Last Updated : 24 Oct, 2016 11:29 AM

 

Published : 24 Oct 2016 11:29 AM
Last Updated : 24 Oct 2016 11:29 AM

குறள் இனிது: காப்பாற்றியவரைக் காப்பாற்றுவது யார்..?

இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை

முறைகாக்கும் முட்டாச் செயின் (குறள்: 547)

உலகின் மிகப் பெரிய வங்கிகளில் ஒன்றான, ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த டாயிஷ் வங்கி பிரச்சினையில் இருப்பதாக சமீபத்தில் வந்த செய்திகளைப் பார்த்து இருப்பீர்கள்.

வங்கியில் ஏற்பட்ட தொடர் நஷ்டங்கள் காரணமாக அது மூடப்படுமோ எனும் அச்சத்தில் பலர் தத்தம் பணத்தை திரும்ப எடுக்கிறார்களாம்!

இப்படி பணத்தை எல்லா வாடிக்கையாளர்களும் உடனே திருப்பிக் கேட்டால் எந்த வங்கியினாலும், அதற்கு வாராக்கடனே இல்லையென்றாலும், தாக்குப் பிடிக்க முடியாதே!

வங்கிகள் தாம் டெபாசிட்டாக வாங்கிய பணத்தின் பெரும் பகுதியை குறுகியகால, நீண்டகாலக் கடனாகக் கொடுத்திருப்பார்கள் இல்லையா?

வங்கியில் கடன் வாங்கியவர்கள் அதனைப் பணமாகவா வைத்திருப்பார்கள்? அக்கடன்கள் தொழிற்சாலைக் கட்டிடங்களாக, இயந்திரங்களாக, கச்சாப் பொருட்களாக மற்றும் கார், பிரிட்ஜ் என மறு அவதாரங்கள் எடுத்திருக்குமே!

எனவே வங்கி இப்பவே எல்லாவற்றையும் திருப்பிக் கொடு என்றால் கடன்காரரின் தொழில் நல்லபடியாக நடந்தால் கூட முடியாது!

இது போல் எண்ணற்ற வாடிக்கையாளர்கள் வங்கியில் போட்ட பணத்தை உடனே கொடுக்கும்படி படை எடுப்பதை ‘run on the bank’ என்பார்கள். இந்தப் பிரச்சினை நம் வங்கிகளுக்கும் வரக்கூடியது! ஆனால் வரக்கூடாதது!!

இந்திய வங்கிகளின் வரலாற்றில் பஞ்சாப் நேஷனல் வங்கி இந்தச் சோதனையை சந்தித்துள்ளது, வெற்றியும் பெற்று உள்ளது!

1960-ம் ஆண்டில் அந்த வங்கி நாட்டுடமை ஆக்கப்படுவதற்கு முன்பு, சிலரால் பரப்பி விடப்பட்ட வதந்திகளால் வந்தது சோதனை!

கிளைகளில் வாடிக்கையாளர்கள் பணத்தை எடுக்கக் குழுமினர். அடிப்படையில் வலுவாக இருந்ததால் வங்கி அஞ்சவில்லை, சளைக்கவில்லை! சனிக்கிழமை இரவு நடுநிசி வரை பணம் கேட்ட வாடிக்கையாளர் அனைவருக்கும் கேட்டபடி கொடுக்கப்பட்டது. இது விடுமுறை நாளான ஞாயிறன்றும் தொடர்ந்தது! 4 வருட வைப்புநிதிக்குச் சட்டப்படி பணம் கொடுக்க வேண்டியதில்லை என்றாலும் அதற்கும் உடனே பணம் கொடுக்கப்பட்டதாம்!

பணத்தை எண்ணினால் காலதாமதம் ஆகிவிடும் என்பதால் ரிசர்வ் வங்கியிலிருந்து உறுதிமொழி அடிப்படையில் நோட்டுக்களை எண்ணாமலேயே காசாளர் எடுத்து வந்தாராம்! டகோட்டா தனி விமானம் மூலம் கூடப் பணம் கொண்டு வரப்பட்டதாம் !

இவற்றை எல்லாம் பார்த்த வாடிக்கையாளர்கள் இவ்வங்கி தோற்கின் எவ்வங்கி வெல்லும் என எண்ணியிருக்க வேண்டும். வங்கியின் மீது நம்பிக்கையுடன் தனிப்பாசமும் நேசமும் உண்டாகி, அதனைக் காப்பாற்ற சபதமும் எடுத்திருக்க வேண்டும்!

ஆமாம், பணம் எடுக்க படை எடுத்தவர்களே பின்னர் பணத்தைப் போட வரிசையில் காத்து நின்றார்களாம்! வங்கி வாடிக்கையாளர்களுக்குச் சேவை செய்த நிலை மாறி அவர்கள் வங்கியை கரை சேர்த்ததும் வங்கி பிரச்சினையிலிருந்து மீண்டு ஆல மரமாய் வளர்ந்ததும் பின்கதை!

வலியோருக்குப் பிரச்சினை வந்தால் அவர்களால் நியாயமாக நடத்தப்பட்ட எளியோர் எப்போதும் தாமே முன்வந்து உதவுவார்கள் இல்லையா? உலகத்தை எல்லாம் அரசன் காப்பாற்றுவான்; இடைவிடாது நல்லமுறையில் ஆட்சி செய்யும் அரசனை அந்த முறையே காப்பாற்றும் என்கிறது குறள்.

- somaiah.veerappan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x