Published : 19 Jun 2017 10:31 AM
Last Updated : 19 Jun 2017 10:31 AM

அலசல்: இது சரியா?

இன்று ஆன்லைன் மூலம் கிடைக்காத பொருளே இல்லை எனலாம். பழங்காலத்து பொருள்கள் முதல் அறிமுகமாகி சில நிமிடங்களே ஆன தயாரிப்புகள் வரை கிடைக்கும். பிரபலமான ஸ்மார்ட்போன்கள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகத்தான் கிடைக்கின்றன. அதைத்தான் வாடிக்கையாளர்களும் விரும்புகின்றனர்.

இப்போது மருந்து, மாத்திரைகளைக் கூட ஆன்லைனில் வாங்கும் போக்கு இந்தியாவில் அதிகரித்துள்ளது. இதற்கு தீனி போடும் வகையில் பல பார்மசிகளும் ஆன்லைன் வர்த்தகத்தில் களம் இறங்கியுள்ளன.

குழந்தைக்குத் தேவையான பொருள்களை குறிப்பாக டயபர் போன்றவற்றை ஆன்லைன் மூலம் வாங்குவது ஏற்புடையது. மருந்துகளையும் ஆன்லைனில் வாங்குவது பெரும்பாலும் சரியாக இருப்பதற்கான வாய்ப்பு குறைவு.

சாதக அம்சங்கள்

பெரும்பாலும் தொலை தூரங்களில் இருப்பவர்கள் உள்ளூர் மருந்துக் கடைகளில் உரிய மருந்துகள் கிடைக்காதவர்கள் ஆன்லைன் மூலம் மருந்துப் பொருள்களை வாங்கிப் பயன்படுத்துவது இதில் உள்ள சாதக அம்சம்.

பாதகங்கள்

இதில் சாதக அம்சங்களை விட பாதங்களே அதிகம். முறைகேடாக அல்லது சட்ட விரோதமாக நடத்தப்படும் ஆன்லைன் பார்மசிகள் காலாவதியான மருந்துகளை அனுப்பிவிட வாய்ப்பு இருக்கிறது. அதேசமயம் பெரும்பாலும் மருந்துகளின் பிராண்டுகள் குழப்பத்தை ஏற்படுத்துபவை. ஒரே பிராண்டு பெயரில் பல வித மருந்துகள் தயாராகின்றன. இதேபோல ஒரே மாதிரியான தோற்றம் கொண்ட மாத்திரை, மருந்துகளும் உள்ளன. இதனால் மருந்தைப் பயன்படுத்தும் நோயாளியான நுகர்வோரே பாதிப்புக்குள்ளாவார்.

சமீபத்தில் மும்பையைச் சேர்ந்த ஒரு பெண்மணி தனது உடல் எடையைக் குறைப்பதற்காக சில மாத்திரைகளை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்துள்ளார். இவை அனைத்தும் வெளிநாட்டிலிருந்து தருவிக்கப்பட்டவை. இதற்கான தொகை இவரது டெபிட் கார்டிலிருந்து எடுக்கப்பட்ட பிறகுதான் தான் ஆர்டர் கொடுத்த மாத்திரையின் விலை அவருக்குத் தெரிந்துள்ளது. எடை குறைப்பு மாத்திரைக்கு அவர் கொடுத்த தொகையைக் கேட்டு அவருக்கு மாரடைப்பே வந்துவிட்டதாம்.

ஏன் இந்த நிலை

தனக்குத்தானே வைத்தியம் பார்த்துக் கொள்ளும் போக்கு பலரிடம் அதிகரித்துள்ளதை ஆன்லைன் பார்மசிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றன. பெரும்பாலும் ஆன்லைனில் வாங்குவோர் அளிக்கும் டாக்டர் பிரிஸ்கிரிப்ஷன் அனைத்துமே போலியானவை. மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் வழங்கக் கூடாத மருந்துகளை எளிதில் பெற முடியும் என்பது அபாயகரமானது. டாக்டர்கள், மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், மருத்துவமனைகள், நோயாளிகள் என அனைத்து தரப்பினரும் ஒருமுகப்படுத்தி அனைவருக்கும் ஏற்புடைய விதிகளை வகுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x