Published : 18 Jun 2018 11:29 AM
Last Updated : 18 Jun 2018 11:29 AM

அலசல்: போராட்டமா...முன்னேற்றமா?

ஸ்டெர்லைட் போராட்டங்களைத் தொடர்ந்து சென்னை- சேலம் எட்டு வழி பசுமைவழிச் சாலை திட்டத்துக்கான போராட்டங்கள் தமிழகத்தில் தொடங்கியிருக்கின்றன. இந்தத் திட்டத்தின் மூலம் காடுகள் அழிக்கப்படும் வாய்ப்புள்ளதாக சுற்றுச்சூழலியலாளர்களும், நிலம் கையகப்படுத்தப்படுவதை எதிர்த்து விவசாயிகளும் போராட்ட களத்தில் இறங்கியுள்ளனர். மத்திய அரசின் பாரதமாலா பரியோஜனா தேசிய நெடுஞ்சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் சென்னையிலிருந்து சேலம் வரை 277 கிலோமீட்டருக்கு ரூ.10,000 கோடி செலவில் இந்த சாலை அமைக்கப்பட இருக்கிறது.

இந்தத் திட்டத்துக்கு எழுந்துவரும் எதிர்ப்பு குறித்து சட்டப் பேரவையில் பேசியுள்ள தமிழக முதல்வர் பழனிச்சாமி, இந்த புதிய எட்டுவழிச் சாலையை நாங்கள் தனியாருக்கு திறந்துவிடவில்லை, பொதுமக்களின் பயன்பாட்டுக்குத்தான் தர இருக்கிறோம் என்று கூறியிருக்கிறார். மொத்தமாக இந்தத் திட்டத்துக்கு 1,900 ஹெக்டேர் நிலம் தேவைப்படுவதாகவும் முதல்வர் கூறியிருக்கிறார். இவற்றில் 400 ஹெக்டேர் அளவுக்கு புறம்போக்கு நிலம் கைப்பற்றப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதுதவிர மீதியுள்ள நிலம் உரிமையாளர்களிடமிருந்து கைப்பற்றப்பட இருக்கிறது.

நிலம் கையகப்படுத்தப்படுவதால் உணர்வு ரீதியாக மக்களுக்கு எழக்கூடிய பாதிப்புகள் ஒருபுறம் இருந்தாலும் அதைவிட அதிகமான மக்களுக்கு இந்தத் திட்டத்தின் மூலம் பயன் கிடைக்க இருக்கிறது. வளர்ச்சி அதிகரிக்கும்போது இதுபோன்ற சிக்கல்கள் தவிர்க்க முடியாது என்பதே நிதர்சனமான உண்மையாக இருக்கிறது.

தற்போது சென்னையிலிருந்து சேலம் செல்ல சென்னை- பெங்களூரு மற்றும் சென்னை-மதுரை என 2 தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. இவற்றை அகலப்படுத்தினால் 2,200 ஹெக்டேர் நிலத்தை கையகப்படுத்த வேண்டும் என்று அரசு கூறுகிறது. 8 வழிப்பாதையின் மூலம் கையகப்படுத்தவேண்டிய நிலத்தின் அளவு 1,900 ஹெக்டேராக குறைந்துள்ளதையும் அரசு சுட்டிக்காட்டுகிறது. கையகப்படுத்தப்படும் நிலத்தின் மதிப்பைவிட 2 மடங்கு அளவுக்கு இழப்பீடு வழங்குவதாக அரசு உறுதி அளித்திருக்கிறது. ஆனால் இந்தத் திட்டத்தின்கீழ் விளை நிலங்கள் கைப்பற்றப்படுமேயானால் அதன் மூலம் கிடைக்கிற லாபம் என்பது இழப்பீட்டுத் தொகையால் மட்டுமே ஈடுகட்டக் கூடியதாக இருக்கும் என்று சொல்லமுடியாது. எனவே கையகப்படுத்தப்பட இருக்கிற நிலத்துக்கு இணையான நிலத்தை வேறொரு பகுதியில் வழங்குவதை அரசு முன்னெடுப்பது நல்ல தீர்வாக இருக்கும்.

பயண நேரம் குறைவதைத் தவிர இந்தத் திட்டத்தினால் விளையக்கூடிய மறைமுக நன்மைகளும் முக்கியமானவையே. தூரம் குறைவதால் ஆண்டுக்கு ரூ.700 கோடி அளவுக்கு டீசல் சேமிப்பு இந்தத் திட்டத்தினால் உருவாகும் என கூறப்படுகிறது. திருவண்ணாமலை மற்றும் தர்மபுரி பகுதிகளில் தொழில் வளர்ச்சி அதிகரிக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

பல்வேறு உறுதிகளை அரசாங்கம் அளித்திருக்கும் நிலையில் அவை செயல்பாட்டு வடிவத்திலும் தொடரும் வகையில் மேற்பார்வை செய்யவேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது. அதேவேளையில் தொழில்நுட்பமும், மனித வாழ்வும் தொடர்ந்து முன்னேறி வரும் நிலையில் இதுபோன்ற திட்டங்களுக்கு தொடர் முட்டுக்கட்டை போடுவது சரியான வழிமுறையாக இருக்காது என்பதை மக்களும் உணரவேண்டி இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x