Last Updated : 12 Mar, 2018 11:42 AM

 

Published : 12 Mar 2018 11:42 AM
Last Updated : 12 Mar 2018 11:42 AM

வர்த்தகப் போருக்கு வழிவகுக்கிறாரா ட்ரம்ப்

காரி கான் ராஜிநாமா – கடந்த வார நிகழ்வுகளில் சர்வதேச அளவில் அதிர்வலையை ஏற்படுத்திய மிக முக்கியமான விஷயம். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் தலைமை பொருளாதார ஆலோசகர்தான் காரி கான். உருக்கின் மீது 25 சதவீதமும், அலுமினியத்துக்கு 10 சதவீதமும் இறக்குமதி வரி விதிக்கப் போவதாக அதிபர் அறிவித்ததை எதிர்த்து கான் வெளியேறியது தலைப்புச் செய்தியானது. 14 மாதங்களில் ட்ரம்ப் குழுவில் பலர் வெளியேறியிருந்தாலும் இவரது வெளியேற்றம் சர்வதேச அளவில் விவாதப் பொருளானது.

2008-ம் ஆண்டு சர்வதேச அளவில் நிலவிய பெருமந்த பொருளாதாரத்துக்குப் பிறகு அனைத்து நாடுகளின் தலைவர்களும் தற்சார்பு கொள்கை எடுக்கக் கூடாது என்பதை தெளிவாக உணர்ந்தனர். தாராளமயமாக்கல் ஒன்றுதான் பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்லும் என்பதை அது உணர்த்தியது.

ட்ரம்பை பொறுத்தமட்டில் அவர் எதை சொல்கிறாரோ அதை செயல்படுத்திவிடுவார். தனது முடிவை அவர் ட்விட்டர் பக்கத்தில் நியாயப்படுத்தியுள்ளார். அமெரிக்காவின் வர்த்தகப் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. அதைக் கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். வரி செலுத்த விரும்பவில்லையென்றால் அமெரிக்காவில் ஆலையை அமையுங்கள் என்று உருக்கு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

அமெரிக்கா 110 நாடுகளிலிருந்து இரும்பு, அலுமினியத்தை இறக்குமதி செய்கிறது. 2017-ம் ஆண்டில் மட்டும் அமெரிக்கா இறக்குமதி செய்த இரும்பின் மதிப்பு 2,190 கோடி டாலராகும். இதேபோல அலுமினியமும் 2,000 கோடி டாலர் அளவுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் உருக்கு தேவையில் 75 சதவீதம் இறக்குமதி மூலம்தான் பூர்த்தி செய்யப்படுகிறது.

இருந்தாலும் அமெரிக்காவின் ஒட்டுமொத்த இறக்குமதியில் உருக்கு, அலுமினியத்தின் பங்கு வெறும் 2 சதவீதம்தான். இதைக் குறைத்தாலே வர்த்தகப் பற்றாக்குறை குறைந்துவிடும் என ட்ரம்ப் யோசித்துள்ளது பொருளாதார நிபுணர்களுக்கு புரியாத புதிராக உள்ளது.

இதனால் அமெரிக்க நிறுவனங்களால் சீன நிறுவனங்களுடன் போட்டியிட முடியாத சூழல் உருவாகும். இந்த அறிவிப்பு வெளியான உடனேயே பிரேஸில், தென் கொரியா, சீனா உள்ளிட்ட நாடுகளின் சந்தைகளில் உலோக சந்தைகள் கடுமையாக சரிந்தன. ஆர்சிலர் மிட்டல் பங்கு விலை 5.5 சதவீதம் வரை சரிந்தது.

அதிபரின் அதிரடி அறிவிப்பு அமலானால் என்ன விளைவு ஏற்படும் என்பது குறித்து ரகசியமாக புலனாய்வு செய்தது வர்த்தக துறை. இதனால் அமெரிக்காவுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். ஒருவேளை போர் மூண்டால் அமெரிக்க ராணுவத்தின் தேவைகளை உருக்கு, அலுமினிய தொழில்துறையினரால் பூர்த்தி செய்ய முடியாது என்ற தகவலையும் சேகரித்தது.

