Published : 28 May 2018 11:37 AM
Last Updated : 28 May 2018 11:37 AM

விடைபெறுகிறது டாடா `இண்டிகா’

வாடகை கார்களில் ஹேட்ச் பேக் மாடல் என்றாலே அனைவரது நினைவுக்கு வருவது டாடா இண்டிகா கார்தான். வாடகை கார் செயலிகளான ஓலா, உபெர் மூலம் ஹேட்ச் பேக் காரை பதிவு செய்தாலே உங்களுக்கு இண்டிகா கார்தான் நிச்சயம் வரும். இத்தகைய பிரபலமான இண்டிகா காரை இனி தயாரிக்கப் போவதில்லை என்று டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்து விட்டது. இந்த காருக்கான தேவை குறைந்ததைத் தொடர்ந்து இதன் உற்பத்தியை நிறுத்திவிட்டதாக அறிவித்துள்ளது.

இதேபோல இந்நிறுவனத்தின் மற்றொரு செடான் காரான இண்டிகோ சிஎஸ் மாடல் உற்பத்தியையும் நிறுத்திவிட்டது டாடா மோட்டார்ஸ்.

1998-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற ஆட்டோமொபைல் கண்காட்சியில் அப்போது மத்திய தொழில்துறை அமைச்சராக இருந்த முரசொலி மாறன் காரை அறிமுகப்படுத்தினார். இந்தியாவின் `கோஹினூர் வைரம்’ என்று இந்த காரை அவர் வர்ணித்தார். முழுவதும் இந்திய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட கார் என்ற பெருமை இண்டிகாவை சாரும். டாடா மோட்டார்ஸுக்கு புதிய சந்தை வாய்ப்பை உருவாக்கியதில் இண்டிகாவுக்கு பெரும் பங்கு உண்டென்றால் அது மிகையல்ல. அதுவரையில் லாரிகள், பஸ்களை உற்பத்தி செய்து வந்த இந்நிறுவனம் கார் தயாரிப்பில் ஈடுபடத் தொடங்கி முதலில் அறிமுகம் செய்ததும் இந்த காரைத்தான்.

1991-ம் ஆண்டு குழுமத்தின் தலைவராகப் பொறுப்பேற்ற ரத்தன் டாடாவின் முழு முயற்சியால் வெளியானதுதான் இண்டிகா. அம்பாசிடர் காரை போன்ற ஸ்திரத்தன்மையும் அதற்குரிய இன்ஜின் நுட்பத்துடனும், மாருதி ஜென் மாடல் காருக்கு இணையான தோற்றத்தையும் ஒருங்கே கொண்டதாக இண்டிகா கார் இருந்தது.

டாடா மோட்டார்ஸ் தயாரிப்பின் மீதிருந்த அசைக்க முடியாத நம்பிக்கை காரணமாக ஆட்டோமொபைல் கண்காட்சியில் இந்த கார் அறிமுகப்படுத்தப்பட்டபோது இந்த காரைப் பார்க்க அலைமோதிய கூட்டமே இதற்கு மிகச் சிறந்த சான்றாகும். அதே ஆண்டில் ஹூண்டாய், தேவூ, டொயோடா நிறுவன கார்கள் கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தாலும், இண்டிகா காரை காண வந்த கூட்டமே அதிகம். முதலாவது ஹேட்ச்பேக் மாடலும் இதுவே. அதுவும் டீசல் இன்ஜினை கொண்ட மாடலாக இது இருந்தது பலரையும் கவர்ந்தது.

இண்டிகா அறிமுகம் செய்வதற்கு முன்பாகவே மாருதி நிறுவனம் தனது பிரபல மாடலான 800 மற்றும் ஜென் மாடல் கார்களின் விலையையும் குறைத்ததற்குக் காரணமே இந்த கார் ஏற்படுத்திய தாக்கமே. தொடக்கத்தில் இந்த கார் அதிக இரைச்சலை ஏற்படுத்துவதாக புகார்கள் எழுந்தாலும் நாளடைவில் அது சரி செய்யப்பட்டதால் விற்பனை அதிகரித்தது. அறிமுக விழாவிலேயே ஒரு லட்சம் பேர் முன் பதிவு செய்ததும் இந்த காருக்குத்தான்.

