Published : 27 Jun 2016 10:30 AM
Last Updated : 27 Jun 2016 10:30 AM

அந்நிய நேரடி முதலீடு: 100% இந்தியாவுக்கு நன்மையா?

மோடி தலைமையிலான அரசு கடந்த 20 ஆம் தேதி 100 சதவீதம் திறந்த பொருளாதாரம் என்கிற நிலைபாட்டுக்கு ஏற்ப கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் அந்நிய முதலீடுகளுக்கான கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளது. முக்கியமாக பாதுகாப்பு, விமானத் துறை, மருந்து உள்ளிட்ட துறைகளில் இருந்த கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளதை தொழில் துறையினர்கூட ஒரு வித எச்சரிக்கை உணர்வுடனேயே அணுகுகின்றனர்.

இந்த முடிவுகளை மோடி அமைச்சரவை அதிரடியாக மேற்கொண்ட நேரம்தான் மிக முக்கியமானது. ரகுராம் ராஜன் ரிசர்வ் வங்கி கவர்னராக தொடர்ந்து நீடிக்க முடியாது என்கிற முடிவை முன்தின சனிக்கிழமை அறிவிக்கிறார். அதன் தொடச்சியாக உடனே நிகழ்ந்த விளைவு இது என்றுதான் பலரும் குறிப்பிடுகின்றனர்.

அந்நிய செலாவணி கையிருப்பை அதிகரிக்கச் செய்த ராஜனின் நடவடிக்கைகள் இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு சாதகமாக இருந்தவை என்கிற கருத்துகள் நிலவி வந்த வேளையில் ராஜன் விலகல் முடிவால் அந்நிய முதலீட்டாளர்கள் நம்பிக்கை இழக்கலாம் என்று கணிப்பு இருந்தது.

இந்த முடிவு திங்கள்கிழமை சந்தையில் உடனடியாக எதிரொலிக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில்தான் அந்நிய முதலீட்டுக்கு ஆதரவான சூழல் உருவானது என்பது தொழில்துறையினரின் கருத்தாக உள்ளது.

அரசின் இந்த முடிவு பங்குச் சந்தையின் போக்கை மாற்றியது என்றே சொல்லலாம். பாதுகாப்பு, மருந்து துறை சார்ந்த சில நிறுவனங்களின் பங்குகள் விலை உயரவும் செய்தன. அதே நேரத்தில் ஐரோப்பிய கூட்டமைப்பிருந்து வெளியேறுவற்கு பிரிட்டன் முயற்சிகள் மேற்கொண்டிருந்ததால் சர்வதேச அளவில் மிகப்பெரிய பொருளாதார தேக்கம் உருவாகலாம் என்கிற நிலையில் இந்த அறிவிப்பு முக்கியமாக கவனிக்கப்பட்டது.

இருந்தாலும், கடந்த ஆண்டு நவம்பர் மாதமே பல துறைகளுக்கான 100 சதவீத அந்நிய முதலீடு கட்டுபாடுகள் தளர்த்தப்பட்டன என்பதையும் நாம் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். இது தொடர்ச்சியாக நிகழ்ச்சி நிரலில் கடைசியாக நிகழ்ந்த அறிவிப்புதான்.

கடந்த இரண்டாண்டுகளில் காப்பீடு, தொழிலாளர் துறை, உள்கட்டமைப்பு, உணவு, ஒலிபரப்பு, ரயில்வே, என பல துறைகளிலும் மாபெரும் கொள்கை சீர்திருத்தங்களை மோடி அரசு கொண்டு வந்திருக்கிறது. இதன் காரணமாக கடந்த இரண்டாண்டுகளில் 550 கோடி டாலர் நேரடி அந்நிய முதலீடு வந்துள்ளது. கடந்த அரசாங்கத்தை விட 43 சதவீதம் அதிகம் மோடி அரசு ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உலக அளவில் அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்ப்பதில் 2015 லேயே இந்தியா 10 வது இடத்தில் இருந்தது முக்கியமானது.

அந்நிய நேரடி முதலீடுகளை அனுமதித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்தியா ஆசியாவின் திறந்த பொருளாதார நாடாக விளங்குகிறது என்றும், இதன் மூலம் வேலை வாய்ப்பு உயரும், புதிய வேலைகள் உருவாகும், தொழில்நுட்ப பகிர்வுகள், உற்பத்தி துறை கூட்டு என பல வாய்ப்புகள் இந்தியாவுக்கு உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடுகளை மேற்கொள்ள தேவையில்லாத நடைமுறைகள் நீக்கப்பட்டுள்ளன, இதனால் தடையற்ற முதலீடுகள் சாத்தியமாகும் என்று குறிப்பிட்டுள்ளது அரசு.

இப்படியான திறந்த பொருளாதார கொள்கைகள் எந்த அளவுக்கு இந்திய பொருளாதாரத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போகும் என்பதற்கு இந்தியா இன்னும் சில ஆண்டுகள் காத்திருக்கவே வேண்டும். தொழில்துறை அமைப்பான அசோசெம் அந்நிய நேரடி முதலீடு 49 சதவீதம் வரை அனுமதிக்கப்பட்டபோது சாதகமான அம்சமாகவே கருதியது.

