Last Updated : 26 Sep, 2016 10:43 AM

 

Published : 26 Sep 2016 10:43 AM
Last Updated : 26 Sep 2016 10:43 AM

குறள் இனிது: செய்யணும்னு.. செய்யணுங்க!

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்

நின்றது மன்னவன் கோல் (குறள்: 543)



பள்ளியில் குப்தர்கள் காலம் பொற்காலம் என்று படித்தது ஞாபகம் இருக்கிறதா? ராஜராஜனின் ஆட்சியில் கட்டிடக்கலை, ஓவியக்கலை, நாட்டியக்கலை போன்றவை நன்கு வளர்ந்தன என்பது சரித்திரம் சொல்லும் உண்மை!

வர்த்தக நிறுவனங்களிலும், பிற அலுவலகங்களிலும், ஏன் எந்த ஒர் அமைப்பிலுமே இதே நிலைதான்! நல்ல தலைவர் பொறுப்பில் இருக்கும் காலத்தில்தானே பணியாளர் நலம் போன்றவை போற்றப்படும்?

வலிய, பெரிய சட்டங்கள் கூடச் செய்ய முடியாததை, சமூக அக்கறை உள்ள நிறுவனத்தினர் தாமே முன் வந்து செய்துவிடுவதை நாம் அடிக்கடி பார்க்கிறோம்!

நம்ம டாடா ஸ்டீல் சாதித்தது தெரியுமில்லையா? 1917-ல்,அதாவது இன்றைக்கு 99 ஆண்டுகளுக்கு முன்பே தொழிலாளர் நலனுக்கென தனித்துறையை தொடங்கியவர்கள் அவர்கள்! இதற்கு 31 ஆண்டுகளுக்குப் பின்தான் 1948-ல் சட்டப்படி அமலானது என்றால் நம்ப முடிகிறதா?

1928-ம் ஆண்டிலேயே அவர்கள் பேறு கால விடுப்பைக் கொடுக்கத் தொடங்கி விட்டார்களாம். அது சட்டமானதென்னவோ 1946ல் தான்!

1912-ல் டாடா ஸ்டீல் தொழிலாளிகளின் பணி நேரம் 8 மணி என ஒழுங்குமுறை செய்த பொழுது, அவ்வழக்கம் மேலை நாடுகளிலே கூட இல்லையாம்!

இன்றைக்கு வர்த்தக நிறுவனங்களின் சமுதாயப் பொறுப்பு (CSR) பெரிதாகப் பேசப்படுகிறது. சட்டமும் ஆகி விட்டது.

ஆனால்1892முதலே சமூக அக்கறையுடன் பல மாணவர்களுக்கு கல்வித்தொகை அளித்ததுடன் பெங்களூரில்1911-ல் இந்திய விஞ்ஞானக் கழகத்தையும் நிறுவியவர்கள் டாடா குடும்பத்தினர்.

நம்ம தமிழ் நாடும் இதில் சளைத்தது இல்லைங்க.1952ல் தான் குடி இருந்த வீட்டையே தானமாகக் கொடுத்து காரைக்குடியில் கல்லூரி அமைத்தவர் வள்ளல் அழகப்ப செட்டியார்!

கடந்த 22 ஆண்டுகளாக மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை வழங்கி ஊக்குவித்து வரும் சக்தி மசாலா நிறுவனத்தைப் பாருங்கள்.

பொட்டலங்கள் போடுவது, அடுக்கி சிப்பம் தைப்பது மட்டுமில்லைங்க இவர்களுக்கு வேலை. மேற்பார்வைப் பணி, அலுவலகப் பணி என 130க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் சிறப்பாக வேலை செய்வதாகச் சொல்கிறாங்க அந்த சக்தியின் சாந்தியம்மா!

சட்டப்படி தனியார் நிறுவனங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு பணி ஒதுக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்பது உங்களுக்குத் தெரிந்ததுதான்.

இருப்பினும் தாங்கள் கொண்ட கொள்கையால் தமது நிறுவனத்தில் 11% பணியிடங்களை மாற்றுத் திறனாளிகளுக்கே கொடுத்து மகிழ்கின்றனர், மகிழ்விக்கின்றனர் இவர்கள்.

இதைப் போலத் தாமாக முன் வந்து ஆன்மிகத்தையும், இலக்கியத்தையும், வளர்ப்பவர்கள் வேறு பல நிறுவனத்தினர்.  கிருஷ்ணா ஸ்வீட்ஸின் ‘எப்ப வருவாரோ' சொற்பொழிவுகளைக் கேட்டதுண்டா? மைசூர்பா போல இனிக்குமே!

அந்தணர் போற்றும் மறைநூலுக்கும் அறத்திற்கும் அடிப்படையாய் இருந்து உலகத்தைக் காப்பது அரசனுடையசெங்கோலாகும் என்கிறது குறள்.

இன்றையச் சூழலில், சட்டம் சொல்லாமலே நல்லவை பல செய்யும் நல்ல நிறுவனத் தலைவர்களுக்கும் இது பொருந்தும்!

- somaiah.veerappan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x