ஏறக்குறைய 20 ஆண்டுகளாக மிகவும் பிரபலமான மாடலாக இது திகழ்ந்தது. சிறிய ரக கார்களில் அதுவும் டீசல் மாடல் காராக இண்டிகா இருந்ததால் வாடகை கார் இயக்கும் நிறுவனங்கள் பெரும்பாலும் டாடா இண்டிகா காரைதான் தேர்வு செய்தன. பராமரிப்பு செலவு குறைவு போன்ற பல சாதக அம்சங்களும் இதற்கு இருந்ததால் வாடகைக் கார் ஓட்டுநர்கள் இந்த காரைத்தான் முதலில் தேர்வு செய்வர்.

இந்த காருக்கு மாற்றாக 2014-ம் ஆண்டில் டாடா மோட்டார்ஸ் ஜெஸ்ட் மற்றும் போல்ட் ஆகிய மாடல் கார்களை அறிமுகப்படுத்தியபோதிலும் இண்டிகா கார் தொடர்ந்து உற்பத்தி செய்யப்பட்டது.

சமீப காலமாக இண்டிகா காருக்கான முன்பதிவு குறைந்ததைத்தொடர்ந்து இந்த கார் உற்பத்தியை நிறுத்தி விட்டதாகவும், ஏற்கெனவே இந்த கார்களை பயன்படுத்துவோருக்குத் தேவையான உதிரி பாகங்களை நிறுவனம் தயாரித்து அளிக்கும் என்று டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

செடான் பிரிவில் இண்டிகோ கார் மிகச் சிறந்ததாக இருந்தது. ஆனால் சமீப காலமாக இந்த காருக்கும் மவுசு குறைந்ததைத் தொடர்ந்து இதன் உற்பத்தியையும் டாடா மோட்டார்ஸ் நிறுத்தியுள்ளது. 2002-ம் ஆண்டில் இண்டிகோ அறிமுகம் செய்யப்பட்டது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இவற்றுக்கு மாற்றாக டியாகோ, ஹெக்ஸா, டிகோர் மற்றும் நெக்ஸான் கார்களை அறிமுகம் செய்து அவற்றை பிரபலப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. இந்த நான்கு மாடல் கார்களும் டாடா மோட்டார்ஸின் புனே ஆலை மற்றும் குஜராத் மாநிலத்தில் உள்ள சனந்த் ஆலையில் தயாரிக்கப்படுகின்றன.

2017-ம் ஆண்டில் மொத்தமே 19,042 இண்டிகா கார்கள்தான் உற்பத்தி செய்யப்டப்டுள்ளன. ஆனால் 2018-ம் ஆண்டில் இதன் உற்பத்தி 1,686 ஆக சரிந்துவிட்டது. இதேபோல இண்டிகோ கார் 2017-ல் 14,976 உற்பத்தி செய்யப்பட்டன. 2018-ல் இது 556 ஆகக் குறைந்து விட்டது.

1983-ம் ஆண்டு தயாரான மாருதி நிறுவனத்தின் 800 மாடல் கார் 2014-ம் ஆண்டுதான் நிறுத்தப்பட்டது. இதேபோல சிறிய ரகக் கார் பிரிவில் பிரபலமான இண்டிகாவும் இனி கிடைக்காது என்பது சற்று வருத்தமான விஷயம்தான். ஆனால் மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை என்பதை ஏற்கத்தானே வேண்டும். நன்றாக விற்பனையாகி வந்த இண்டிகாவுக்கே இந்த நிலைமை என்றால் நானோவின் நிலைமை என்ன ஆகுமோ?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x