Published : 21 Aug 2017 11:14 AM
Last Updated : 21 Aug 2017 11:14 AM

மழைக்காலம்: சில பயனுள்ள ஆலோசனைகள்

ருவ மழைக்காலம் தொடங்கி விட்டது. இந்த காலகட்டத்தில் வாகனங்களை ஓட்டுவது மிகவும் சிரமம். அதேசமயம் வாகனங்களை உரிய அளவில் பராமரித்து வைத்திருப்பதும் அவசியம். சமீபத்திய கணக்கெடுப்பில் மிக அதிக அளவிலான சாலை விபத்துகள் நிகழ்வதும் இத்தகைய மழைக்காலத்தில்தான் என்பது தெரியவந்துள்ளது.

மழை மற்றும் மனிதத் தவறுகளால் 77 சதவீத விபத்துகள் நிகழ்கின்றன. 2015-ம் ஆம் ஆண்டில் 5 லட்சம் சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இதில் 1.5 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 2.5 சதவீதம் அதிகமாகும். இதில் உயிரிழந்தவர்களில் 55 சதவீதம் பேர் 15 வயது முதல் 35 வயது வரையிலான பிரிவினர் என்பது அதிர்ச்சியளிக்கும் சோக செய்தியாகும்.

வேகமாகச் செல்வது மற்றும் சாலை பற்றிய தவறான கணிப்புகளும் விபத்துகளுக்குக் காரணமாய் அமைந்துள்ளன. மழைக்காலங்களில் திறமை மிகு வாகன ஓட்டிகளுக்குக் கூட வாகனங்களை ஓட்டுவது மிகவும் சவாலான விஷயமே. சாலைகளில் தேங்கியுள்ள மழை நீர் மற்றும் சாலைகளில் மழை காரணமாக ஏற்பட்டுள்ள பள்ளங்கள் காரணமாக விபத்துகள் ஏற்படுகின்றன.

சாலையில் உள்ள அறிவிப்புப் பலகைகள் சரிவர தெரியாமல் போவதும் வாகன ஓட்டிகளின் கணிப்புகளைப் பொய்யாக்கி விபத்துக்கு வித்திடுகிறது. இதனால் மழைக்காலங்களில் வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களில் குரூயிஸ் கண்ட்ரோல் எனும் வசதியை பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. குரூயிஸ் கண்ட்ரோல் முறையை தேர்வு செய்வதால் வாகனங்கள் வேகமாக செல்லும் இதுவும் விபத்துகளுக்குக் காரணமாகிறது.

விபத்து நடப்பதற்கு முன்பாக முன்னெச்சரிக்கையாக இருப்பதன் மூலம் அதைத் தவிர்த்துவிடலாம். வாகனங்களை எச்சரிக்கையோடு ஓட்டுவதோடு வாகனத்தை சரிவர பராமரித்து வைத்திருப்பது மிகவும் அவசியமாகிறது. கார்களின் முன்புற கண்ணாடி மற்றும் வைபர் எனும் மழை நீர் துடைப்பான் ஆகியவை சரிவர உள்ளனவா என்று பரிசோதித்துக் கொள்வது அவசியம். பெரும்பாலான விபத்துகளுக்கு கார்களின் டயர்களே காரணமாகிறது. இதனால் டயர்களை பரிசோதிப்பது மிகவும் அவசியம். தேய்ந்துபோன டயர்களை மாற்றிவிட வேண்டும். முகப்பு விளக்குகளின் ஒளி அளவை சோதிக்க வேண்டும். மழைக் காலங்களில் போதிய வெளிச்சமின்மையும் விபத்துகளுக்குக் காரணமாகிறது.

அனைத்துக்கும் மேலாக பேட்டரியை பரிசோதித்து தேவையெனில் பேட்டரி இணைப்பின் மீது பெட்ரோலியம் ஜெல்லியைப் பயன்படுத்தவும். மழை காரணமாக இணைப்புப் பகுதிகள் துருபிடிப்பதை இது தடுக்கும். அத்துடன் பேட்டரி செயலிழப்பைக் குறைக்கும்.

அனைத்துக்கும் மேலாக வாகனத்தின் மீது செய்யப்பட்ட காப்பீடு குறித்தும் கவனம் செலுத்தலாம். மழைக்காலத்துக்கென சில பாதிப்புகளைத் தவிர்க்க கூடுதல் காப்பீடு செய்வதும் அவசியம். மழைக்காலத்தை எதிர்கொள்வதோடு பாதுகாப்பான பயணத்துக்கு இதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளே உதவும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x