Published : 11 Sep 2017 11:08 AM
Last Updated : 11 Sep 2017 11:08 AM

முதலிடத்திலேயே மாருதி சுஸுகி தொடர்வது சாத்தியமா?

ந்தியா சுதந்திரமடைந்த பிறகு சாலைகளில் பெரும்பாலும் அம்பாசிடர் மற்றும் ஃபியட் கார்கள்தான் வலம் வந்தன. அடுத்து பெரும் செல்வந்தர்கள், சினிமா பிரபலங்கள் பிளைமவுத், ரோல்ஸ்ராய்ஸ் போன்ற இறக்குமதி செய்யப்பட்ட கார்களில் வலம் வந்தனர். இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது அவரது இரண்டாவது மகன் சஞ்சய் காந்தியின் தீவிர முயற்சியால் ஜப்பானின் சுஸுகி நிறுவனத்தின் கூட்டோடு 1982-ம் ஆண்டு இந்தியாவில் தொடங்கப்பட்டதுதான் மாருதி சுஸுகி ஆலை.

பெரும் செல்வந்தர்கள், சினிமா பிரபலங்கள் மட்டுமின்றி நடுத்தர மக்களுக்கும் கார் வாங்குவதை சாத்தியமாக்கியதும் மாருதிதான். அன்றிலிருந்து இன்று வரை கார் சந்தையில் தொடர்ந்து முதலிடத்திலேயே மாருதி சுஸுகி இருந்து வருகிறது.

மாருதி சுஸுகி களமிறங்கிய 10 ஆண்டுகளுக்குப் பிறகுதான் பிற வெளிநாட்டு நிறுவனங்களும் இந்தியச் சந்தையில் ஆலைகளைத் தொடங்கின. கொரியாவைச் சேர்ந்த ஹூண்டாய், அமெரிக்காவின் ஃபோர்டு, ஜப்பானின் நிசான், மிட்சுபிஷி என பல நிறுவனங்களும் இந்தியாவில் கார் உற்பத்தி செய்து விற்பனை செய்த போதிலும் முதலிடத்தை நெருங்கவே முடியவில்லை.

இரண்டாமிடத்தில் உள்ள ஹூண்டாய் நிறுவனத்தின் விற்பனைக்கும் மாருதி விற்பனைக்கும் இடையிலேயே மிகப் பெரும் வித்தியாசம் உள்ளது. மற்ற நிறுவனங்கள் ஒற்றை இலக்க அளவிலேயே சந்தையைப் பிடித்துள்ளன.

உள்நாட்டு நிறுவனங்களான டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்களாலும் மாருதியுடன் போட்டி போட முடியவில்லை என்பதுதான் யதார்த்தமான உண்மை.

அனைத்துக்கும் மேலாக மாருதி நிறுவனம் முதலிடத்திலேயே தொடர்வதில் பிற நிறுவனங்கள் செய்த சில தவறுகளும் அதற்கு உறுதுணையாக அமைந்துவிட்டன என்றே சொல்லலாம்.

கடந்த மே மாதம் அமெரிக்காவின் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் மேற்கொள்ளப் போவதாக இருந்த 100 கோடி டாலர் முதலீட்டை நிறுத்தியது. அத்துடன் மட்டுமின்றி இந்தியாவில் தனது தயாரிப்புகளின் விற்பனையை நிறுத்திக் கொள்வதாகவும் அறிவித்தது.

அடுத்ததாக கடந்த வாரம் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் டாடா மோட்டார்ஸுடன் கூட்டு சேர்வதாக இருந்த முடிவை ரத்து செய்வதாக அறிவித்தது. இதுபோன்ற முடிவுகளும் மாருதி நிறுவன தயாரிப்புகளின் விற்பனை உயர்வை மேலும் அதிகரிக்கவே செய்துள்ளது.

இந்தியா முழுவதும் தனது தயாரிப்புகள் கிடைக்கும் வகையில் விநியோகஸ்தர்களை நியமித்துள்ளதோடு, உதிரி பாகங்கள் தடையின்றி கிடைப்பதற்கான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது.

சமீபத்தில் மேல் தட்டு மக்களைக் கவர்வதற்காக நெக்ஸா எனும் பிரத்யேக விற்பனையகங்களை அனைத்து நகரங்களிலும் தொடங்கி வருகிறது. அனைத்துக்கும் மேலாக மாருதி என்ற பிராண்ட் மக்களின் மனதில் ஆழப்பதிந்துவிட்டதும் முக்கியக் காரணமாகும்.

