Published : 24 Oct 2016 12:00 PM
Last Updated : 24 Oct 2016 12:00 PM

இனி சிபில் அறிக்கை இலவசம்

செப்டம்பர் 1-ம் தேதி அன்று ரிசர்வ் வங்கி ஒரு முக்கிய மான உத்தரவை தனியார் கடன் தகவல் நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ளது. அந்த உத்தரவில் தனிநபர்களின் கடன் தர மதிப்பு அறிக்கையை தனியார் கிரெடிட் ரேட் டிங் நிறுவனங்கள் இனி ஆண்டு தோறும் ஒருமுறை அவர்களுக்கு இலவசமாக அளிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. இதன்படி சிபில் அமைப்பின் (Credit Information Bureau (India) Ltd - CIBIL) கடன் மதிப்பை தனிநபர்கள் தெரிந்து கொள்வதுடன், கடன் விவகாரங் களில் தங்களின் தவறுகளை திருத்திக் கொள்ளவும் முடியும் என குறிப்பிட்டுள்ளது. இதன்படி வருகிற ஜனவரி 1-ம் தேதி முதல் அனைத்து தனிநபர் கிரெடிட் ரேட்டிங் நிறுவனங் களும் சிபில் ஸ்கோர் அறிக்கையை இலவசமாக கேட்பவர்களுக்கு அளிக்க உள்ளன.

சிபில் அறிக்கை

2000-ம் ஆண்டு தொடங்கப்பட்ட சிபில் நிறுவனத்தின் முதன்மையான பணி கடன் வாங்குபவர்கள், கிரெடிட் கார்டு உபயோகிப்பவர்கள் குறித்த தகவல்களைத் திரட்டுவதுதான். குறிப்பாக கடன் வழங்கும் நிறு வனங்கள் தங்களிடம் கடன் வாங்கும் வாடிக்கையாளர்கள் குறித்த தகவல்களை மாதந்தோறும் இந்த நிறுவனத்துக்கு அளிக்கின்றன. இப்படி திரட்டப்படும் தகவல்களை வைத்து சம்பந்தப்பட்ட தனிநபர் களின் கடன் பெறும் தகுதி தீர்மானிக்கப்படுகிறது. இதற்கான புள்ளிகள் அளிக்கப்படுகின்றன.

வாடிக்கையாளர் கடனை திருப்பி செலுத்தவில்லை என்றாலோ, அல்லது கடனை திருப்பி செலுத்து வதில் காலதாமதம் ஏற்பட்டாலோ வாடிக்கையாளரின் கடன் மதிப்பு குறைக்கப்படும். இதனால் சம்பந் தப்பட்ட தனிநபர் வேறொரு நிறு வனத்திடம் கடன் வாங்க முயற் சித்தால், சிபிலில் அவரது மதிப்பு குறைவாக இருக்கும்பட்சத்தில் அவருக்கு கடன் மறுக்கப்படும். பொதுவாக கடன் வழங்கும் அனைத்து நிறுவனங்களும் சிபில் மதிப்பின் அடிப்படையிலேயே கடன் கொடுக்கின்றன.

சிபில் அறிக்கைபடி 750-900 புள்ளி கள் சிறப்பான கடன் மதிப்பாகும். அதற்கு கீழே 650-750 சராசரியான புள்ளிகள். 550- 650 புள்ளிகள் மோசமானதாகவும், 350-550 புள்ளிகள் மிக மோசமானதாகவும் மதிப்பிடப்படும். கிரெடிட் கார்டில் தவணைக் காலம் தவறுவதுகூட இந்த புள்ளிகள் மதிப்பு குறைய காரணமாக அமையும். பான் எண் அடிப்படையில் தகவல்கள் பதிவேற்றப்படுகின்றன. இதனால் ஒரு கடனை வாங்கி செலுத்தாமல், வேறொரு முகவரியிலிருந்து வேறொரு நிறுவனத்தில் கடன் வாங்குவதும் தடுக்கப்படுகிறது.

ஆனால் இந்த கடன் மதிப்பு குறித்த விவரங்கள் இன்னும் பல மக்களுக்கு சென்று சேரவில்லை. கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்குகூட தங்களுடைய கடன் மதிப்பு என்ன என்பது பற்றிய முழுமையான தெளிவு கிடையாது. அல்லது இழந்த மதிப்பை உயர்த்துவதற்கான வழிகள் என்ன என்பதையும் அறிந்து வைத்திருக்கவில்லை. தற்போது தனிநபர்கள் இந்த அறிக்கையை ஒருமுறை வாங்குவதற்கு ரூ.550 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்த உத்தரவு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

வீட்டுக்கடன், வாகனக்கடன், தனிநபர் கடன், கிரெடிட் கார்டு என ஏதாவது ஒரு வகையில் நாம் இந்த சங்கிலியில் பிணைந்துள்ளோம். இதனால் குறைந்தபட்சம் தாங்கள் எந்த நிலையில் இருக்கிறோம் என்கிற விவரத்தை ஆண்டுதோறும் தெரிந்து கொள்ளவாவது இது பயன்படும். தவிர நமது நிதியியல் தவறுகளை திருத்திக் கொள்ளவும், எதிர்கால கடன் மதிப்பை உயர்த்திக் கொள்ளவும் சிபில் கடன் மதிப்பு அறிக்கையை இலவசமாகக் கேட்டுப் பெறலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x