Published : 28 Aug 2017 10:24 AM
Last Updated : 28 Aug 2017 10:24 AM

பேட்டரி கார் இலக்கை எட்டுவது சாத்தியமா?

சூ

ழல் பாதுகாப்பில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிக கவனம் செலுத்தப்படுவது என்னமோ உண்மைதான். ஆனால் அதை செயல்படுத்தும் விதத்தால் சூழல் பாதுகாப்பு இலக்கை எட்டுவது சாத்தியமா என்ற கேள்வி எழுகிறது. சமீபத்தில் மத்திய எரிசக்தி, நிலக்கரி மற்றும் புதுப்பிக்கத்தக்க மற்றும் மரபுசாரா எரிசக்தித்துறையின் அமைச்சர் பியுஷ் கோயல் வெளியிட்ட அறிவிப்பும் இத்தகைய சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

ஆம். 2030-ம் ஆண்டிலிருந்து இந்தியாவில் தயாராகும் அனைத்து வாகனங்களும் பேட்டரியில் இயங்குபவையாக இருக்கும் என்பதுதான் அது. என்இஎம்எம்பி எனப்படும் தேசிய மின்சார போக்குவரத்து திட்டத்தின் கீழ் அடுத்த மூன்று ஆண்டுகளில் ஆண்டுக்கு 50 லட்சம் முதல் 70 லட்சம் பேட்டரி வாகனங்களைத் தயாரிக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2030-ம் ஆண்டில் ஆண்டுக்கு 2 கோடியே 30 லட்சம் இரு சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் மற்றும் கார்கள் உள்ளிட்டவை தயாரிக்கப்பட வேண்டும். ஏற்கெனவே புழக்கத்தில் உள்ள பெட்ரோல், டீசல் கார்கள், மோட்டார் சைக்கிள்களுக்கு மாற்றாக இவை வர உள்ளன. ஆனால் இவற்றுக்காக தனியே சார்ஜிங் மையங்களுக்கான கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.

என்ன தேவை?

இந்த இலக்கை எட்ட அதிக அளவிலான பேட்டரி அவசியம். இப்போது சர்வதேச அளவில் உற்பத்தியாகும் பேட்டரியின் அளவை விட ஐந்து மடங்கு கூடுதலாக உற்பத்தியானால் மட்டுமே இது சாத்தியம். இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வதன் மூலம் மிகப் பெரும் எண்ணிக்கையிலானோருக்கு வேலை வாய்ப்பை அளிக்க முடியும்.

இதற்கு முன்பு கூட சர்வதேச அளவில் இதுபோன்ற பல வாய்ப்புகளை இந்தியா இழந்துள்ளது. குறிப்பாக சூரிய செல் உற்பத்தி, மின் பலகை மீது சுற்றப்படும் காகிதம் மற்றும் மின்னணு பொருள் உற்பத்தி உள்ளிட்டவற்றுக்கு அரசின் போதிய கொள்கை ஆதரவு இல்லாததால் இத்தகைய வாய்ப்புகளை இந்தியா இழந்தது. இதன் காரணமாகத்தான் இன்றளவும் மின்னணு பொருள்களை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதனாலேயே இதற்கான இறக்குமதி செலவும் ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கச்சா எண்ணெய், தங்கம் இவற்றுக்கு அடுத்தபடியாக அதிக அந்நியச் செலாவணியை மின்னணு பொருள் இறக்குமதிக்கு செலவிடுகிறோம். சர்வதேச அளவில் மின்சார வாகன பேட்டரிக்கான சந்தை 3,000 கோடி டாலரிலிருந்து 3,500 கோடி டாலர் வரை உள்ளது. இத்தகைய சூழலில் இந்தியா பேட்டரி வாகன உற்பத்திக்கு முழுக்க முழுக்க வெளிநாடுகளை மட்டுமே நம்பியிருப்பது இலக்கை எட்ட உதவாது.

பொதுவாக லித்தியம் அயன் பேட்டரிகள்தான் பேட்டரி வாகனங்களில் பயன்படுத்தப்படுகின்றன. லித்தியம் அயன் பேட்டரி தயாரிப்புக்குத் தேவையான முக்கிய கனிமங்கள் கோபால்ட், கிராபைட், லித்தியம் மற்றும் பாஸ்பேட்டாகும். இவற்றில் மிக முக்கியமானது லித்தியம் தாது ஆகும்.

உலகின் மொத்த லித்தியம் தேவையில் 95 சதவீதம் ஆர்ஜென்டீனா, ஆஸ்திரேலியா, சிலி, சீனா உள்ளிட்ட நாடுகள்தான் இருக்கின்றன. பெரும்பாலான நாடுகள் பேட்டரி வாகனங்களுக்கு மாறத் தொடங்கியதால் லித்தியம் பேட்டரியின் தேவை இரு மடங்காக உயர்ந்துள்ளது. இதனால் இதன் விலையும் இரு மடங்கு உயர்ந்துள்ளது.

2013-ம் ஆண்டு ஒரு டன் லித்தியத்தின் விலை 4,390 டாலராக இருந்தது. இப்போது இதன் விலை ஒரு டன் 9,100 டாலராக உயர்ந்துள்ளது. 2030-ம் ஆண்டில் அனைத்து வாகனங்களும் பேட்டரி வாகனமாக உருவாகும் பட்சத்தில் இந்தியாவின் தேவை 40 ஆயிரம் டன்னாக இருக்கும். தற்போது சர்வதேச அளவில் லித்தியம் உற்பத்தி 32 ஆயிரம் டன்னாகும். இந்தியாவின் தேவையைப் பூர்த்தி செய்யவும், சர்வதேச தேவையைப் பூர்த்தி செய்யவும் லித்தியம் தேவையை அதிகம் கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் உருவாகும்.

