Published : 21 May 2018 09:48 AM
Last Updated : 21 May 2018 09:48 AM

வங்கிகளுக்கு ஆபத்தாகிறதா ஆர்பிஐ நடவடிக்கை?

பொ

துத்துறை வங்கிகளை உருவாக்கியதன் நோக்கம் தெளிவானது. பொருளாதார ரீதியிலான உதவிகள் மக்களுக்கு எளிதாகச் சென்று சேர வேண்டும் என்பதுதான். பொதுமக்களிடமிருந்து சேமிப்பை திரட்டுவதும், அந்த சேமிப்பை தேவையானவர்களுக்கு குறைந்த வட்டியில் அளிப்பதும்தான் அதன் இலக்கு. வங்கிகளின் நிதி ஆதாரமும் இதுதான்.

இத்தனை ஆண்டுகளில் அந்த இலக்கில் எவ்வளவு தூரம் பயணம் செய்திருக்கிறோம் என்பது தனிக் கதை. ஆனால் வங்கிகளின் செயல்பாடுகள் கடந்த சில ஆண்டுகளாக இந்த அடிப்படையையே கேள்விக்குறியாக்கியுள்ளது.

2017 டிசம்பர் இறுதி நிலவரப்படி இந்திய பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் ரூ.8.5 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. 2016-17 நிதியாண்டில் பொதுத்துறை வங்கிகள் 24.9 சதவீதம் வாராக்கடனுக்கு ஒதுக்கியுள்ளன. இந்த நிலையில் வாராக்கடனை வசூலிப்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளால் பொதுத்துறை வங்கிகளின் நம்பகத்தன்மையில் கேள்விக்குறி உருவாகியுள்ளது.

தேனா வங்கி 2017-18-ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை சமீபத்தில் பங்குச் சந்தைக்கு தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில் ரிசர்வ் வங்கியின் உத்தரவை குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக தேனா வங்கி புதிய கடன்களை அளிக்கவும், புதிய கிளைகள் திறப்பது மற்றும் பணியாளர் நியமனம் போன்றவற்றை தடை செய்து பிசிஏ (promt corrective action) சட்டப்படி ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளதாகக் குறிப்பிட்டிருந்தது. இதற்கு காரணம் தேனா வங்கியின் வாராக்கடன் கடந்த ஆண்டைவிடவும் அதிகரித்து 22 சதவீதமாக உள்ளது. குறிப்பாக 2016-ம் ஆண்டில் ரூ.12,618 கோடியாக இருந்த வாராக்கடன் 2017-ம் நிதியாண்டில் ரூ. 16,361 கோடியாக அதிகரித்துள்ளது. வங்கிகளின் வாராக்கடன்களை முறைப்படுத்த இந்த சட்டம் ரிசர்வ் வங்கிக்கு அதிகாரத்தை அளிக்கிறது.

அலாகாபாத் வங்கியின் நிலையும் இதுதான். இந்த வங்கி 2017-18 நிதியாண்டில் ரூ.4,674 கோடி நிகர நஷ்டத்தினை சந்தித்துள்ளது. இதனால் இந்த வங்கியும் பிசிஏ சட்டத்தின்படி நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளது.

இந்த தடை எவ்வளவு நாட்களுக்கு நீடிக்கும், எப்போது விலக்கிக் கொள்ளப்படும் என்பது தெரியாது. வாராக்கடன் நிலைமை மேம்படும்பட்சத்தில் நடவடிக்கைகள் திரும்பப் பெறப்படலாம். ஆனால் இப்போதைய நடவடிக்கைகள் காரணமாக இந்த வங்கிகளின் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கையில் தாக்கம் ஏற்படும் வாய்ப்புள்ளது.

பிசிஏ சட்டம்

பொதுத்துறை வங்கிகளில் வாராக்கடன் சிக்கலை தீர்ப்பதற்காக ரிசர்வ் வங்கி தனது விதிமுறைகளைக் கடுமையாக்கியுள்ளது. குறிப்பாக மொத்த வாராக்கடன், நிகர வாராக்கடன், போது மான மூலதன விகிதம் மற்றும் சொத்துகள் மூலமான வருமானம் போன்றவற்றில் ஆர்பிஐ புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது. இதற்கான பிசிஏ சட்டத்தின்படி நடவடிக்கை மேற்கொள்கிறது. இந்த நடவடிக்கையின் கீழ் வரும் வங்கிகள் டிவிடெண்ட் வழங்குவது, கிளை விரிவாக்கம், கடன் வழங்குவது போன்றவை மேற்கொள்ள முடியாது.

