Last Updated : 02 Jul, 2018 10:57 AM

 

Published : 02 Jul 2018 10:57 AM
Last Updated : 02 Jul 2018 10:57 AM

இவர்களின் நோக்கம்தான் என்ன?

இந்தியாவில் உள்ள மொத்த பள்ளிகளைக் காட்டிலும் இதன் எண்ணிக்கை இரு மடங்குக்கும் மேல். நாட்டிலுள்ள மொத்த மருத்துவமனைகளைவிட இதன் எண்ணிக்கை 250 மடங்கு. 800 பேருக்கு ஒரு போலீஸார்தான் இங்குள்ளனர். ஆனால் 400 பேருக்கு ஒன்று என்ற வீதத்தில் இவர்கள் செயல்படுகின்றனர்.

லாப நோக்கில்லாத என்ஜிஓ-க்கள்தான் இவை! ஆம், இந்தியாவில் உள்ள என்ஜிஓக்களின் எண்ணிக்கை 32 லட்சம் என்று தகவல் சேகரித்துச் சொல்லியிருக்கிறது சிபிஐ.

என்ஜிஓ-க்களுக்கும் `வணிக வீதி’க்கும் தொடர்பில்லாமலிருக்கலாம். ஆனால் இவற்றின் செயல்பாடுகளால் நாட்டின் உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 2 சதவீதம் முதல் 3 சதவீதம் பாதிக்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ளதால், என்ஜிஓ-க்கள் பற்றி அறிந்துகொள்ள வேண்டி இருக்கிறது. லாப நோக்கற்ற தொண்டு நிறுவனத்தின் செயல்பாடுகள் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை பாதிப்பதாக எப்படி புகார் எழுந்தது?

என்ஜிஓக்களின் செயல்பாடுகள் சரியாக உள்ளனவா. வெளிநாட்டிலிருந்து அவற்றுக்கு வரும் நிதி உதவி குறித்து ஆண்டுதோறும் சரிவர கணக்கு தாக்கல் செய்கிறார்களா என சிபிஐ-க்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்தே தகவல் திரட்டும் பணியை சிபிஐ மேற்கொண்டது. 26 மாநிலங்களில் 31.18 லட்சம் என்ஜிஓக்கள் இருப்பதாகவும் யூனியன் பிரதேசங்களில் 82 ஆயிரம் என்ஜிஓக்கள் செயல்படுவதாகவும் சிபிஐ பதிலளித்துள்ளது.

(இந்தியாவில் உள்ள பள்ளிகளின் எண்ணிக்கை 15 லட்சம்தான். நாட்டிலுள்ள மருத்துவனைகளின் எண்ணிக்கையோ 11,993 தான். இவற்றில் மொத்தம் 7.84 லட்சம் படுக்கை வசதிகள்தான் உள்ளன.)

நாட்டிலேயே 5.48 லட்சம் என்ஜிஓக்களை தன்னகத்தே கொண்டு உத்தரப் பிரதேச மாநிலம் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் 5.18 லட்சமும், கேரளத்தில் 3.7 லட்சம் என்ஜிஓக்களும் செயல்படுகின்றனர். மேற்கு வங்கத்தில் 2.34 லட்சம் என்ஜிஓக்கள் உள்ளனர்.

யூனியன் பிரதேசங்களில் உள்ள 82 ஆயிரத்தில் தலைநகர் டெல்லியில் மட்டும் 76 ஆயிரம் என்ஜிஓக்கள் செயல்படுகின்றனர். 32 லட்சம் என்ஜிஓக்களில் 10 சதவீதம்தான் வருமான வரி கணக்கு விவரங்களை தாக்கல் செய்வதாக நாடாளுமன்றத்திலேயே பதில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதாவது 2.9 லட்சம் என்ஜிஓக்கள்தான் வரி தாக்கல் செய்துள்ளனர். கேரள மாநிலத்தில் உள்ள 3.7 லட்சம் என்ஜிஓ-க்களில் ஒன்றுகூட வரி தாக்கல் செய்தது கிடையாது.

2006-ம் ஆண்டுக்குப் பிறகு என்ஜிஓ-க்களுக்கு வெளிநாடுகளிலிருந்து வரும் நிதி தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது. ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ. 10 ஆயிரம் கோடி வரை நிதி வந்துள்ளது. ஆரம்ப காலங்களில் மதம் சார்ந்த நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வந்த நிதி பின்னாளில் தொழில்துறைக்கு முட்டுக்கட்டை போடும் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வந்ததாகச் சொல்கிறது சிபிஐ.

