Published : 18 Jun 2018 11:30 AM
Last Updated : 18 Jun 2018 11:30 AM

பங்குச்சந்தையில் வெள்ளிவிழா காணும் இன்ஃபோசிஸ்

டந்த ஜூன் 14-ம் தேதியுடன் இன்ஃபோசிஸ் நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு 25 ஆண்டுகள் முடிவடைந்திருக்கின்றன. தற்போதைக்கு இ-காமர்ஸ் துறையில் பல ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உருவாகி இருக்கின்றன என்றால் அதற்கு பிளிப்கார்ட் காரணமாகும். ஆனால் டெக்னாலஜி துறையில் தற்போது உள்ள பெரும்பாலான நிறுவனங்களுக்கு முன்னுதாரணமாக இருந்தது இன்ஃபோசிஸ் என்றால் மிகையாகாது. அதேபோல நிறுவனங்கள் பணியாளர்களுக்கு பங்குகளை வழங்குவது என்பது வழக்கமாக இருக்கிறது. ஆனால் இந்த கலாசாரத்தை தொடங்கி வைத்தது இன்ஃபோசிஸ். இதனால் பல லட்சாதிபதிகள் உருவானார்கள். கார் டிரைவர் முதல் பல பணியாளர்கள் இதனால் பயன் அடைந்தார்கள்.

1993-ம் ஆண்டு ஒரு பங்கின் விலை ரூ.95 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் முதலீட்டாளர்களிடம் போதுமான வரவேற்பு இல்லை. மார்கன் ஸ்டான்லி நிறுவனம் மட்டும் ஐபிஓவில் 13% பங்குகளை வாங்கியது. ஆனால் பட்டியலான அன்று மட்டும் 60 சதவீதம் அளவுக்கு உயர்ந்து 145 ரூபாயில் முடிவடைந்தது. பட்டியலான சமயத்தில் 10,000 ரூபாயை முதலீடு செய்திருந்தால் இந்த 25 ஆண்டு காலத்தில் அந்த முதலீட்டின் மதிப்பு ரூ.2 கோடிக்கு மேல் உயர்ந்திருக்கும்.

இன்ஃபோசிஸ் முதலீட்டாளர்கள் மட்டுமல்லாமல், இன்ஃபோசிஸில் கோடி ரூபாய்க்கு மேல் ஆண்டு சம்பளம் வாங்குபவர்களும் இருக்கிறார்கள். 2016-ம் ஆண்டு இந்தியாவில் ரூ.1 கோடிக்கு மேல் ஆண்டு சம்பளம் வாங்குபவர்கள் 48பேர் இருக்கிறார்கள். ஆனால் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் வெளிநாட்டு கிளைகளில் 1800-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வழங்கப்படுகிறது.

இந்த இடைப்பட்ட காலத்தில் நிறுவனம் 11 முறை போனஸ் பங்குகளை வழங்கி இருக்கிறது. ஒரே ஒரு முறை மட்டும் பங்கின் முகமதிப்பினை பிரித்திருக்கிறது. 2000-ம் ஆண்டு முதல் இதுவரை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் டிவிடெண்ட் வழங்கி வரும் நிறுவனமாக இன்ஃபோசிஸ் இருக்கிறது.

1981-ம் ஆண்டு 10,000 ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்டது இந்த நிறுவனம். ஆரம்பத்தில் இன்ஃபோசிஸ் கன்சல்டன்ஸி என்னும் பெயரில் தொடங்கப்பட்டது. 1992-ம் ஆண்டு இன்ஃபோசிஸ் டெக்னாலஜீஸ் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 2011-ம் ஆண்டு இன்ஃபோசிஸ் டெக்னாலஜீஸ் என்னும் பெயர் இன்ஃபோசிஸ் என்று மாற்றப்பட்டது. நாராயண மூர்த்தி மற்றும் அவர்களது நண்பர்கள் இணைந்து தொடங்கப்பட்ட நிறுவனமாக இருந்தாலும் பொதுப்பங்கு வெளியீட்டுக்கு பிறகு நிறுவனர்கள் தங்களது பங்குகளை படிப்படியாக குறைத்துக்கொண்டே வந்தார்கள். தற்போது நிறுவனர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தின் வசம் 12.9 % பங்குகள் மட்டுமே இருக்கிறது.

இன்ஃபோசிஸ் நிறுவனம் பல மைல்கற்களை எட்டி இருக்கிறது. பல முதலீட்டாளர்களை கோடீஸ்வரர்களாக்கியது என்பதெல்லாம் சரிதான். ஆனால் பங்குச்சந்தை முதலீட்டில் கடந்த கால வருமானம் எதிர்காலத்திலும் இருக்கும் என கணிக்கமுடியாது. இதே வருமானம் எதிர்காலத்திலும் இருக்கும் என உத்தரவாதமும் கொடுக்க முடியாது. சீரான வருமானம் கிடைக்கும் என்றாலும் அபரிமிதமான வருமானத்துக்கு முதலீட்டாளர்கள் அடுத்த இன்ஃபோசிஸைதான் கண்டுபிடிக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x