ஆனால் தற்போது 100 சதவீத அனுமதியை எச்சரிக்கையுடனேயே அணுகுகிறது. இந்தியாவில் தொழில் தொடங்கும் பாதுகாப்புத் துறை ஆயுத தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது தொழில்நுட்பத்தை பகிர்வதை விதிகளின்படி கட்டாயம் ஆக்கவில்லை, மேலும் உள்நாட்டு தொழில்களை பாதுகாக்கும் எந்த அம்சங்கள் குறித்தும் அரசு தெளிவுபடுத்தவில்லை என்று கருத்து கூறியுள்ளது.

பாதுகாப்பு துறை

உலக அளவில் ராணுவத்துக்கான ஆயுதங்களை இறக்குமதி செய்யும் முதல் பத்து நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியா ஆண்டுக்கு 800 கோடி டாலர் மதிப்புக்கு ஆயுதங்களை இறக்குமதி செய்கிறது. மத்திய பட்ஜெட்டில் பாதுகாப்பு துறைக்கு ஆண்டுதோறும் 13.4% அதிகரிக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டில் மட்டும் 190 கோடி டாலர் மதிப்புக்கு ராணுவ ஆயுதங்களை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்துள்ளது. இப்படி இறக்குமதி தளவாடங்களை நம்பியே இந்தியா இருக்க வேண்டிய நிலை உள்ளது. தற்போதைய அந்நிய நேரடி முதலீட்டு வரம்பு உயர்வால் வெளிநாட்டு நிறுவனங்களும் அவற்றின் துணை நிறுவனங்களும் நேரடியாக இங்கு வந்து தொழில் தொடங்க முடியும். இதனால் இந்தியா இறக்குமதிக்கு செலவிடுவது குறையும்.

விமான போக்குவரத்து துறை

கடந்த 20 மாதங்களாக இந்திய விமான போக்குவரத்து துறை இரட்டை இலக்க வளர்ச்சியை கண்டு வரும் நிலையில், விமான போக்குவரத்து துறைக்கு இது புதிய திருப்பங்களை கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் உள்ளூர் விமான சேவைகளில் வெளிநாட்டு நிறுவனங்கள் ஆர்வம் காட்டுவது அதிகரிக்கும்.மேலும் வெளிநாட்டுப் பங்குச் சந்தைகளில் இந்திய நிறுவனங்கள் முதலீடுகளை திரட்டவும் இந்த கொள்கைகள் வழி வகுத்துள்ளன.

வெளிநாட்டு விமான நிறுவனங்கள் இந்திய விமான நிறுவனங்களின் 100 சதவீத பங்கு களையும் வாங்கும் வாய்ப்பும் திறந்துவிடப்பட் டுள்ளது.

இந்தியாவின் வளர்ச்சி ஏறுமுகத்தில் உள்ள இந்த வேளையில் விமான சேவைகளும் சீராக வளர்வதற்கு வாய்ப்பு உள்ளது, இது சாதகமான சூழலை உருவாக்கியுள்ளது என்று சர்வதேச விமான நிறுவனங்களில் கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது. விமான நிலையங்களின் உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் செயல்பாடுகளின் தரமும் இதன் மூலம் மேம்படும்.

மருந்து உற்பத்தி துறை

மருந்து உற்பத்தி துறையில் வெளிநாட்டு நிறுவனங்களை அனுமதிப்பது மருந்துப் பொருள்களின் விலை உயரும் என்கிற கருத்து பரவலாக பகிரப்பட்டு வருகிறது. மருந்து உற்பத்தி துறை நேரடியாக மக்களின் தினசரி வாழ்க்கை முறையோடு சம்பந்தப்பட்டது என்பதை அரசு மறுக்க முடியாது. இந்திய நிறுவனங்களை கையகப்படுத்தி மருந்துகளின் விலையை அதிகரிக்கும் சாத்தியங்கள் உள்ளன என்பது மறுக்க முடியாது.

100 சதவீத அந்நிய முதலீட்டு அனுமதிகள் மூலம் எதிர்காலத்தில் தொழில் துறையின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப கூட்டு நிறுவனங்களை தேட வாய்ப்பு உருவாகியுள்ளது. உள்நாட்டு தொழில்துறைக்கும் சர்வதேச தயாரிப்பாளர் களுக்குமான போட்டியை உருவாக்கியுள்ளது என்கின்றனர். இதன் மூலம் அதிநவீன பிரத்யேக தொழில்நுட்பம் பாதுகாப்பு துறைக்கு கிடைக்கும்.

உள்நாட்டு உற்பத்தியாளர்களும் ஊக்கம் கிடைக்கும்.நாட்டின் பாதுகாப்பு துறை தேவைகள் சார்ந்து ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகள் மேம்படும். அதே நேரத்தில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி தந்தால் தொழில்நுட்பம் இந்தியாவுக்கு வந்து விடும் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. இதை அரசு எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. சிறு உற்பத்தியாளர்களுக்கு மிகுந்த நெருக்கடிகள் இனி வரும் காலங்களில் உருவாகலாம் என்கிற பயமும் உள்ளது.

திறந்த பொருளாதாரம் இந்தியாவுக்கு சாதகமா? பாதகமாக இருக்குமா என்பது இனி வரும் காலங்களில் நமது வாழ்க்கை தர மாற்றங்களில் எதிரொலிக்கும். இந்திய பொருளாதாரத்தின் பரிசோதனை காலகட்டம் யாருக்கு பலன்தரும் என்பதைப் பார்க்க எல்லோருமே காத்திருக்கிறோம். பரிசோதனை நம்மீதே நடப்பதற்கு ஒப்புதல் கொடுத்திருக்கிறோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x