இத்தகைய வரி விதிப்பு காரணமாக உருக்கு இறக்குமதி 37 சதவீத அளவுக்கும், அலுமினிய இறக்குமதி 13 சதவீத அளவுக்கும் குறையுமாம். இதனால் அமெரிக்காவின் கட்டுமான தொழில், அலுமினிய கேன் தயாரிப்பு தொழில் அடியோடு பாதிக்கப்படுமாம். இத்துறை சார்ந்த தொழிலாளிகளுக்கு வேலையிழப்பு ஏற்படும். அதேசமயம் பொதுமக்களும் தாங்கள் வாங்கும் பொருளுக்கு அதிகம் செலவிட வேண்டியிருக்கும் என்று கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ஆட்டோமொபைல் தொழில் கடுமையான பாதிப்புக்குளாகும். ஃபோர்டு மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு 100 கோடி டாலர் அளவுக்கு இழப்பு ஏற்படும்.

ட்ரம்ப்பின் நடவடிக்கைகளை கடந்த ஓராண்டாக நன்கு அறிந்துள்ள ஐரோப்பிய யூனியன் அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் 100 பொருள்களைக் கண்டறிந்து அதன் மீது கூடுதல் வரி விதிப்பது குறித்து பரிசீலித்து வருகிறது.

இது அமெரிக்காவுக்குத்தான் பாதிப்பாக அமையும் என்று சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் இ எச்சரித்துள்ளார். வர்த்தக யுத்தம் ஒரு போதும் தீர்வாக இருக்காது என்பதுதான் கடந்தகால நிகழ்வுகளின் படிப்பினை. பிற நாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதை விட அதை அமல்படுத்தும் நாட்டுக்குத்தான் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

இத்தகைய வர்த்தக யுத்தத்துக்கு அமெரிக்கா தயாரானால் பதிலடி தர சீனாவும் ஆயத்தமாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பிய யூனியன் வர்த்தக ஆணையர் செசிலியா மால்ம்ஸ்டோரெம், அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு வரி விதிக்கப் போவதாக அறிவித்துள்ளார். போர்பான், பீநட் பட்டர், கிரேன்பெரீஸ், ஆரஞ்சு ஜூஸ் மட்டுமல்ல ஹார்லி டேவிட்சன் பைக்கும், லெவிஸ் ஜீன்ஸும் வரி விதிப்பில் சிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

கடல்சார் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்படும் என்று பொருளாதார அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். 90 சதவீத வர்த்தகம் கடல் மார்க்கமாக நடைபெறுவதால் இதுபோன்ற தற்சார்பு நடவடிக்கைகள் தாராள வர்த்தகத்தை பாதிக்கும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

இப்போது உருவாகியுள்ள வர்த்தக யுத்தம் வலுப்பெற்றால் அது தாராள வர்த்தகத்தை பாதிக்கும். இது அனைத்து நாடுகளுக்குமே பாதகமான விளைவை ஏற்படுத்தும் என்று ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜூலி பிஷப் தெரிவித்துள்ளார்.

ஒட்டுமொத்தமாக 350 கோடி டாலர் வர்த்தகம் பாதிக்கப்படலாம். அதாவது அமெரிக்காவிலிருந்து 28 நாடுகள் இறக்குமதி செய்யும் பொருள்களின் மதிப்புதான் இது.

உலகளாவிய வர்த்தகத்தைப் பொறுத்தமட்டில் அதை வரையறுப்பது சர்வதேச வர்த்தக அமைப்பு (டபிள்யூடிஓ) மட்டுமே. ஒரு நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் விஷயத்துக்கு மட்டுமே தாராள வர்த்தகத்திலிருந்து விலக்கு அளிக்கலாம். சம்பந்தப்பட்ட நாடுகள் அந்த பொருளுக்கு தடை விதிக்கலாம். மற்றபடி எந்த ஒரு நாடும் சுயமாக தடை விதிக்க முடியாது. அப்படி விதித்தால் அது குறித்து எழும் புகாரை விசாரிப்பதற்கென்றே சர்வதேச தீர்ப்பாயமும் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்காவுக்கு எதிராக பிற நாடுகள் இந்த தீர்ப்பாயத்தில் வழக்கு தொடருவதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளன.

சர்வதேச வர்த்தகத்தில் அமெரிக்கா முன்னோடி என்ற நடைமுறையிலிருந்து எப்போதுமே வழுவி வருவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார் ட்ரம்ப். அதிரடி நடவடிக்கைகளால் தனது மக்களை குஷிப்படுத்தி வந்த ட்ரம்ப் இப்போது சர்வதேச கவனத்தை ஈர்க்கத் தொடங்கியிருக்கிறார். இது அமெரிக்கர்களுக்கே பாதகமாக அமைந்து விடும் போலிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x