Published : 28 Aug 2017 10:23 AM
Last Updated : 28 Aug 2017 10:23 AM

அன்று கப்பல் கேப்டன், இன்று தொழிலதிபர்

வா

ழ்க்கைச் சக்கரம் எல்லோருக்கும் ஒரே மாதிரியாக அமைந்துவிடுவதில்லை. கால ஓட்டத்தில் கரைந்து போவோர் பலர். சிலருக்கு மட்டும் வித்தியாசமான சூழல் உருவாகி அவர்களை உயர்ந்த இடத்துக்கு இட்டுச் செல்கிறது. அந்த வகையில் இன்று தொழிலதிபராக உயர்ந்துள்ள அனில் கோயல், 30 ஆண்டுகளுக்கு முன்பு சரக்குக் கப்பலின் கேப்டன். இன்றோ ஆண்டுக்கு ஆயிரம் கோடி வருமானம் ஈட்டும் விற்பனையகங்களின் (டீலர்) உரிமையாளர்.

1980-களில் ஹீரோ மோட்டார் நிறுவனத்தின் நிறுவனர் பிரிஜ்மோகன்லால் முன்ஜாலை சந்தித்ததுதான் அனில் கோயலின் வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்தது.

1986-ம் ஆண்டு, தங்கள் நிறுவனத்தின் விற்பனையாளராக இருக்குமாறு பிரிஜ்மோகன்லால் முன்ஜால் அனில் கோயலைக் கேட்டுக் கொண்டார். காடு ஆறு மாதம், நாடு ஆறு மாதம் என கப்பலில் வாழ்க்கையைக் கழித்த அனில் கோயலும் இதை ஏற்று வடக்கு டெல்லியின் ஹீரோ ஹோண்டா மோட்டார் விற்பனையாளரானார். ஹிம்கிரி என்ற பெயரிலான இவரது விற்பனையகத்தில் முதல் மாதத்தில் 40 மோட்டார் சைக்கிள் விற்பனையானது. அடுத்த நான்கு ஆண்டுகளில் வட இந்தியாவில் முதன்மையான டீலராக உயர்ந்தார் அனில் கோயல்.

ஆட்டோமொபைல் துறையில் தனக்கு எதுவுமே தெரியாமல் நுழைந்து, வெறுமனே சரக்குக் கப்பலின் கேப்டனாக பணியாற்றியதில் கிடைத்த அனுபவத்தில் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ததால் இவரது விற்பனையகம் மீதான நம்பகத் தன்மை அதிகரித்தது. அடுத்த நான்கு ஆண்டுகளில் விற்பனையகங்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது. மாதம் 1,500 மோட்டார் சைக்கிள்களை விற்கும் விற்பனையகமாக அதாவது ஆண்டுக்கு 18,500 வாகனங்களை விற்பனை செய்பவையாக இவை உயர்ந்தன.

anil goel (2)கார் விற்பனையாளராக…

2004-ம் ஆண்டில் கார் விற்பனையாளராகும் வாய்ப்பை ஹூண்டாய் கதவைத் தட்டி இவருக்கு அளித்தது. டெல்லியில் ஹிம்கிரி ஹூண்டாய் விற்பனையகம் பிறந்தது. 2008-ம் ஆண்டில் இரண்டாவது ஹூண்டாய் விற்பனையகத்தை இவர் தொடங்க மாதத்துக்கு 4 ஆயிரம் கார்களை விற்பனை செய்யும் விற்பனையகமாக ஹிம்கிரி உயர்ந்தது.

2008-ம் ஆண்டில் அசோக் லேலண்ட் வாகன விற்பனையகத்துக்கு ஒப்பந்தம் போட்டார் அனில். மோட்டார் சைக்கிள், கார், வர்த்தக வாகனம் என மூன்று வெவ்வேறு பிரிவு வாகன விற்பனையாளராக சிறப்பாக செயல்படுவதன் காரணத்தைக் கேட்டபோது , `சரியான விலை, குறித்த காலத்தில் டெலிவரி, விற்பனைக்குப் பிறகு சிறப்பான சேவை இவைதான் தான் கடைப்பிடித்த விஷயங்கள்’ என்றார்.

இன்று இவரது ஆண்டு வருமானம் ரூ. ஆயிரம் கோடியைத் தாண்டியுள்ளது. கப்பல் கேப்டனாக தொடர்ந்திருந்தால் வாழ்க்கை இத்தனை வளமானதாக இருந்திருக்காது. இவரது வாழ்க்கையை மாற்றியதில் ஹீரோ மோட்டார் நிறுவனருக்கு மிகப் பெரிய பங்குண்டு என்றால் அது மிகையில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x