Published : 21 Aug 2017 11:18 AM
Last Updated : 21 Aug 2017 11:18 AM

பிரபலமான கார்கள்

ந்திய சாலைகளை இன்று அனைத்து நாடுகளின் கார்களும் ஆக்கிரமித்துள்ளன. இவை அனைத்துமே தாராளமயமாக்கலின் பலனாக வந்தவை. 2000-வது ஆண்டுகளுக்கு பின்னர் அதிக அளவில் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் ஆலை அமைத்ததும், இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் தளர்ந்ததும் வெளிநாட்டு கார்கள் பலவும் இந்தியச் சாலைகளில் உலா வருகின்றன. நாடு சுதந்திரமடைந்து 70 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. சுதந்திரத்துக்குப் பிறகு இந்திய சாலைகளில் கோலோச்சிய சில கார்களை பற்றிய சுவாரஸ்யமான தகவல்:

 

அம்பாசிடர்

ஆம்பி என்று அன்புடன் அழைக்கப்பட்ட இந்த அம்பாசிடர் 1958-ம் ஆண்டில் உற்பத்தியைத் தொடங்கியது. பெரும்பாலும் அரசு வாகனமாக இது இருந்தது. வாடகை வாகனமாக பல காலம் இது உருண்டோடியது. 2014-ல் இதன் உற்பத்தி நிறுத்தப்பட்டாலும், இந்த காரை பார்க்கும்போது, இவ்வளவு அருமையான கார் ஏன் நிறுத்தப்பட்டது என்ற கேள்வி பலருக்கும் தோன்றும். அம்பாசிடர் கார், மோரிஸ் ஆக்ஸ்போர்டு 3-வது மாடலாகும்.

இதை முதலில் மோரிஸ் மோட்டார்ஸ் லிமிடெட்தான் தயாரித்தது. அதன் பின்னரே ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் லிமிடெட் நிறுவனம் தயாரிக்கத் தொடங்கியது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பியூஜியாட் நிறுவனம் அம்பாசிடர் பிராண்டை வாங்கியுள்ளது. இந்நிறுவனம் அம்பாசிடர் காரை மீண்டும் தயாரிக்கப் போகிறதா அல்லது அந்தப் பெயரில் தனது நிறுவனத் தயாரிப்புகளை வெளியிடப் போகிறதா என்று இதுவரை அறிவிக்கவில்லை.

 

கான்டெஸா

ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் முதலில் உருவாக்கிய சொகுசு மாடல் கார் இதுவாகும். 1984-ம் ஆண்டு முதல் 2002-ம் ஆண்டு வரை இது புழக்கத்தில் இருந்தது. வாக்ஸால் விஎக்ஸ் மாடல் அடிப்படையில் இது தயாரிக்கப்பட்டது. பாலிவுட் நடிகர்கள் மற்றும் வில்லன்களின் அபிமான காராக இது விளங்கியது.

 

பிரீமியர் பத்மினி

Padmini100 

அம்பாசிடர் காருக்கு போட்டியாக சிறிய அளவில் தயாரிக்கப்பட்ட இந்த கார் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. 1973-ம் ஆண்டு முதல் 1998 வரை இது இந்திய சாலைகளில் கோலோச்சி வந்தது.

 

செவர்லே இம்பாலா

impala100 

ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு. செவர்லே கார் வைத்திருப்பது அந்தஸ்தின் அடையாளமாகத் திகழ்ந்தது. முன்னணி நடிகர்கள், தொழிலதிபர்களின் தேர்வாக இது இருந்தது. 1958 முதல் 1985 வரை இதன் ஆதிக்கம் இருந்தது.

 

மாருதி சுஸுகி 800

தாராளமயமாக்கலுக்கு முன்பாகவே ஜப்பானின் சுஸுகி நிறுவனத்துடன் மத்திய அரசு கூட்டு சேர்ந்து உருவாக்கிய மாருதி சுஸுகி 800 மாடல் கார் மிகவும் பிரபலம். சிறிய ரக ஹாட்ச்பேக் மாடலாக வந்த இந்த கார் 2014 வரை உற்பத்தி செய்யப்பட்டது. ஏறக்குறைய 30 ஆண்டுகளில் பல்வேறு மாற்றங்களுடன் இந்திய மக்களின் நம்பிக்கையைப் பெற்ற, நடுத்தர மக்களும் காரை வாங்க முடியும் என்ற நிலையை ஏற்படுத்தியது மாருதி சுஸுகி.

