Published : 23 Jan 2017 11:42 AM
Last Updated : 23 Jan 2017 11:42 AM

உன்னால் முடியும்: உயர்த்தி விட ஆயிரம் கைகள் இருக்கின்றன

சிறு தானிய உணவுப் பழக்கம் அதி கரித்து வந்தாலும் நவீன உணவு களுக்கு ஈடு கொடுக்கும் வகையி லான மாற்றங்களோடு வந்தால்தான் மக்கள் மனங்களில் இடம்பிடிக்க முடியும் என்கின்றனர் ரவிக்குமாரும், சத்ய மூர்த்தியும். சிறுதானிய நூடுல்ஸ், கிறிஸ்பி என பல வகைகளில் சிறு தானியங்களில் தயாராகும் தின்பண்டங்களைத் தயாரிக் கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் இவர்களது அனுபவம் இந்த வாரம் `வணிக வீதி’-யில் இடம் பெறுகிறது.

உணவு பொருள் தயாரிப்பில் பல முயற்சிகளுக்கு பிறகுதான் இந்த வடிவத் துக்கு வந்துள்ளோம். ஒவ்வொன்றுமே எங்களது முயற்சியாகவும் பயிற்சியாகவும் இருந்தது. படிக்கும் காலத்தில் வெறும் கனவாக மட்டுமே இருந்த தொழில் ஆர்வம், இன்று 45 நபர்களுக்கு வேலை கொடுக்கும் நிறுவனமாக வளர்ந்துள்ளதற்கு பின்னால் எங்களது முயற்சிகள்தான் காரணம் என்று தொடங்கினார் ரவிக்குமார்.

எனக்கு சொந்த ஊர் சேலம், நண்பர் சத்தியமூர்த்திக்கு சொந்த ஊர் ஆத்தூர். பிஎஸ்சி பயோ டெக்னாலஜி படித்தோம். இருவரும் ஒரே அறை வாசிகள் என்பதால் ஏற்பட்ட நட்பு இப்போதும் தொடர்கிறது. நான் எம்எஸ்சி முடித்துவிட்டு சில நிறுவனங்களில் தரப்பரிசோதனை ஆய்வாளர், ஆலோசகர் உள்ளிட்ட வேலைகளுக்குச் செல்லத் தொடங்கினேன். சத்யமூர்த்தி பிஹெச்டி படித்துக் கொண்டிருந்தார். ஆனால் நாங்கள் தொடர்ச்சியாக சொந்த தொழில் முயற்சிக்கான ஆலோசனை மற்றும் தேடலில் இருந்தோம்.

அவர் படித்து முடித்து வெளியே வந்ததும், நஷ்டத்தில் இருந்த ஒரு பேக்கேஜிங் வாட்டர் நிறுவனத்தை எடுத்து நடத்தி லாபத்துக்கு கொண்டு வந்தோம். அது எங்களுக்கு நம்பிக்கை கொடுத்தது. அதிலிருந்து குளிர்பானம் தயாரிக்கலாம் என்கிற யோசனை வந்து அதற்கான முயற்சி எடுத்தோம். கோவை வேளாண் பல்கலைக் கழகத்தில் தொழில்முனை வோர் ஊக்குவிப்பு மையத்தில் உள்ள வசதிகளை பயன்படுத்தி நெல்லிக்காய் ஜூஸ் போன்ற புதிய வகை பானங்களை தயாரித்தோம். பாட்டிலில் அடைக்கும் வகையில் இல்லாமல், உடனடி பழச்சாறாக வும் இல்லாமல் இதைத் தயாரித்தோம்.

எங்களுக்கு இருந்த தொடர்புகள் மூலம் வேளாண் பல்கலைக் கழகம், சென்னை பல்கலைக் கழகம், வேல்ஸ் பல்கலைக் கழகம், காருண்யா பல்கலைக் கழக உணவகங்களில் இதை நிறுவினோம். நல்ல விற்பனை இருந்தது. மதுரையில் ஒரு தனியார் பள்ளியில் இதை நிறுவிய வகையில் அங்கிருந்த உணவகத்தினர், சத்து நிறைந்த ஸ்நாக்ஸ் மாதிரியான உணவுகளை சப்ளை செய்ய முடியுமா என்று கேட்டனர்.

அப்படி தொடங்கியதுதான் இந்த தொழில், முதலில் முளை கட்டிய சிறு தானிய மாவிலிருந்து உருண்டை போன்றவற்றை அனுப்பினோம். இவற்றை தயாரிப்பதற்கான அடுப்புகள் தேவைப் பட்ட போது ஒரு பேக்கரியில் உதவி கேட் டோம். அவர்களுக்கு வேலையில்லாத போது பயன்படுத்திக் கொள்ள அனுமதித்தனர். இரண்டு கிலோ மூன்று கிலோ என்கிற அளவுகளில் மாவு கொண்டு சென்று அங்கு வைத்து தயாரிப்போம். புது முயற்சிகள் என்பதால் பல இழப்புகள் வரும். சுவை, தரம் எல்லாவற்றிலும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மாதிரியாக வரும். இதை ஒரு வடிவத்துக்கு கொண்டு வரவே ஆறு மாதங்கள் ஆனது. ஆனாலும் இந்த தயாரிப்புகளுக்கு பல இடங்களிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்த சந்தர்ப்பத்தில் வங்கியிலிருந்து ரூ.30,000 வரை ‘ஓவர் டிராப்ட்' கிடைத்தது. இது எங்களது உழைப்பு சரியான திசையில் செல்கிறது என நம்பிக்கை கொடுத்தது. சிறுதானியங்களில் குர்குரே மாதிரியான தின்பண்டத்தை தயாரிக்க எடுத்த முயற்சிக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதற்கிடையே கோவை பிஎஸ்ஜி தொழில்நுட்ப கல்லூரியின் தொழில் முனைவோர் ஊக்குவிப்பு மையம் வழியாக 18 லட்ச ரூபாய் கடனுதவியும் கிடைக்க உணவுப் பொருட்களை தயாரிக்க சொந்த யூனிட் போட்டோம்.

அதற்கடுத்து சிறுதானிய நூடுல்ஸ் தயாரிப்பில் இறங்கினோம். திருச்செங் கோடில் இதற்கான வசதிகளுடன் ஒரு இடம் அமைய அங்கும் ஒரு தயாரிப்பு ஆலையை அமைத்தோம். இந்த காலகட் டங்களில் மென்பானங்கள் தயாரிப்பை குறைத்துக் கொண்டு முழுமையான சிறு தானிய தயாரிப்புகளில் இறங்கிவிட்டோம். எங்கள் கையிலிருந்து ஆரம்பத்தில் 50 ஆயிரம் வீதம் முதலீடு செய்தோம். இப்போது ஆண்டுக்கு 2 கோடிக்கும் அதிகமாக பரிவர்த்தனை செய்யும் நிறுவனமாக வளர்ந்துள்ளோம். நான் நிர்வாகத்தையும், சத்யமூர்த்தி ஆராய்ச்சி பிரிவையும் பார்த்துக் கொள்கிறார்.

2009-ம் ஆண்டு தொழில் முயற்சிகளில் இறங்கினோம். இந்த 8 ஆண்டுகளில் ஒரு நாள்கூட உழைப்பதற்கு சோர்ந்ததில்லை. எதற்காகவும் கூச்சப்பட்டதில்லை. தொழிலில் நேர்மை இருந்தால் தூக்கிவிட ஆயிரம் கைகள் இருக்கின்றன என்பதே எங்கள் அனுபவம் என்கிறார் ரவிக்குமார்.

தொடர்புக்கு: vanigaveedhi@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x