Published : 29 Aug 2016 10:19 AM
Last Updated : 29 Aug 2016 10:19 AM

உன்னால் முடியும்: எனது தொழில் என்னை மகிழ்ச்சியாக வைத்துள்ளது

சென்னை வியாசர்பாடி, மகாகவி பாரதி நகரில் வசித்து வருகிறார் பிரசாத். தொழில் துறைக்கு முற்றிலும் சம்பந்தம் இல்லாத குடும்பம். அப்பாவுடன் பிறந்த அனைவரும் அரசு ஊழியர்கள். ‘ஆனால் நான் சொந்த தொழிலில் இறங்கியது தற்செயலானதல்ல... பள்ளியில் படிக்கும் காலத்திலிருந்தே எனது எண்ணத்தில் ஓடிக்கொண்டிருந்தது. அப்போது சாத்தியமாகவில்லை. எனக்கு என்று குடும்பம் அமைந்த பிறகு, என் வாழ்க்கை குறித்து நானே முடிவெடுக்கும் பக்குவம் அமைந்தவுடன் எந்த யோசனையும் செய்யாமல் சுய தொழிலில் இறங்கிவிட்டேன்’ என்கிறார். பொருட்களுக்கான பேக்கிங் துறையில் பத்தாண்டுகள் அனுபவம் கொண்ட இவரது அனுபவம் இந்த வாரம் ‘வணிக வீதி’யில் இடம் பெறுகிறது.

பிளஸ் 2 கடைசி தேர்வு முடித்துவிட்டு வந்த அன்று மதியமே வேலைக்கு சென்று விட்டேன். பிராட்வேயில் ஒரு ஹார்ட்வேர்ட் கடையில் வேலை பார்த்தேன். அங்கு வேலைபார்த்துக் கொண்டே தட்டச்சு, சுருக்கெழுத்து, தொலைநிலைக் கல்வியில் பட்டமும் வாங்கினேன். அப்பா அரசு வேலைக்கு முயற்சி செய் என வலியுறுத் தினார். ஆனால் நான் என் விருப்பத்துக்கு எனது எதிர்காலத்தை திட்டமிட்டுக் கொள் கிறேன் என்று பிடிவாதமாக மறுத்துவிட் டேன். பிறகு ஒரு டைரக்ட் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் வேலை. மிகக் கடினமான அந்த பணியில் நான் நிறைய கற்றுக் கொண்டேன். இந்த வேலையில் இரண்டு ஆண்டுகள் இருந்தேன்.

திருமணத்துக்கு பிறகு கோயம்புத் தூரில் ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். அங்கு ஐந்து ஆண்டுகள் இருந்தேன். அப்போது சொந்த தொழிலுக் கான முயற்சிகளில் இறங்கினேன். நைலான் பஞ்சு ரோலை மொத்தமாக வாங்கி அதை பாத்திரம் கழுவும் அளவுக்கு சின்ன சின்னதாக உருட்டி பேக் செய்து கோவையில் நீல்கிரீஸ் போன்ற கடைகளில் விற்பனை செய்யத் தொடங்கினேன்.

மனைவி வீட்டிலிருக்கும் நேரத்தில் அதை தயார் செய்து வைத்திருப்பார், நான் வேலை முடித்துவிட்டு வந்து அதை கடைகளுக்குக் கொண்டு செல்வேன். இப்படியாக சொந்த தொழிலில் இறங்கினேன். ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு அங்கிருந்து சென்னை வந்தோம். ஒரு முறை உடல்நலம் சரியில்லாமல் மருத்துவ ஓய்வில் இருந்த போது நான் வேலை பார்த்த நிறுவனத்தினர் வேலைக்கு வரச் சொல்லி நெருக்கடி கொடுத்தனர்.

‘உனது உழைப்பு அவர்களுக்கு முக்கிய தேவையாக இருப்பதால்தானே அழைக்கிறார்கள்..அதே உழைப்பை வைத்து சொந்தமாக தொழில் செய்’ என அம்மாவும் மனைவியும் உற்சாகம் கொடுத்தனர். அடுத்த நாள் அந்த வேலையை ரிசைன் செய்துவிட்டு வந்தேன்.