தற்போது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட இரண்டு வங்கிகளுடன் சேர்த்து மொத்தம் 11 பொதுத் துறை வங்கிகளை ரிசர்வ் வங்கி தனது கண்காணிப்பு வளையத்தில் வைத்துள்ளது. குறிப்பாக யுனைடெட் வங்கி, கார்ப்பரேஷன் வங்கி, ஐடிபிஐ, யுகோ வங்கி, பேங்க் ஆப் இந்தியா, சென்ட்ரல் வங்கி, ஐஓபி, ஓரியண்ட பேங்க், பேங்க் ஆப் மஹாராஷ்டிரா என மொத்தம் பதினோரு வங்கிகள் மீது பிசிஏ சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொள்ள ரிசர்வ் வங்கி நேரம் பார்த்து வருகிறது.

நிலைக்குழு பரிந்துரைகள்

வங்கிகள் கடன் அளிக்கக்கூடாது என்கிற கட்டுப்பாடுகளினால் மக்களிடம் நம்பிக்கை இழக்காதா என்கிற கேள்வி எழுகிறது. இந்த நிலைமைக்கு என்ன காரணம் என அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் தாமஸ் ஃபிராங்கோ சில கருத்துகளை முன்வைத்தார். `` வாராக்கடன் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக 2016-ம் ஆண்டில் நாடாளுமன்ற நிலைக்குழு 11 பரிந்துரைகள் அளித்தது. இந்த பரிந்துரைகளில் வாராக்கடனை வசூலிக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், உள்கட்டமைப்பு துறைகளுக்கு அளித்த வாராக்கடன்களை மாநில அரசுகள் பகிர்ந்து கொள் வது என பல முக்கிய நடவடிக்கைகள் இருக்கின்றன. பெரு நிறுவனங்கள் வாங்கிய கடனை வசூலிக்க அந்த நிறுவனர்களின் இதர சொத்துகளை இணைப்பது போன்ற பரிந்துரைகளும் இடம்பெற்றுள்ளன. ஆனால் மத்திய அரசு இந்த பரிந்துரைகளை செயல்படுத்துவதில் தயக்கம் காட்டுகிறது.

இது தொடர்பாக நிலைக்குழு பல முறை வலியுறுத்தினாலும் திட்டமிட்டே இந்த பரிந்துரைகள் புறக்கணிக்கப்படுகின்றன. பொதுத்துறை வங்கிகளின் மீது மக்களுக்கு அதிருப்தியை உருவாக்கவே அரசு அந்த பரிந்துரைகளை செயல்படுத்தவில்லை என்கிற சந்தேகம் வருகிறது’’ என்கிறார்.

மீள முடியாத நிலை

``வாராக்கடன் நிறுவனங்கள் மீது நேரடியாக நடவடிக்கைகள் எடுப்பதை விடுத்து அவர்களுக்கு சலுகைகள் வழங்குவது, சலுகைகள் அடிப்படையில் கடன்களை தள்ளுபடி செய்வது என்கிற நடவடிக்கைகளையே அரசு மேற்கொண்டு வருகிறது’’ என்கிறார் வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சி.ஹெச். வெங்கடாச்சலம்.

``கடந்த ஆண்டில் இந்தியாவில் உள்ள அனைத்து பொதுத்துறை வங்கிகளின் லாபம் மட்டும் ரூ. 1,58,000 கோடி. ஆனால் வாராக்கடனுக்கான ஒதுக்கீடு அதிகரிப்பால் வங்கிகளின் நஷ்டமும் அதிகரித்துள்ளது. ஆனால் வாராக்கடனை வசூலிப்பதற்கான முனைப்பான நடவடிக்கைகளை எடுக்காமல் வங்கிகள் மீதே ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்கிறது.

வங்கிகள் கடன் அளிப்பதன் மூலமே வளர்ச்சி அடைய முடியும். இல்லையெனில் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் டெபாசிட்டுகளுக்கு உரிய வட்டியை அளிக்க முடியாது. இதற்கு தீர்வாக முதலீட்டு பத்திரங்களில் முதலீடு செய்து அதன் மூலமான வருமானத்தில் டெபாசிட்களுக்கான வட்டியை அளிக்க ரிசர்வ் வங்கி வலியுறுத்துகிறது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக முதலீட்டு பத்திரங்களின் மூலமான வருமானமும் குறைந்துள்ளது. இதனால் வங்கிகளுக்கு நஷ்டமே ஏற்பட்டுள்ளது. வாராக்கடன் சுமையைக் குறைக்க பெரு நிறுவனங்களின் கடனை விரைவாகக் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஆனால் வங்கிகளை சீரமைக்க புதிய சட்டங்கள் என்கிற பெயரில் மக்களின் சேமிப்புகளை கை கழுவும் நடவடிக்கைகளையே அரசு மேற்கொள்கிறது. இது பொதுத்துறை வங்கிகளை மீள முடியா நஷ்டத்தில் தள்ளும்’’ என்கிறார்.

