Published : 14 Aug 2017 11:13 AM
Last Updated : 14 Aug 2017 11:13 AM

புதிய கூட்டணி: பஜாஜ் – டிரையம்ப்

ஸ்

கூட்டர் உலகில் தன்னிகரில்லா தலைவனாக உலா வந்த நிறுவனம் பஜாஜ். இன்றளவும் பஜாஜ் என்றாலே ஸ்கூட்டர் ஞாபகம்தான் பலருக்கும் வரும். மோட்டார் சைக்கிள் தயாரிப்புக்காக கவாஸகி நிறுவனத்தோடு கூட்டு சேர்ந்து, அதுவும் நீண்ட காலம் நீடிக்காமல் போகவே, தன்னந்தனியாக இருசக்கர வாகன உலகில் தனது இடத்தைத் தக்க வைத்து வருகிறது பஜாஜ்.

பஜாஜ் என்ற பெயரில் இல்லாமல் ஒவ்வொரு தயாரிப்புக்கும் தனி பெயரிட்டு அந்த பிராண்டை பிரபலப்படுத்தும் நோக்கில் இந்நிறுவனம் மேற்கொண்ட முயற்சி பெருமளவு வெற்றி பெற்றுள்ளது.

‘பல்சர்’ ஒன்றே இந்நிறுவன பெயரை இன்று வரை காப்பாற்றி வருகிறது. அடுத்து குறைந்த வருவாய் பிரிவினருக்கான `பாக்ஸர்’ மற்றும் தற்போதைய வரவான `வி’ ஆகியன இந்நிறுவனத்தின் பிராண்டை பிரபலமாக்கும் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகும்.

சமீபகாலமாக ஆஸ்திரியாவைச் சேர்ந்த ஸ்போர்ட்ஸ் பைக் தயாரிப்பு நிறுவனமான கேடிஎம்- உடன் கூட்டு சேர்ந்து அந்நிறுவன மோட்டார் சைக்கிளை பஜாஜ் நிறுவனம் தனது விற்பனையகங்களில் விற்பனை செய்து வருகிறது. இது தவிர இவற்றுக்கு விற்பனைக்குப் பிந்தைய சேவையையும் அளித்து வருகிறது. தற்போது இந்த மோட்டார் சைக்கிள் இந்நிறுவன ஆலையிலேயே அசெம்பிள் செய்யப்படுகிறது.

தற்போது பஜாஜ் நிறுவனம் இங்கிலாந்தைச் சேர்ந்த டிரையம்ப் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது. குறைந்த விலையிலான மோட்டார் சைக்கிள் முதல் இளைஞர்களை ஈர்க்கும் பல்சர் வரையிலான மோட்டார் சைக்கிளை தயாரிக்கும் பஜாஜ் நிறுவனம், சாகச பிரியர்களுக்காக கேடிஎம் நிறுவனத்தோடு சேர்ந்து அந்நிறுவன தயாரிப்புகளை அளித்து வருகிறது. தற்போது பிரிட்டனின் டிரையம்ப் நிறுவனத்துடன் இணைந்துள்ளதன் மூலம் புணேயில் உள்ள சக்கன் ஆலையில் டிரையம்ப் மோட்டார் சைக்கிள் தயாராகும். இந்த ஆலையிலிருந்து பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் திட்டத்தை இரு நிறுவனங்களும் வைத்துள்ளன.

ஆலை திட்டம் ரத்து

ஓராண்டுக்கு முன்பே டிரையம்ப் நிறுவனம் இந்தியாவில் ஆலை அமைக்கத் திட்டமிட்டு கர்நாடக மாநிலத்தைத் தேர்வு செய்தது. ரூ. 850 கோடி முதலீடு செய்யப் போவதாக அறிவித்தது ஆனால் உரிய கூட்டாளி கிடைக்காமல் போகவே இத்திட்டத்தை இந்நிறுவனம் தள்ளிப்போட்டது. ஆனால் தற்போது பஜாஜ் நிறுவனத்துடன் இணைந்து அந்நிறுவன ஆலையில் தனது மோட்டார் சைக்கிளை தயாரிக்க டிரையம்ப் திட்டமிட்டுள்ளது. பஜாஜ்-கேடிஎம் நிறுவனங்களிடை ஒப்பந்தம் போலவே பஜாஜ்-டிரையம்ப் நிறுவனங்களின் ஒப்பந்தமும் இருக்கும்.

இந்தியாவில் டிரையம்ப்

இங்கிலாந்தைச் சேர்ந்த டிரையம்ப் நிறுவனம் 2013-ம் ஆண்டில் இந்தியாவுக்குள் நுழைந்தது. ஆரம்பத்தில் 500 சிசி-க்கும் குறைவான மோட்டார் சைக்கிளை தயாரிக்க திட்டமிட்டது. ஆனால் இந்தத் திட்டத்தை பாதியிலேயே கைவிட்டு விட்டது டிரையம்ப்.

இந்தியாவில் டிரையம்ப் நுழைந்த புதிதில் இந்தியச் சந்தைக்கான மாடல்களை தயாரிப்போம் என்றது. ஆனால் அதை ஒருகட்டத்தில் கைவிட்டது.டுகாடி மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான கேடிஎம் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டு அதை செயல்படுத்தி வருகையில் கடந்த 6 மாதங்களாக டிரையம்ப் நிறுவனத்துடன் பேச்சு நடத்தி வந்தது பஜாஜ். இறுதியாக கடந்த வாரம் இரு நிறுவனங்களும் கூட்டு சேர முடிவு செய்தன. இந்திய சாலைகளில் உயர் சிசி பிரிவில் 350 சிசி மற்றும் 500 சிசி பிரிவில் தனிக்காட்டு ராஜாவாக ராயல் என்பீல்டு தயாரிப்புகள் உள்ளன. இப்புதிய கூட்டணி 250 சிசி முதல் 500 சிசி வரையிலான மோட்டார் சைக்கிளை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. இவ்விரு நிறுவனங்களின் சேர்க்கை ராயல் என்பீல்டுக்கு நிச்சயம் சவாலாக இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x