Published : 19 Feb 2018 11:39 AM
Last Updated : 19 Feb 2018 11:39 AM

`மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் பேட்டரி பஸ் தயாரிக்கும் சீன நிறுவனம்

 

ட்டோமொபைல் துறை இப்போது பேட்டரி வாகனத் தயாரிப்பை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. பொது போக்குவரத்தில் அதிகம் பயன்படும் பஸ்கள் தயாரிப்பிலும் பல நிறுவனங்கள் இறங்கியுள்ளன. தற்போது சீனாவைச் சேர்ந்த பிஒய்டி நிறுவனம் இந்தியாவில் பேட்டரி பஸ்களைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது.

`மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் இந்தியாவில் பேட்டரி பஸ்களைத் தயாரிப்பதற்காக ஹைதராபாத்தைச் சேர்ந்த கோல்டு ஸ்டோன் குழுமத்துடன் பிஒய்டி நிறுவனம் இணைந்துள்ளது. இவ்விரு நிறுவனங்களும் இணைந்து ரூ. 200 கோடி முதலீட்டில் வாகனங்களைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளன.

கர்நாடக மாநிலம் பிடார் தொழில் பேட்டையில் 100 ஏக்கர் பரப்பளவில் இப்புதிய ஆலை உருவாகி வருவதாக கோல்டு ஸ்டோன் இன்பிராடெக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் என்.கே.ராவல் தெரிவித்துள்ளார். இந்த ஆலை ஆண்டுக்கு 1,000 பஸ்களை உருவாக்கும் திறன் கொண்டதாக இருக்கும். உள்நாட்டில் பொருள்களை பயன்படுத்துவது தொடக்கத்தில் 25 சதவீத அளவுக்கு இருக்கும். அடுத்து படிப்படியாக உயர்த்தப்பட்டு 50 சதவீத அளவுக்கு உள்நாட்டு பொருள்களின் உபயோகம் இருக்கும்.

வாகனங்களுக்கான பேட்டரிகளை இந்தியாவிலேயே தயாரிக்கவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. பல்வேறு மாநில போக்குவரத்து சங்கங்களுடன் இந்நிறுவனம் பேச்சு நடத்திவருகிறது. இதன் மூலம் அதிக எண்ணிக்கையில்பேட்டரி சார்ஜிங் மையங்களை அமைக்கவும் முடிவு செய்துள்ளது. 10 நகரங்களில் குறிப்பாக மும்பை, டெல்லி, அகமதாபாத், ஜம்மு, டெல்லி, லக்னோ, கொல்கத்தா, குவஹாத்தி, ஹைதராபாத், இந்தூர், பெங்களூரு ஆகிய பகுதிகளில் 390 பேட்டரி பஸ்களை இயக்கவும் இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

ஒப்பந்தம்

இமாச்சல பிரதேச சாலை போக்குவரத்துக் கழகம் (ஹெச்ஆர்டிசி), பிரஹன் மும்பை மின் சப்ளை மற்றும் போக்குவரத்து நிறுவனம் (பெஸ்ட்) ஆகியவற்றுக்கு 31 பஸ்களை அளிப்பதற்கான ஆர்டரை இந்நிறுவனம் பெற்றுள்ளது. இவை விரைவிலேயே சப்ளை செய்யப்பட உள்ளன. டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத், ராஜ்கோட் மற்றும் சண்டீகரில் சோதனை ரீதியில் பேட்டரி பஸ்களை இயக்கிப் பார்த்துள்ளது.

இந்தியாவிலிருந்து அண்டை நாடுகளுக்கு பேட்டரி பஸ்களை ஏற்றுமதி செய்யும் திட்டமும் உள்ளது. சூழல் பாதுகாப்பில் கவனம் அதிகரிக்கும்போது இதுபோன்ற சூழல் காப்பு வாகனங்களுக்கு வரவேற்பு நிச்சயம் இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x