Published : 14 May 2018 11:07 AM
Last Updated : 14 May 2018 11:07 AM

லூப்ரிகன்ட் தயாரிப்பில் இறங்குகிறது மாருதி சுஸுகி

கா

ர் தயாரிப்பில் முன்னணியில் உள்ள மாருதி சுஸுகி நிறுவனம் தற்போது வாகனங்களில் பயன்படுத்தும் உயவு எண்ணெய் எனப்படும் லூப்ரிகன்ட் தயாரிப்பிலும் இறங்கியுள்ளது.

கார்களில் பயன்படுத்துவதற்கு உகந்த லூப்ரிகன்ட்டை எக்ஸ்டார் என்ற பெயரில் இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் மூலம் ஏற்கெனவே காலம் காலமாக உயவு எண்ணெய் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு கடுமையான போட்டியை உருவாக்கியுள்ளது மாருதி சுஸுகி. லூப்ரிகன்ட் தயாரிப்பில் தற்போது இந்தியன் ஆயில் நிறுவனத் தயாரிப்பான செர்வோ லூப்ரிகன்ட் முன்னணியில் உள்ளது. இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களான எல்எம்எல், டிவிஎஸ், கார் தயாரிப்பு நிறுவனங்களான ஹூண்டாய், ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் வாகனங்களுக்கு செர்வோ-வை பரிந்துரை செய்கின்றன.

அனைத்துக்கும் மேலாக இதுநாள் வரை தனது தயாரிப்புகளுக்கு செர்வோ லூப்ரிகன்ட்டைத்தான் மாருதி சுஸுகி நிறுவனமும் பரிந்துரை செய்து வந்துள்ளது. ஆனால் எக்ஸ்டாரின் வருகைக்குப் பிறகு இந்த நிலை முற்றிலும் மாறும் என்பது உறுதி.

விநியோகஸ்தர்களிடமும் இது தொடர்பான பரிந்துரைகளை மாருதி சுஸுகி அளித்துள்ளதால் டீலர்களும் இந்த லூப்ரிகன்ட்டையே பரிந்துரைக்கின்றனர். இதுவும் சுஸுகி எக்ஸ்டார் பிராண்ட் என்ற பெயரில் வெளிவந்துள்ளது. சுஸுகி வாகனத்தின் முழுமையான பயண சுகத்தை அனுபவிக்க எக்ஸ்டார் லூப்ரிகன்ட்டை பயன்படுத்துங்கள் என்று நிறுவனமும் விளம்பரங்களில் குறிப்பிட்டுள்ளது.

மற்ற தயாரிப்புகளைக் காட்டிலும் இதன் விலையும் அதிகம்.

கார் சந்தையில் 48 சதவீத சந்தையை மாருதி சுஸுகி வைத்துள்ளது. கார்கள் அனைத்தும் சர்வீஸ்களுக்கு விடும்போது அதற்கான பணிமனைகளில் எக்ஸ்டார் பயன்படுத்தத் தொடங்கும்போது அது லூப்ரிகன்ட் சந்தையில் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தும். கேஸ்ட்ரால் போன்ற லூப்ரிகன்ட் தயாரிப்பு நிறுவனங்களின் விற்பனை பெருமளவு சரியும் என்று இத்துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

மாருதி நிறுவனத்தின் வருமானத்தில் சர்வீஸ் மூலமான வருமானத்தின் பங்கு 20 சதவீதமாக உள்ளது. என்ஜின் ஆயில் மற்றும் கூலன்ட் ஆகியன சேவை கட்டணத்தில் பெருமளவு பங்கு வகிக்கின்றன. எக்ஸ்டார் அறிமுகம் மூலம் மாருதி சுஸுகி வருமானம் அதிகரிப்பது நிச்சயம்.

முதல் கட்டமாக மாருதி நெக்ஸா விற்பனையகத்தில் உள்ள விற்பனைக்கு பிந்தைய சேவை மையங்களில் எக்ஸ்டார் லூப்ரிகன்ட் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பின்னர் படிப்படியாக நாடு முழுவதும் உள்ள 3 ஆயிரம் விற்பனையகங்களில் இதை விற்க சுஸுகி முடிவு செய்துள்ளது.

லூப்ரிகன்ட் தயாரிப்பு நிறுவனங்களுக்கு புதிய சவாலை உருவாக்கியுள்ளது எக்ஸ்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x