அமெரிக்கா, சீனா தீவிரம்

பேட்டரி வாகனங்களை செயல்படுத்தும் விஷயத்தில் அமெரிக்காவும் சீனாவும் தீவிரம் காட்டி வருகின்றன. லித்தியம் அதிகம் கையிருப்புள்ள இரண்டாவது பெரிய நாடாக சீனா திகழ்வது அதற்கு சாதகமான அம்சமாகும். அதேபோல சர்வதேச அளவில் லித்தியம் தாது அதிகம் உள்ள சுரங்கங்களைக் கைப்பற்றுவதிலும் சீனா முன்னணியில் உள்ளது. சீனாவின் டியான்குயி லித்தியம் நிறுவனம் ஆஸ்திரேலியாவில் உள்ள டாலிசன் லித்தியம் ஆலையில் அதிக அளவு பங்குகளை வைத்துள்ளது. இதேபோல இந்நிறுவனத்தின் பங்குதாரர்கள் சிலியில் உள்ள லித்தியம் ஆலையிலும் பங்குகளை வைத்துள்ளனர்.

இதேபோல அமெரிக்காவைச் சேர்ந்த லித்தியம் சுரங்க நிறுவனங்கள் சிலியில் உள்ள லித்தியம் சுரங்கங்களில் அதிக அளவு முதலீடு செய்துள்ளன.

ஆண்டுக்கு 5 லட்சம் பேட்டரி கார்களை தயாரிக்க இலக்கு நிர்ணயித்துள்ள டெஸ்லா நிறுவனம் லித்தியம் தட்டுப்பாட்டைக் குறைக்க ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளது. இந்நிறுவனம் அமெரிக்காவின் நெவடா பாலைவனத்தில் உள்ள அதிக திறன் மிகு கனிமங்களை பிரித்தெடுக்கும் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

லித்தியம் வளங்கள் அதிகம் உள்ள நாடுகளில் இந்தியா நீண்ட கால ஒப்பந்தம் செய்துள்ளது. குறிப்பாக லத்தீன் அமெரிக்க நாடுகளுடன் முன்னுரிமை வர்த்தக ஒப்பந்தம் (பிடிஏ) செய்துள்ளது. சமீபத்தில் லித்தியம் கார்பனேட் இறக்குமதிக்கு சிலி நாடு சில சலுகைகளை அளித்தது. இதேபோல பிற நாடுகளிலிருந்தும் இந்தியா லித்தியம் இறக்குமதிக்கான வாய்ப்புகளை ஆராய வேண்டியதும் அவசியமாகிறது. இவையெல்லாம் இந்தியாவுக்கு தடையின்றி லித்தியம் கிடைப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளாகத்தான் இருக்கும்.

ஊக்குவிப்பு நடவடிக்கைகள்

இப்போது உள்ள நடவடிக்கைகள் லித்தியம் தேவையைப் பூர்த்தி செய்யப் போதுமானதாக இருக்காது. ஆனால் அரசு சுரங்க நிறுவனங்கள் மற்றும் தனியார் சுரங்க நிறுவனங்கள் வெளிநாடுகளில் உள்ள லித்தியம் சுரங்க நிறுவனங்களில் முதலீடு செய்வதற்கு ஊக்குவிக்கப்பட வேண்டும்.

அதேசமயம் பேட்டரி தொடர்பான ஆராய்ச்சி நடவடிக்கைகளை ஊக்குவிக்க வேண்டும். தற்போது இந்திய பேட்டரி சந்தையானது பெரும்பாலும் ஈயம்-அமிலம் சார்ந்த தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய தயாரிப்பாகத்தான் உள்ளது. இதற்கு மாற்றாக கனிமங்களைக் கொண்டு பேட்டரி தயாரிக்கும் தொழில்நுட்பம் உருவாக்கப்பட வேண்டும். லித்தியம் பேட்டரிகளை மறுசுழற்சி செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலமும் லித்தியத்தை அதிகம் சார்ந்திருப்பதைக் குறைக்க முடியும்.

எரிபொருள் பாதுகாப்பு மட்டுமே பேட்டரி வாகனங்களின் வெற்றியை உறுதி செய்யும் என்று கோயல் வலியுறுத்தி வருகிறார். ஆனால் பேட்டரி வாகனங்களுக்கான முக்கிய கனிமம் லித்தியம்தான். இதற்கு இந்தியா பெரும்பாலும் வெளிநாடுகளை சார்ந்தே இருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. உள்நாட்டில் லித்தியம் கனிமங்களைக் கண்டறிய ஊக்குவிக்கும் கொள்கைகள் மட்டுமே பயனுள்ளதாக இருக்கும். உள்நாட்டில் லித்தியம் உற்பத்தியை ஊக்குவிக்கும் கொள்கைகள் மற்றும் லித்தியம் பேட்டரி மறுசுழற்சி நடவடிக்கைகள் தொடர வேண்டும். அதேசமயம் லித்தியத்துக்கு மாற்றான கனிமத்தைக் கண்டறிவதற்கான ஆராய்ச்சி தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும்.

மாசில்லாத சுற்றுச் சூழல் உருவாக்குவோம் என்பதற்காக எட்ட முடியாத இலக்கை நிர்ணயிப்பது, அதை நோக்கிய பயணத்தில் பாதியளவைக் கூட எட்ட முடியாமல் போய்விடும். மாறாக அதற்கு துணை புரியும் கொள்கை முடிவுகளை அரசு எடுத்தால் மட்டுமே இலக்குகள் சாத்தியமாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x