எனது தொடர்புகள் மூலம் குஜராத்தில் பேக்கிங் பொருட்கள் உற்பத்தி செய்யும் ஒரு நிறுவனத்தில் தமிழ்நாட்டில் இருந்து ஆர்டர் எடுத்து தரும் வேலையைக் கேட்டேன். அவர்களோ நீ தனியாகவே செய். வேலை பார்த்தால் என்ன சம்பளம் கிடைக்குமோ அதை போல வருமானம் கிடைக்கும் என்று 60 நாட்கள் கடனில் மூலப் பொருட்கள் தர முன்வந்தனர்.

வீட்டு மொட்டை மாடியிலேயே தயாரிப்பு வேலைகளைத் தொடங்கினேன். மூலப் பொருட்கள் 60 நாட்கள் கடனில் கிடைக்க, நான் 45 நாட்கள் கடனில் வாடிக்கையாளர்களைப் பிடித்தேன். சொந்த தொழில் மூலம் முதல் முதலில் 600 ரூபாய்க்கான காசோலை கிடைத்தது. உண்மையில் அதற்கு முன் ஆயிரக்கணக்கில் கிடைத்த சம்பளத்தைவிட பல மடங்கு மகிழ்ச்சியை அப்போது உணர்ந்தேன்.

இந்த தொழிலில் பலர் ஈடுபட்டாலும், ஒருவருக்கொருவர் போட்டிபோடுவது குறைவுதான். ஏனென்றால் லாபம் குறைவு. ஏற்கெனவே ஒருவர் கொடுத்துக் கொண்டிருக்கும் நிறுவனத்தில் நான் ஆர்டர் எடுக்க வேண்டும் என்றால் அவரை விட குறைவான விலைக்கு கொடுக்க வேண்டும். இதனால்தான் போட்டி குறைவு. ஆனால் சந்தையில் நிலைத்து நிற்க வேண்டும் என்றால் பெரிய நிறுவன ஆர்டர்கள் தொடர்ச்சியாக கிடைத்துக் கொண்டே இருக்க வேண்டும்.

தொழிலை விரிவாக்கம் செய்ய வேண்டிய அவசியம் வந்தபோது மண்ணடி இந்தியன் வங்கி கிளை கடனுதவி செய்தது. இதைக் கொண்டு செங்குன்றம் அருகில் அலமாதி என்கிற ஊரில் இடம் வாங்கி விரிவுபடுத்தினேன். இப்போது அங்கு 18 பேர் வேலை பார்க்கின்றனர். அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக ஆண்டுக்காண்டு இரண்டு கிராம் தங்கக் காசு அன்பளிப்பாகக் கொடுக்கிறேன். ஒரு வேலையில் நான் என்ன எதிர்பார்ப்பேனோ அதை அவர்களுக்கு செய்து கொடுப்பதில் எனக்கு சந்தோஷம். ஏனென்றால் அவர்களது உழைப்புதான் என்னை மகிழ்ச்சியாகவே வைத்துள்ளது. இது எல்லாவற்றுக்குப் பின்னாலும் என் மனைவியின் உழைப்பும் பக்கபலமாக இருந்தது. எனக்கு பின் தொழிலில் என் மகன் ஈடுபடுவாரா என தெரியாது ஆனால் எனது லட்சியத்துக்காக நான் உழைக்கிறேன். இந்த மகிழ்ச்சி தான் என்னை இயக்கிக் கொண்டிருக்கிறது என்றார்.

என்னிடம் 18 பேர் வேலை பார்க்கின்றனர். அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக ஆண்டுக்காண்டு இரண்டு கிராம் தங்கக் காசு அன்பளிப்பாகக் கொடுக்கிறேன். ஒரு வேலையில் நான் என்ன எதிர்பார்ப்பேனோ அதை அவர்களுக்கு செய்து கொடுப்பதில் எனக்கு சந்தோஷம்.

maheswaran.p@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x