட்டில் முறைப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்கப்பூர், இங்கிலாந்து, இலங்கை, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளில் 20 சதவீதமாக கார்ப்பரேட் வரி உள்ளது என்று நிறுவனங்கள் சுட்டிக் காட்டுகின்றன. இதேபோல மாறுதலுக்குள்பட்ட வரி விதிப்பான `மேட்’ முறையிலும் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்று தொழில்துறையினர் எதிர்பார்க்கின்றனர்.

நாட்டின் மொத்த வரி வசூலில் நிறுவன வரி பங்களிப்பு 19 சதவீதமாக உள்ளது. வருமான வரியின் பங்களிப்பு 14 சதவீதமாக உள்ளது. இவற்றைக் குறைக்கும்போது அரசின் வரி வருவாய் குறையும் என்பதால் இதை ஜேட்லி செயல்படுத்துவாரா என்ற சந்தேகமும் எதிர்பார்ப்புக்கு இணையாக எழுந்துள்ளது.

தொழில்துறையை ஊக்குவிக்க அளிக்கப்படும் வரிச் சலுகைகளுக்குப் பதிலாக வரி அளவைக் குறைத்தாலே போதும் என்ற கருத்து தொழில்துறையினரிடம் மேலோங்கி உள்ளது. கட்டுமானத் துறையை ஊக்கு விக்க அளிக்கப்படும் சலுகைக்குப் பதில் மூலதன அடிப்படையில் வரிச் சலுகை அளிக்கலாம் என்ற பரிந்துரையையும் இத்துறையினர் முன்வைத்துள்ளனர்.

பட்ஜெட் தேதியை முன்கூட்டி அறிவிப்பது, பொது பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட்டை இணைப்பது போன்ற புதிய மாற்றங்களை அருண் ஜேட்லி மேற்கொள்கிறார். இந்த பட்ஜெட்டில் மக்களுக்கு பயனுள்ள புதிய விஷயங்கள் இடம்பெறுமா?

- ramesh.m@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x