Published : 02 Oct 2017 03:16 PM
Last Updated : 02 Oct 2017 03:16 PM

`நானோ’ கார்: வங்கதேச நிறுவனம் ஆர்வம்

நானோ கார் தயாரிக்கும் பணி இன்னும் சிறிது காலத்துக்குத் தொடரும் என்று டாடா நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டு, இது குறித்த தொடர் சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. இந்தியாவில் என்றாவது ஒரு நாள் நானோ கார் உற்பத்தி நின்று போவதற்கான சாத்தியம் அதிகமே. அந்த காலம் சற்று தள்ளிப் போயிருக்கிறது.

ஆனால் ரத்தன் டாடாவின் கனவு காரை தங்கள் நாட்டில் அசெம்பிள் செய்து விற்க வங்கதேச நிறுவனம் ஆர்வம் தெரிவித்துள்ளது.

வங்கதேசத்தில் உள்ள நிதோல் நிலோய் குழுமம் டாடா மோட்டார்ஸின் பிற சிறிய ரகக் கார்களையும் தங்கள் நாட்டில் அசெம்பிள் செய்ய ஆர்வமாக உள்ளது. குறிப்பாக டாடா டியாகோ, டிகோர் ஆகியன இந்நிறுவன விருப்பப் பட்டியலில் இடம்பெற்றுள்ள பிற கார்களாகும். வங்கதேசத்தில் டாடா மோட்டார்ஸின் பங்குதாரராக நிதோல் நிலோய் குழுமம் 1972-ம் ஆண்டிலிருந்தே செயல்படுகிறது.

தங்கள் நிறுவனத்தின் ஆர்வத்தை டாடா மோட்டார்ஸிடம் தெரிவித்துவிட்டதாகவும், நல்ல செய்திக்காக காத்திருப்பதாகவும் தெரிவிக்கிறார் குழுமத்தின் தலைவர் மத்லும் அகமது. கடந்த சில வாரங்களாக இந்தியாவில் முகாமிட்டிருந்த அவர் தனது விருப்பத்தை டாடா மோட்டார்ஸின் உயர் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். ஆனால் இது தொடர்பாக எந்தவிதமான உறுதியான பதிலும் டாடா தரப்பிலிருந்து வெளியாகவில்லை.

ஒருவேளை டாடா மோட்டார்ஸ் அகமதுவின் கோரிக்கையை நிராகரித்துவிட்டால், அடுத்ததாக அவர் நிசான் நிறுவனத்தின் டட்சன் காரை அசெம்பிள் செய்யவோ அல்லது டொயோடாவின் எடியோஸை அசெம்பிள் செய்வது தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார் என தெரிகிறது.

உள்நாட்டில் தயாராகும் கார்களுக்கான தேவை வங்கதேசத்தில் தற்போது அதிகரித்து வருகிறது. முழுவதும் உதிரி பாகங்களை இறக்குமதி செய்து அதை அசெம்பிள் செய்து விற்பது அதிக வாடிக்கையாளரைப் பெற்றுத் தரும். எனவே இந்த முயற்சியில் தீவிரம் காட்டுவதாக அகமது தெரிவித்துள்ளார். வங்கதேசத்தில் ஆண்டுதோறும் 30 ஆயிரம் கார்கள் தேவைப்படுகின்றன. இதில் 90 சதவீதம் ஜப்பானிலிருந்து உபயோகப்படுத்தப்பட்ட கார்களாக வருவதாக அகமது தெரிவிக்கிறார்.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட காராக வங்கதேசம் வரும்போது அதற்கு 165 சதவீதம் சுங்க வரி விதிக்கப்படுகிறது. இதனாலேயே குறைந்த விலை காராக அறிமுகப்படுத்தப்பட்ட நானோவின் விலை கூட வாங்கக்கூடிய விலையில் விற்பனையாகவில்லை. அதேசமயம் வங்கதேசத்தில் அசெம்பிளி செய்து விற்றால் அதற்கு 60 சதவீத வரிதான் விதிக்கப்படும். இதனால் கார் வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அகமது உறுதியாக நம்புகிறார்.

வங்கதேசத்தில் அசெம்பிள் செய்தால் தொடக்கத்தில் ஆண்டுக்கு 6 ஆயிரம் கார்கள் வரை விற்பனை செய்யலாம். இதைக் கருத்தில் கொண்டு வங்கதேசத்தில் ஒரு அசெம்பிளி பிரிவை புதிதாக கட்டவும் தீர்மானித்துள்ளார்.

டாடா தயாரிக்கும் வர்த்தக பிரிவு வாகனங்களை அசெம்பிள் செய்து வங்கதேசத்தில் விற்பனை செய்து வரும் பணியை 1991-ம் ஆண்டிலிருந்து நிதோல் நிலோய் குழுமம் மேற்கொண்டுள்ளது. டாடாவுடன் கூட்டு ஒப்பந்தம் செய்துள்ள இந்நிறுவனத்தில் 60 சதவீத பங்குகள் நிதோல் குழுமத்துக்கு உள்ளது.

வெளிநாட்டில் நானோ காரை அசெம்பிள் செய்வது குறித்தும் டாடா மோட்டார்ஸ் தீவிரமாக பரிசீலித்து வருகிறது. இந்நிலையில் வங்கதேசத்தில் உள்ள தங்கள் நிறுவனத்துக்கு இந்த வாய்ப்பு அளிக்கப்பட்டால், இங்கிருந்து பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வாய்ப்பு பிரகாசமடையும் என்கிறார் அகமது. மேலும் சில நாடுகளுடன் 100 சதவீத வரியற்ற வர்த்தக ஒப்பந்தத்தை வங்கதேசம் மேற்கொண்டுள்ளது. இதனால் இந்நாடுகளுக்கு வங்கதேசத்திலிருந்து கார்களை அசெம்பிள் செய்து அனுப்பமுடியும் என்கிறார் அகமது. ஒருவேளை இத்திட்டத்துக்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஒப்புக்கொண்டால் அதற்கென முதலீடு எதுவும் செய்யத் தேவையில்லை. அசெம்பிளி பிளாண்ட் அமைப்பதற்கான செலவு முழுவதையும் தங்கள் நிறுவனமே மேற்கொள்ளும் என்கிறார் அகமது.

டாடா நானோ கார் ஏற்றுமதி பெருமளவு சரிந்து விட்டது. தற்போது ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையான காலத்தில் 100 கார்கள்தான் ஏற்றுமதியாகியுள்ளன. இதேபோல உள்நாட்டிலும் நானோ கார் விற்பனை ஆண்டுக்காண்டு 66 சதவீதம் சரிந்து தற்போது ஆண்டுக்கு 1,312 கார்களே விற்பனையாகியுள்ளன.

இந்நிலையில் வங்கதேச நிறுவனத்தின் முடிவுக்கு டாடா மோட்டார்ஸ் ஒப்புதல் அளித்தால் டாடா நானோ இனி `மேட் இன் வங்கதேசமாக’ வெளிவரும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x