உயரதிகாரிகளின் மோசடி

இதுநாள் வரை வங்கி மோசடிகளில் ஈடுபடுபவர்கள் வங்கிகளின் கடைநிலை ஊழியர்கள் தான் என்கிற பேச்சு இருந்தது. ஆனால் வாராக்கடன் மோசடிகள் வெளிச்சத்துக்கு வந்த பின்னர் இந்த மோசடிகளில் வங்கியின் உயரதிகாரிகள் ஈடுபட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கிங்பிஷர் நிறுவன நிதிமோசடியில் முக்கிய பொதுத்துறை வங்கி அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். நீரவ் மோடியின் ரூ. 13,000 கோடி ரூபாய் மோசடியில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் பிராடி ஹவுஸ் கிளை மேலாளர் உள்பட பல அதிகாரிகள் கைது செய்யபட்டனர். 2015-ம் ஆண்டு முதல் 2017 ஆண்டு வரை தலைமைச் செயல் அதிகாரியாகவும், இயக்குநராகவும் இருந்த உஷா அனந்த சுப்ரமணியன் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியானதால், தற்போது அலாகாபாத் வங்கியின் தலைவர் பொறுப்பில் இருந்தாலும் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததைத் தொடர்ந்து இவரது அதிகாரங்கள் பறிக்கப்பட்டுள்ளன. யுனைடெட் வங்கியில் சிம்பாலி சர்க்கரை ஆலை ஊழலிலும் வங்கியின் இயக்குநர்களுக்கு தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது.

பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா, ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ், ஐடிபிஐ வங்கிகளின் அதிகாரிகள் 10 ஆயிரம் போலி கணக்குகளை உருவாக்கி 1,500 கோடி ரூபாய் அளவிற்கு கடன் வழங்கி உள்ளனர் என்று 2011 ஆம் ஆண்டே சிபிஐ ஒரு முறைகேட்டினை வெளிக் கொண்டுவந்துள்ளது. இப்படி பொதுத்துறை வங்கிகளில் வாராக்கடன் அதிகரிப்புக்கு வங்கி உயரதிகாரிகளும் முக்கிய காரணம்.

தீர்வு என்ன

வாராக்கடன் அதிகரிப்புக்கு அரசின் கொள்கை முடிவுகளும் காரணமாக உள்ளன என்கின்றனர் தொழில்துறையினர். குறிப்பாக வாராக்கடனின் 50 சதவீதம் அளவுக்கு உருக்கு, மின்சாரம், உள்கட்டமைப்பு மற்றும் தொலைத் தொடர்பு துறையில் இயங்கும் நிறுவனங்களின் பங்களிப்பாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இந்த நிறுவனங்களின் செயல்பாடுகள் லாபகரமாக இல்லை. சீனாவில் இருந்து உருக்கு இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் தளர்வால் இந்திய நிறுவனங்கள் பாதிப்பை சந்தித்துள்ளன. ஸ்பெக்ட்ரம் அலைவரிசைக்கான கட்டணத்தால் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் செயல்பாடுகளும் லாபகரமாக இல்லை. இதனால் அரசின் கொள்கைகளில் மாற்றங்கள் வேண்டும் என்கின்றனர்.

வாராக்கடனை வசூலிப்பது தொடர்பான வழக்குகளை விசாரிப்பதிலும் போதிய வேகம் இல்லை. தேசிய நிறுவனங்கள் சட்டத் தீர்ப்பாயத்தில் வழக்குகள் தேங்குகின்றன. 2017 டிசம்பர் வரை 8,457 வழக்குகள் என்சிஎல்டி-யில் நிலுவையில் உள்ளது. தேசிய நிறுவனங்கள் சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் 264 வழக்குகள் தேங்கியுள்ளன. இப்படியான சூழ்நிலையில்தான் பிசிஏ நடவடிக்கையின் கீழ் பொதுத்துறை வங்கிகள் வந்துள்ளன. ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை பூமாராங் கதையாக பொதுத்துறை நிறுவனங்களுக்கே ஆபத்தாக அமைந்துவிடக்கூடாது என்பதுதான் இப்போதைய கவலை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x