Published : 19 Feb 2018 11:37 AM
Last Updated : 19 Feb 2018 11:37 AM

இரண்டாம் இடத்துக்கான போட்டியில் டிவிஎஸ், ஹீரோ

ரு சக்கர வாகன சந்தை தொடர்ந்து உயர்ந்து வந்தாலும், இரு நிறுவனங்களின் மீது தற்போது கவனம் திரும்பி இருக்கிறது. முதலிடத்தில் ஹோண்டா நிறுவனம் இருக்கிறது. ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான காலத்தில் 50 லட்சம் வாகனங்களை விற்றிருக்கிறது ஹோண்டா. முதல் இடம் நிலையாக இருந்தாலும் இரண்டாம் இடத்துக்கான போட்டி நடந்துகொண்டே இருக்கிறது. சமீப மாதங்களில் டிவிஎஸ் மோட்டார்ஸ் மற்றும் ஹீரோமோட்டோ கார்ப் ஆகிய நிறுவனங்கள் மாறி மாறி இரண்டாம் இடத்துக்கு வந்துகொண்டிருக்கிறது.

2016-ம் ஆண்டு ஹீரோ நிறுவனம் பல புதிய மாடல் வாகனங்களை அறிமுகம் செய்து இரண்டாம் இடத்துக்கு வந்தது. ஆனால் 2017-ம் ஆண்டு தொடக்கத்தில் மீண்டும் டிவிஎஸ் இரண்டாம் இடத்துக்கு வந்தது.

ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் (2017) டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகன விற்பனை 8.25 லட்சமாக இருந்தது. முந்தைய 2016-ம் ஆண்டு 6.10 லட்சமாக இருந்தது. மொத்த சந்தையில் 2 சதவீதம் உயர்ந்து 16.2 சதவீதமாக இருந்தது. மாறாக ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தின் விற்பனை சிறிதளவு மட்டும் உயர்ந்து 6.58 லட்சமாக இருக்கிறது. (6.23 லட்சத்தில் இருந்து). அதே சமயத்தில் சந்தை மதிப்பும் 14.5 சதவீதத்தில் இருந்து 12.9 சதவீதமாக குறைந்தது.

டிவிஎஸ் நிறுவனத்தின் ஜூபிடர் மாடல் காரணமாக விற்பனை உயர்ந்திருப்பதாக இக்ரா நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் சுப்ரதா ராய் தெரிவித்தார்.

தற்போது இந்த நிறுவனங்களும் 125 சிசி பிரிவில் கவனம் செலுத்து வருகின்றன. சில வாரங்களுக்கு முன்பு டிவிஎஸ் நிறுவனம் என்டார்க் என்னும் 125 சிசி ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது. இதனை தொடர்ந்து அடுத்த நிதி ஆண்டில் மாஸ்டிரோ எட்ஜ் மற்றும் டூயட் ஆகிய மாடல் வாகனங்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இரு நிறுவனங்களும் 25 வயதுக்கு உட்பட்டவர்களை கவர்வதற்காக 125 சிசி பிரிவு வாகனங்களைத் தயாரிக்கின்றன.

மாதத்துக்கு 15,000 முதல் 20,000 வாகனங்களை விற்பனை செய்ய டிவிஎஸ் இலக்கு நிர்ணயம் செய்திருக்கிறது. இதன் மூலம் ஹீரோ நிறுவனத்துடனா வித்தியாசம் உயரும் என டிவிஎஸ் நம்புகிறது. இதேபோல ஹீரோ நிறுவனம் ஸ்கூட்டர் விற்பனையை வேகப்படுத்த டூயட் வாகனத்தின் விலையைக் குறைத்திருக்கிறது. நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பவன் முஞ்சால் கூறும்போது, புதிய வாகனங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் எங்களுடைய சந்தை உயரும் என கூறியிருக்கிறார்.

இரண்டாம் இடத்தில் மாறுதல்கள் இருந்தாலும் இன்னும் சில காலங்களுக்கு பிறகே இந்த இடத்தை நிலையாக யார் பிடிப்பார்கள் என்பது தெரியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x