2008- ம் ஆண்டிலிருந்து 2011-ம் ஆண்டு வரையான காலத்தில் தமிழகத்துக்கு ரூ.4,800 ஆயிரம் கோடி அளவுக்கு வெளிநாட்டிலிருந்து நிதி வந்துள்ளது. 10,119 கணக்கிலிருந்து 160 நாடுகளிலிருந்து இந்தத்தொகை வந்துள்ளது. அணு மின் திட்டங்களை எதிர்க்கும் என்ஜிஓ-க்களுக்கு இத்தொகை வந்துள்ளதாக நாடாளுமன்றத்திலேயே காங்கிரஸ் தலைமையிலான அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற 11 என்ஜிஓ-க்களில் 8 என்ஜிஓ-க்களுக்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்து நிதி வந்துள்ளது. 2006-ம் ஆண்டிலிருந்து 2011-ம் ஆண்டு வரை மட்டும் ரூ. 80 கோடி இதற்காகவே வந்துள்ளது. டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் என்ஜிஓ-வுக்கு 4,297 பரிவர்த்தனைகளில் ரூ.5,800 கோடி வந்துள்ளது. 160 நாடுகளிலிருந்து நிதி வந்துள்ளது. காங்கிரஸ் அரசே 77 என்ஜிஓ-க்கள் மீது கண்காணிப்பை தீவிரப்படுத்தியிருந்தது.

கிரீன்பீஸ், கோர்டெய்ட், ஆம்னஸ்டி, ஆக்ஷன் எய்ட் போன்ற என்ஜிஓ-க்களுக்கு அணு மின்னுற்பத்தி, நிலக்கரி சுரங்கம் போன்ற திட்டங்களை எதிர்ப்பதற்காகவே நிதி வந்துள்ளதாக ஐபி அறிக்கை தெரிவித்துள்ளது.

நிலக்கரி சுரங்கங்களுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டங்கள் காரணமாக சுரங்கத் தொழில் வளர்ச்சி 2.2 சதவீத அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதேபோல அனல் மின் நிலைய உற்பத்தி பாதிக்கப்பட்டு 8 ஆயிரம் மெகாவாட் மின் திட்டம் தடைப்பட்டுள்ளதாகவும் புள்ளி விவரங்கள் சொல்கின்றன. நிலக்கரி போதுமான அளவு கிடைக்காமல் 2013-14-ம் ஆண்டில் மட்டும் ரூ.26,400 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

எவை எல்லாம் என்ஜிஓ?

1945-ம் ஆண்டு என்ஜிஓ-க்கள் எவை என்பதை ஐக்கிய நாடுகள் சபை வகைப்படுத்தியது. அரசின் தலையீடின்றி, மக்கள் நலனுக்காக குழுவாக ஒருங்கிணைந்து செயல்படும் அமைப்புகளை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் என குறிப்பிட்டது. அரசின் குறுக்கீடு ஏதுமின்றி தன்னிச்சையாக இவை செயல்பட வேண்டும் என்பது கட்டாயம். லாப நோக்கமற்றதாக, மனித உரிமைகளைக் காக்கும் வகையில், குற்ற செயல்களில் ஈடுபடாத வகையில் இவற்றின் செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்று வகுத்தளித்துள்ளது ஐக்கிய நாடுகள் சபை.

மக்களின் மேம்பாட்டுக்கு, சமூக மேம்பாட்டுக்காக என்ஜிஓக்கள் செயல்படுகின்ற வரையில் அது மக்களுக்கு நன்மைதான். அதேசமயம், இந்தியாவின் வளர்ச்சியைத் தடுக்கும் நோக்கம் கொண்ட அந்நிய சக்திகளுக்குத் துணைபோவதாக குற்றச்சாட்டுகள் வந்திருப்பது, கவலைக்குரிய - ஆராய்ச்சிக்குரிய ஒன்று!

சேவையில் சிறந்தவை...

தங்கள் சேவைக்காக இந்திய அளவில் புகழ் பெற்ற பத்து அமைப்புகளை மட்டும் இங்கே பார்க்கலாம்..

1. ஹெல்பேஜ் இந்தியா – முதியோர்களின் நலன் கருதி 1978-ம் ஆண்டு சாம்சன் டேனியல், ஜாக்சன் கோலே, சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் ஆகியோரால் தொடங்கப்பட்டது. குழந்தைகளால் கைவிடப்பட்ட முதியவர்களை காப்பதே இதன் பிரதான பணியாகும். டெல்லியில் தலைமையிடத்தைக் கொண்டு செயல்படுகிறது.

2. ஸ்மைல் பவுண்டேஷன் – 2002-ம் ஆண்டு குழந்தைகளின் உரிமை காக்க தொடங்கப்பட்ட அமைப்பு. தலைநகர் டெல்லியில் தலைமையகத்தைக் கொண்டுள்ள இந்த அமைப்பு சமூகத்தில் ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த குழந்தைகளை மீட்டு அவர்கள் வாழ்வில் வளம் சேர்க்கும் நடவடிக்கையை எடுத்து வருகிறது. சிறந்த கல்வி, வாழ்க்கை முறை அளிப்பதே இதன் நோக்கம்.

3. கூன்ஞ் லிமிடெட் பத்திரிகையாளர் அனிஷ் குப்தாவால் 1999-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. சாலையோரத்தில் வசிக்கும் ஏழை குழந்தைளுக்காக துணிகளை வாங்கி அளிக்கும் பணியை மேற்கொண்டது. டெல்லியிலிருந்து இது செயல்படுகிறது.

