Published : 09 Apr 2018 11:18 AM
Last Updated : 09 Apr 2018 11:18 AM

ஸ்டார் வசமாகும் இந்திய கிரிக்கெட்!

கி

ரிக்கெட் போட்டி ஒளிபரப்பு உரிமையைப் பெற நிறுவனங்கள் போட்டி போட்ட விதமே ஒரு கிரிக்கெட் போட்டியைப் போன்று சுவாரஸ்யமானதுதான். ஒளிபரப்பும் உரிமையைப் பெற்றுவிட வேண்டும் என்ற கோதாவில் நிறுவனங்கள் 8 நாள்களாக தலை முடியை பிய்த்துக்கொண்டு அலைந்தன.

மார்ச் 27-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3-ம் தேதி வரை ஏலம் நடைபெற்றது. நிறுவனங்கள் போட்டியிடுவதற்காக பல்வேறு கேள்விகளை அடுக்கியபடியே இருந்தன. ஐபிஎல் கிரிகெட் போட்டி ஒளிபரப்பை பறிகொடுத்த சோகத்தோடு இம்முறையாவது ஒளிபரப்பு உரிமையைப் பெற்றுவிட வேண்டும் என்ற தீவிரத்தோடு களம் இறங்கியது சோனி.

பல செல்போன் சேவை நிறுவனங்களின் தூக்கத்தைக் கலைத்தாகிவிட்டது. இனி வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் ஒளிபரப்பு மூலம் கிரிக்கெட் விருந்து படைக்கலாம் என ஜியோ களமிறங்கியது.

சர்வதேச அளவில் பிரபலமாக விளங்கும் ஃபேஸ்புக் மற்றும் கூகுள் நிறுவனங்கள் டிஜிட்டல் உரிமை பெற ஏலத்தில் பங்கேற்றன. போதாக்குறைக்கு யுப் டிவி-யும் போட்டிக் களத்தில் இருந்தது.

டிஜிட்டல் ஒளிபரப்புக்கு முதலாண்டில் ஒரு போட்டிக்கு ரூ. 8 கோடியும் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு தலா ரூ. 4 கோடியும் என அடிப்படைக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. இதேபோல டிவி ஒளிபரப்புக்கு ஒரு போட்டி ஒளிபரப்புக்கு கட்டணம் முதலாண்டில் ரூ. 35 கோடி எனவும் அடுத்தடுத்த ஆண்டுகளில் ஒரு போட்டிக்கு ரூ. 33 கோடி எனவும் அடிப்படைக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.

2023-ம் ஆண்டு மார்ச் 31 வரை இந்திய அணி பங்கேற்கும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுப் பயண போட்டிகளை ஒளிபரப்பும் உரிமைக்கான போட்டி உண்மையிலேயே ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் சோனி நிறுவனத்துக்கு இடையேதான் இருந்தது. இறுதியில் ஒளிபரப்பு உரிமையை பெற்றது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம்தான். ரூ. 6,138.10 கோடி தொகைக்கு ஏலம் எடுத்துள்ளது. முந்தைய ஐந்தாண்டுகளுக்கு ரூ.3,851 கோடி ஏலத்தொகையாக இருந்தது.. ஐந்து ஆண்டுகளுக்கு மொத்தம் 102 போட்டிகளை ஒளிபரப்ப அளிக்கப்பட்ட தொகை இதுவாகும். அதாவது ஒரு போட்டி ஒளிபரப்புக்கு அளிக்கப்படும் தொகை ரூ. 60.1 கோடி.

முந்தைய ஏலத்தில் அதாவது 2012 முதல் 2018 வரையான காலத்தில் ஒரு போட்டி ஒளிபரப்புக்கு அளிக்கப்பட்ட தொகை ரூ. 43 கோடியாகும்.

ஐபிஎல் போட்டிகளை டிஜிட்டலில் ஒளிபரப்பும் உரிமையை ரூ. 3,900 கோடிக்கு வெற்றிகரமாக எடுத்த ஃபேஸ்புக் நிறுவனம் இந்த முறை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்துக்கு எதிராக போட்டியிடமுடியவில்லை. இணையதளம் மூலம் நடந்த ஏலத்தில் கடைசியில் வெற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்துக்குத்தான் கிடைத்தது.

ஐபிஎல் போட்டி ஒளிபரப்பு உரிமை, இப்போது இந்திய கிரிக்கெட் அணி பங்கேற்கும் அனைத்து போட்டிகளையும் டிவி, டிஜிட்டலில் ஒளிபரப்பும் உரிமை ஆகியன ஸ்டார் வசமாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியமே ஸ்டார் வசமாகிவிட்டதைப் போன்ற தோற்றத்தை உருவாக்கியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x