Published : 04 Sep 2017 10:11 AM
Last Updated : 04 Sep 2017 10:11 AM

பேட்டரி லாரி: குமின்ஸ் சாதனை

பே

ட்டரி வாகனங்கள் என்றாலே அது விரைவாகச் செல்லாது, சைக்கிளில் செல்பவர்கூட முந்திச் செல்வர் என்றிருந்தது அந்தக் காலம். அதிவேக சூப்பர் காரை தயாரித்ததோடு மட்டுமின்றி பந்தய களத்தில் வெற்றிகளைச்சூடிய கார்களைத் தயாரித்து இத்தகைய தவறான அபிப்ராயத்துக்கு முற்றுப் புள்ளி வைத்தது டெஸ்லா நிறுவனம்.

இப்போது அதையும் தாண்டி சாதனை படைத்துள்ளது குமின்ஸ். கனரக வாகனங்களுக்கான இன்ஜின் தயாரிப்பில் முன்னணியில் உள்ள குமின்ஸ், தற்போது பேட்டரியில் இயங்கும் லாரியை வடிவமைத்து அனைவரது கவனத்தையும் தன் பக்கம் இழுத்துள்ளது.

டீசலில் இயங்கும் லாரிகளுக்கு உள்ள அதே இழுவைத் திறனோடு இப்புதிய லாரி உருவாக்கப்பட்டுள்ளதுதான் இதன் சிறப்பம்சமாகும்.

டிரெய்லர் வாகனங்களை இழுத்துச் செல்லும் கேபினைக் கொண்டதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் எடை 8,165 கிலோவாகும். இதில் 140 கிலோவாட் திறன் கொண்ட பேட்டரி உள்ளது. இதனால் 22 டன் எடை கொண்ட டிரெய்லரை இழுத்துச் செல்ல முடியும்.

தற்போது காட்சிப்படுத்துவதற்காக உருவாக்கியுள்ள இந்த டிரக்கை 2019-ம் ஆண்டில் புழக்கத்துக்கு விட இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதை ஒரு மணி நேரம் சார்ஜ் செய்தால் 160 கி.மீ தூரம் ஓடும்.

பேட்டரி சார்ஜ் செய்யும் திறனை அதிகரிக்கும் ஆராய்ச்சியில் இந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது. 2020-ம் ஆண்டுக்குள் 20 நிமிட நேரம் சார்ஜ் செய்தாலே 160 கி.மீ. தூரம் ஓடக் கூடிய அளவுக்கு திறன் கொண்ட வாகனங்களை உருவாக்க முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

டீசல் இன்ஜின் ஜெனரேட்டரை கொண்ட வாகனங்களைத் தயாரிக்கவும் இது திட்டமிட்டுள்ளது. இதனால் 50 சதவீதம் எரிபொருள் சிக்கனமாகும். டீசலில் இயங்கும்போது பேட்டரி சார்ஜ் ஆகி அதன் மூலம் 480 கி.மீ. தூரம் வரை ஓடச் செய்ய முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

சூப்பர் கார்களைத் தயாரித்து வரும் டெஸ்லா நிறுவனம் பேட்டரியில் ஓடும் டிரக்குகளை தயாரிக்கப் போவதாக அறிவித்திருந்தது. ஆனால் அந்நிறுவனத் தயாரிப்பு அறிமுகமாவதற்கு முன்பாகவே குமின்ஸ் டிரக் அறிமுகமாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x