4. கிரை (குழந்தைகளின் உரிமையும் நீங்களும் – CRY) 1979-ம் ஆண்டு சமூகத்தில் பின்தங்கிய குழந்தைகளின் மேம்பாட்டுக்கு தொடங்கப்பட்டது. ரிப்பன் கபூர் என்பவரால் மும்பையில் தொடங்கப்பட்டு பெருநகங்களில் அலுவலகங்களைக் கொண்டு செயல்படுகிறது.

5. கிவ் இந்தியா – 1999-ம் ஆண்டு உலகின் பகுதிகளிலிருந்தும் நிதி திரட்டும் அமைப்பாக தொடங்கப்பட்டது. சிறப்பாக செயல்படும் பிற தொண்டு நிறுவனங்களுக்கு இது நிதி உதவியை அளிக்கிறது. நன்கொடையாளர்கள் அளிக்கும் நிதியில் 90 சதவீதம் தொண்டுப் பணிகளுக்கு செல்வதை உறுதி செய்கிறது.

6. நானி காளி – 1996-ம் ஆண்டு பெண் குழந்தைகளுக்கு சமூகத்தில் சிறப்பிடம் அளிக்கப்பட வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு. பெண் குழந்தைகளுக்கு கல்வி அறிவு புகட்ட வேண்டும் என்பதில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிறுவனம். தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவால் தொடங்கப்பட்டது. மும்பையில் தலைமையகத்தைக் கொண்டுள்ள இந்த அமைப்பு மூலம் 5 ஆயிரம் பெண் குழந்தைகள் கல்வியறிவு பெற்றுள்ளனர்.

7 சர்கம் சன்ஸ்தா 1986-ம் ஆண்டு சமூகத்தில் பின்தங்கிய பிரிவினரின் குழந்தைகளுக்கு கல்வி அளிப்பதற்காக தொடங்கப்பட்டது. உத்தரப் பிரதேசத்தில் தலைமையகத்தைக் கொண்டு செயல்படுகிறது.

8. சம்மான் பவுண்டேஷன் - சமுதாயத்தில் மூத்த குடிமக்கள் சிறப்பாக வாழ்வதற்காக 2007-ல் தொடங்கப்பட்டது. வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் ஏழை, எளிய முதியோரின் மேம்பாடே இதன் பிரதான நோக்கம். பாட்னாவில் தலைமையகத்தைக் கொண்டு செயல்படுகிறது.

9 பிரதம் – 1994-ம் ஆண்டு சமூகத்தில் பின்தங்கிய, ஒதுக்கப்பட்ட மக்களின் குழந்தைகளுக்கு கல்வியறிவு அளித்து அவர்களை மேம்படுத்துவதே இதன் நோக்கம். சிறப்பான கற்கும் திறன் மற்றும் தரமானகல்வியை அளிப்பதற்காக மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது.

10 லெப்ரா சொஸைட்டி – ஆந்திர மாநிலத்தில் 1989-ம் ஆண்டு ஏழ்மையை ஒழிப்பதற்காக தொடங்கப்பட்டது. இதன் பிரதான நோக்கம் ஏழைக் குழந்தைகளுக்கு ஏற்படும் தொழுநோயை ஒழிப்பதுதான்.

ஒரு துளி போதும்!

என்ஜிஓக்களில் சிறந்தவை என்று பட்டியல் போடும்போதே பிரச்சினைக்குரிய என்ஜிஓ-க்கள் என்று முத்திரை வாங்கியவை பற்றியும் சொல்லியாக வேண்டும். உதாரணமாக, டீஸ்டா ஷெதால்வட் மற்றும் இவரது கணவர் ஜாவெத் ஆனந்த் இணைந்து நடத்தும் தன்னார்வ அறக்கட்டளையான சப்ரங் டிரஸ்ட். அனைவருக்கும் கல்வி அளிப்பதற்காக அரசு தொடங்கி செயல்படுத்தும் சர்வ சிக்‌ஷா அபியான் (எஸ்எஸ்ஏ) திட்டத்திற்காக இந்த அறக்கட்டளைக்கு வந்த ரூ. 1.4 கோடியை தனது சொந்த வங்கிக் கணக்குக்கு மாற்றிக் கொண்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதை இவர்களிடம் பணியாற்றிய முன்னாள் ஊழியர் ரயீஸ்கான் பதான் உறுதி செய்துள்ளார். குஜராத் கலவரம் தொடர்பாக போலியான சாட்சிகளை தயார் செய்து அவர்களை மும்பைக்கு அழைத்துச் சென்று சாட்சி அளிக்கச் செய்ததாகவும் ஒரு குற்றச்சாட்டு டீஸ்டா ஷெதால்வட் மீது உள்ளது.

மக்களின் மேம்பாட்டுக்கு, சமூக மேம்பாட்டுக்காக என்ஜிஓக்கள் செயல்படுகின்ற வரையில் அது மக்களுக்கு நன்மைதான். அதேசமயம், இந்தியாவின் வளர்ச்சியைத் தடுக்கும் நோக்கம் கொண்ட அந்நிய சக்திகளுக்குத் துணைபோவதாக குற்றச்சாட்டுகள் வந்திருப்பது, கவலைக்குரிய - அராய்ச்சிக்குரிய ஒன்று!

-

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x