ஹூண்டாய், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா ஆகிய மற்ற இரு நிறுவனங்களும் சேர்ந்து 23 சதவீதத்தை வைத்துள்ளன. ஆக 70 சதவீத கார் சந்தை இம்மூன்று நிறுவனங்கள் வசமே உள்ளன.

மாருதி நிறுவனத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணமே மற்ற நிறுவனத் தயாரிப்புகளின் மீதான பலத்தை விட அந்நிறுவனங்களின் பலவீனத்தை அறிந்து செயல்படுவதுதான்.

அமெரிக்காவில் ஃபோர்டு, ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனங்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தின ஒரு காலத்தில். ஆனால் ஜப்பானிய தயாரிப்புகள் அங்கு நுழைந்த பிறகு நிலைமை தலைகீழானது. பொருளின் விலையைக் குறைப்பதில்லை என்ற ஃபோர்டின் முடிவு ஜப்பானிய நிறுவனங்களுக்கு சாதகமாய் போனது. அந்நிறுவனத் தயாரிப்புகளின் விலையை விட குறைவாகவும் அதேசமயம் தரமானதாகவும் தங்கள் தயாரிப்புகளை அமெரிக்க சந்தையில் பட்டியலிட்டபோது, அமெரிக்க நிறுவனங்களின் தயாரிப்புகள் அடிவாங்கின.

இதேபோலத்தான் இங்கேயும் மாருதி நிறுவனம் அனைத்து தரப்பினருக்குமான தயாரிப்புகளை அளிக்கிறது. அந்நிறுவனம் இன்னமும் கோலோச்சாத ஒரே பிரிவு எஸ்யுவி மட்டும்தான். இப்பிரிவில் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா முன்னணியில் உள்ளது.

முதலிடத்தைப் பிடிப்பது எளிது. அதை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வது மிக மிக கடினம். ஆனால் அத்தகைய சவாலான பணியை தொடர்ந்து மேற்கொண்டு இந்திய சாலைகளின் ராஜாவாக கோலோச்சுகிறது மாருதி.

ஆனால் சமீபத்தில் பேட்டரி கார் விஷயத்தில் அந்நிறுவனத்தின் அணுகுமுறை மிகப் பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.

ஜப்பானின் டொயோடா நிறுவனமோ உத்திசார் அடிப்படையில் மாருதி நிறுவனத்தின் கூட்டாளியும் ஜப்பானிய நிறுவனமுமான சுஸுகியுடன் கூட்டு சேர்ந்துள்ளது.

பேட்டரி கார்களுக்குத் தேவையான லித்தியம் அயன் பேட்டரிகளைத் தயாரிப்பதில் இரு நிறுவனங்களும் இணைந்து செயல்படுவது என்பதுதான் ஒப்பந்தமாகும். இவ்விரு நிறுவனங்களும் இணைந்து 18 கோடி டாலர் முதலீட்டில் லித்தியம் அயன் பேட்டரி ஆலையை இந்தியாவில் தொடங்க உள்ளன. இவ்விரு நிறுவனங்களோடு மாஸ்டா மோட்டார் கார்ப்பரேஷனும் இணைந்துள்ளது.

பேட்டரி கார்களுக்கு அவ்வளவான எதிர்காலம் இருக்காது என்பது மாருதி சுஸுகி தலைவர் ஆர்சி பார்கவாவின் கருத்து. இதனால் இந்த பேட்டரி ஆலை உருவாக்கத்தில் அவர் அவ்வளவாக கவனம் செலுத்தவில்லை.

இதுதான் மாருதி செய்த தவறு. சமீபத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, 2030-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் பேட்டரி வாகனங்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்படும் என்றும் அதற்கான வழிவகைகளையும் அவர் வெளியிட்டார். இதைத் தொடர்ந்து பேட்டரி வாகனங்கள் இந்திய சாலைகளில் சாத்தியப்படுத்துவதற்கு என்னென்ன வழிகள் என்பதற்கான 134 பக்க பரிந்துரையை நிதி ஆயோக் அளித்துள்ளது.

பேட்டரி வாகன விஷயத்தில் மாருதி சுஸுகி பின்தங்கியது அந்நிறுவனத்தின் முதலிட அந்தஸ்தை தொடர்வதற்கு பின்னடைவாக அமையுமா என்பதற்கு காலம்தான் பதில் சொல்லவேண்டும்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x