 

மாருதி சுஸுகி 1000 (எஸ்டீம்)

1990 மற்றும் 2000-வது ஆண்டுகளில் அதிக அளவில் தயாரான கார். இதற்கு காத்திருந்தோர் பட்டியல் மிக அதிகம். கம்ப்யூட்டர் முறையில் குலுக்கல் நடத்தப்பட்டு அதனடிப்படையில் வாடிக்கையாளர்களுக்கு கார்கள் வழங்கப்பட்டன. இந்த கால கட்டத்தில் இந்த காரின் விலை ரூ. 3.81 லட்சமாக இருந்தது. 1994-ல் இது மேம்படுத்தப்பட்ட மாடலாக 1.3 லிட்டர் இன்ஜினைக் கொண்டதாக எஸ்டீம் என்ற பெயரில் வெளிவந்தது.

 

மாருதி ஜிப்சி

1985-ல் நான்கு சக்கர சுழற்சி கொண்டதாக சாகச பயணத்துக்கென தயாரிக்கப்பட்டது. ராணுவத்துக்கும், காவல்துறையினரும் விரும்பி ஏற்ற வாகனமாக இது திகழ்ந்தது. இப்போது ராணுவத்துக்காக மட்டும் குறைந்த எண்ணிக்கையில் இது தயாரிக்கப்படுகிறது.

 

ஹூண்டாய் சான்ட்ரோ

santro100 

கொரிய நிறுவனம் இந்தியச் சந்தைக்காக தயாரித்த கார் சான்ட்ரோ. இது டால் பாய் என்றழைக்கப்பட்டது. இந்நிறுவனத்தை இந்தியச் சந்தையில் நிலை நிறுத்தியதும் இதுவே. இன்றளவும் கார் விற்பனையில் இரண்டாமிடத்தை தக்க வைத்துக் கொண்டிருப்பதில் சான்ட்ரோவின் வலுவான அஸ்திவாரமே காரணம். 2014-ம் ஆண்டு இந்தக் கார் உற்பத்தியை நிறுவனம் நிறுத்திவிட்டாலும், மீண்டும் இதை அறிமுகப்படுத்துவது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருகிறது. இதிலிருந்தே சான்ட்ரோ-வுக்கு உள்ள வரவேற்பை புரிந்துகொள்ள முடியும்.

 

மஹிந்திரா ஜீப்

சாகசப் பிரியர்களுக்கான வாகனம். காடு, மலை என கரடு முரடான சாலைகளில் பயணிக்க ஏற்றது. வில்லிஸ் ஜீப் நிறுவனத்தின் லைசென்ஸ் பெற்று இத்தகைய ஜீப்களை மஹிந்திரா அண்ட் மஹிந்திரா தயாரிக்கிறது. தற்போது தார் என்ற பெயரில் ஏசி வசதியுடன் அறிமுகப்படுத்தியுள்ளது.

 

டாடா சியாரா

கனரக வாகனங்களை மட்டுமே தயாரித்து வந்த டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 1991-ல் அறிமுகப்படுத்திய எஸ்யுவி வாகனம் டாடா சியாரா. இதையடுத்து டாடா எஸ்டேட் எனும் வாகனத்தை அறிமுகப்படுத்தியது. 1998-ல் இந்நிறுவனம் டாடா சஃபாரியை அறிமுகம் செய்தது. ஆனால் 1998 பிற்பாதியில் அறிமுகமான டாடா இண்டிகா கார் இந்நிறுவனத்தை பிரபலப்படுத்தியது.

சிறிய ரகக் கார் பிரிவில் சுற்றுலா பயண மேம்பாட்டாளர்கள், வாடகைக் கார் ஓட்டுநர்களின் தேர்வாக இது அமைந்துவிட்டது. 2008-ம் ஆண்டில் அறிமுகப்படுத்திய டாடா நானோ பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. குறைந்த விலை கார் என்பதாலேயே இதை பலரும் விரும்பவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x